சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

செங்கோட்டையன் பார்வை இதிலும் விழ வேண்டும்!

Updated : ஜன 06, 2019 | Added : ஜன 05, 2019 | கருத்துகள் (2)
Advertisement
செங்கோட்டையன் பார்வை இதிலும் விழ வேண்டும்!

வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழக பள்ளி கல்வித் துறையில், பல புரட்சிகர திட்டங்களை அமல்படுத்தி வருகிறார், அத்துறைக்கான அமைச்சர், செங்கோட்டையன். அதே போன்று, மாநிலம் முழுவதும், அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க, அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நுாறு மாணவர்கள் மட்டுமே, படிக்கக் கூடிய உயர்நிலைப் பள்ளிகளில், எட்டு ஆசிரியர்கள் வரை பணியாற்றி வருகின்றனர். பல உயர்நிலைப் பள்ளிகளில், ஒரு பாடத்துக்கே, இரண்டு அல்லது மூன்று பட்டதாரி ஆசிரியர் பணியாற்றும் அவலமும் உள்ளது. வடமாவட்டங்களில், பல பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறையும், தென்மாவட்டங்களில் உபரி ஆசிரியர்களும் பணி புரிகின்றனர். புதிதாக பணி நியமனத்தின் போது, வடமாவட்டங்களில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், சில மாதங்களில், தென்மாவட்டங்களுக்கு பணி மாற்றம் கேட்டு சென்று விடுகின்றனர். அதில் தான், பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. இடமாறுதலுக்காக, ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் தரப்பில், ஆண்டுக்கு பல கோடி ரூபாய், 'கை' மாறுகிறது. அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பிற்கு, 1:35 என்ற விகிதம், தொடக்கப் பள்ளிகளில், 1:30 என்ற விகிதத்தில், ஆசிரியர் - மாணவர்கள் இருக்க வேண்டும்; ஆனால், நடுநிலைப் பள்ளியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 20 மாணவர்கள் வரை படித்தாலும், நான்கு பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.முதுகலை பட்டதாரி, கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் காலி பணியிடங்கள், தொகுப்பூதிய அடிப்படையில் தற்போது நியமனம் செய்யப்படுகிறது. அவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, காலமுறை ஊதியம், நிரந்தர பணி அளிக்க வேண்டும். பள்ளி துவங்கும், ஜூன் முதல் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்கி, உபரி ஆசிரியர்களால் பணி நிரவல் செய்யப்பட வேண்டும்.நடுநிலைப் பள்ளியில், 6 முதல் 8 வகுப்பில், சொற்ப எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால், அருகில் உள்ள பள்ளியுடன் இணைக்கலாம் அல்லது, அந்த பள்ளிக்கு, தொகுப்பூதிய அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாம். இந்த விஷயங்களில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கவனம் செலுத்த வேண்டும்!
காமாட்சி அம்மன் தங்க சிலை ஒரிஜினலா?
வி.வி.சுவாமிநாதன், தமிழக முன்னாள் அமைச்சர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: எம்.ஜி.ஆர்., தலைமையிலான, அ.தி.மு.க., ஆட்சியில், 1986 - 87ல், அறநிலையத் துறை அமைச்சராக இருந்தேன். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய சோழப் பேரரசன் ராஜராஜன் சிலை களவு போனது குறித்து, காஞ்சி சங்கர மடம் சார்பில், என்னிடம் தெரிவிக்கப்பட்டது.அத்துடன், தஞ்சையில் ஒப்படைக்கப்பட்ட, காஞ்சி காமாட்சி அம்மன் சிலை குறித்த தகவலும் கூறப்பட்டது. 'தஞ்சை பங்காரு ஸ்வர்ண காமாட்சி' என, அப்போது ஆண்ட தெலுங்கு மன்னர் எழுதி வைத்துள்ளதாகவும், சங்கரமட நிர்வாகிகள் கூறினர். தஞ்சையில் உள்ள, பங்காரு ஸ்வர்ண காமாட்சி அம்மன் மூலவர் சிலை, துாய தங்கத்தால் செய்யப்பட்டது; அது, தஞ்சை பங்காரு காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது அல்ல! பல்லவர், சோழர் கால தலைநகராக, காஞ்சிபுரம் இருந்தபோது, ஒரே ஒரு அபூர்வ காஞ்சி காமாட்சி அம்மன் சிலை இருந்தது. பகைவர்கள் படையெடுப்புக்கு பயந்து, சங்கர மட நிர்வாகிகள், இரவோடு இரவாக, வண்டியில் மறைத்து வைத்து, தஞ்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். தஞ்சையை ஆண்ட, மராட்டியர் வசம் சிலை ஒப்படைக்கப்பட்டது. பின், அமைதி திரும்பியவுடன், சங்கர மடத்து நிர்வாகிகள், சிலையை திருப்பி கேட்டனர். அப்போது, தஞ்சையை ஆண்ட மன்னன், காஞ்சிக்கு சிலையை எடுத்து செல்ல அனுமதி மறுத்து விட்டார். 'தஞ்சையில் உள்ள பங்காரு காமாட்சி அம்மன் சிலையை சோதித்து, அது ஒரிஜினல் தங்கமா என்பதை கண்டறிய வேண்டும்' என, அறநிலைத்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. 'சிலை ஒரிஜினலா என்பதை ஆராய வேண்டும். அத்துடன், சிலையின் எடை, மதிப்பு, படங்களை, அரசு ஆவணப்படுத்த வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆய்வு நடத்த, இந்து அறநிலையத் துறை இணை ஆணையருக்கு, தமிழக முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அறநிலையத் துறை ஆணையர், தஞ்சை மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,க்கு முன்னிலையில், அதற்கான ஆய்வு பணி துவக்க வேண்டும்.தஞ்சை பங்காரு காமாட்சி சிலை ஒரிஜினல் என கண்டறிந்தவுடன், காஞ்சிபுரம் சங்கர மடம் கொண்டு சேர்க்க வேண்டும்!

ஒரே நிலைப்பாட்டில் இருங்கள் சங்கத்தினரே!
பா.குழந்தைவேல், திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: தமிழகம் முழுவதும், பல துறையினர் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து, பல்வேறு போராட்டங்களை, அதுவும் காலவரையற்ற போராட்டங்களை நடத்துகினறனர். தமிழகத்தில், 'கஜா' புயல் நிவாரணம், 20தொகுதிகளின் இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் மற்றும் எதிர்வரும் லோக்சபா தேர்தல் என, அரசின் முழு கவனம் வேறு திசையில் இருக்க, கிராம நிர்வாக அலுவலர் சங்கங்கள் போராட்டத்தைத் தொடர்கின்றன. இவர்களின் போராட்டத்தை, தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாததை பார்த்தால், பரிதாபமாக உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவியை பின்னோக்கி பார்த்தால், ௧௯௪௭ முதல் ஒவ்வொரு கிராமத்துக்கும், கிராம கணக்காளர், கிராம முன்சீப், கிராம மாஜிஸ்திரேட் என, பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டனர்.எம்.ஜி.ஆர்., தமிழகத்தில் முதல் முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது, பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட இவர்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர் என்று பொறுப்பை வழங்கினார். இவர்களில் பலரும், அ.தி.மு.க., விசுவாசிகளாக இருந்து வந்ததை, அனைவரும் அறிவர்.கிராம நிர்வாக அலுவலர் சங்கம் உருவானது. பின் அது, இரண்டாக உடைந்து, முன்னேற்றம் சங்கம் உருவானது. இரண்டு சங்கங்களையும் பேச்சுக்கு அரசு அழைத்தபோது, உடன்பாடு ஏற்பட்டதாக, முன்னேற்ற சங்கம், பணிக்கு திரும்பி விட்டது; மற்றொரு சங்கம், தொடர் போராட்டம் நடத்துகிறது. எந்த ஆட்சி வந்தாலும், ஒரு நிலையாக இருந்தால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் என்பதையும், எதிர்க்கட்சியினரும் கண்டுகொள்வர் என்பதையும், போராட்டக்காரர்கள் உணர வேண்டும்; இல்லையேல், தற்போதைய கதி தான் ஏற்படும்.
தந்திரத்துடன் இறங்கினால் அ.தி.மு.க., தப்பும்!
என்.சாணக்கியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கூடா நட்பு கேடாக முடியும்' என்ற சொலவடை, அன்று முதல், இன்று வரை, அரசியல்வாதிகளின் வாழ்விலும் சரியாக தான் நடந்து வருகிறது. அன்று, வருமான வரி பிரச்னையில், எம்.ஜி.ஆர்., தலைமையிலான, அ.தி.மு.க., சிக்கி இருந்தது. அதிலிருந்து தப்பிக்க முடியாமல் தத்தளித்த போது, அப்போதைய பிரதமர், மொரார்ஜி தேசாய் மிரட்டல் விடுத்தார். அதற்கு அஞ்சி, ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலில், எம்.ஜி.ஆர்., தலைமையிலான, அ.தி.மு.க., போட்டியிட்டு, இரண்டு இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது; அத்துடன், ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்து கொண்டார், எம்.ஜி.ஆர்., கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, ஆட்சியை பிடிக்காமல் போனதால், கருணாநிதி மிகவும் சோர்ந்து, படுத்த படுக்கையாகி விட்டார். வயது முதிர்வால், அவர் அவதியுற்றாலும், தோல்வியால் மனமுடைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.சசிகலாவுடன் வைத்த கூடா நட்பால், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, சிறை சென்றார், ஜெயலலிதா. இருப்பினும், துணிச்சலுடன் வழக்கை எதிர் கொண்டு, மீண்டும், முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், யாருடனுன் கூட்டணி அமைக்காமல், 37 எம்.பி.,க்களை பெற்று, தேசிய கட்சிகளை அலற வைத்தார். உடல் நலம் குன்றி, ஜெயலலிதா மறைந்து விட்டார். அவர் மரணத்திலும் மர்மம் நீடிப்பது தான் வேதனையாக உள்ளது. ஜெயலலிதா காட்டிய வழியில் பயணம் செய்வதாக, முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார். 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., - பா.ம.க., - தா.மா.க., - புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து, அ.தி.மு.க., போட்டியிட வாய்ப்பு உள்ளது என, கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி கூட்டணி அமைந்தால், தி.மு.க., கூட்டணிக்கு சமமான அணி என கூறலாம். ஜெயலலிதாவை போன்று, 'தனித்து போட்டியிடுவோம்' எனக் கூறி, இன்று, அ.தி.மு.க., களம் இறங்கினால், அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவ நேரிடும். கூட்டணி விஷயத்தில், தந்திரம் தான் வெல்லும் என்பதை, பழனிசாமி - பன்னீர் அன் கோ புரிந்து கொண்டால் நல்லது!
முதுகலை படிப்பை அரசு பணியுடன் ஒப்பிடாதீர்!
தி.சேஷாத்ரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'அரசு பணிக்கு லாயக்கற்ற, ௩௩ முதுநிலை படிப்புகள்' என்ற தலைப்பில், நாளிதழில் செய்தி வெளியானது; இது, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது! வேலைக்கு செல்ல லாயக்கற்ற படிப்புகள் என, அரசே கருதினால், சென்னை, அழகப்பா, பாரதியார், பாரதிதாசன், அண்ணாமலை, மனோன்மணியம், அவிநாசிலிங்கம் போன்ற பல்கலைகளில் நடத்தப்படும், இப்பாடங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்.தொலை துாரக் கல்வியில், லட்சக்கணக்கான ஏழைகள் படிக்கின்றனர். அதில், முறைகேடு இன்றி பார்த்து கொள்வது, அரசின் கடமை. கற்றலை, அரசும், நீதிமன்றமும் ஊக்குவிக்கும்வகையில், தொலைதுார கல்வியை அங்கீகரிக்க வேண்டும். கல்வியில் மோசடி பேர் வழிகள் உருவாகாமல் தடுக்க, சிறந்த பல்கலைகள் மற்றும் அரசின் நேரடி கண்காணிப்பில் பாடத் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழக படிப்பில் சேர்ந்த இளைஞர்களுக்கு, வேந்தர், கவர்னர் உதவ வேண்டும். தொலை துார கல்வி, படிப்பு சான்றிதழை, அரசு மற்றும் தனியார் வேலைகளில் அங்கீகரிக்க, அரசு உத்தரவிட வேண்டும். சென்னையில் பல மோசடி பேர்வழிகள், கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, போலி சான்றிதழ்கள் வழங்குகின்றன. 'டியூஷன் சென்டர்' என்ற போர்வையில் சிலர், மக்களை ஏமாற்றுவது, வெளிநாட்டுக்கு நல்ல சம்பளத்தில், ஐ.டி., கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பல லட்சங்களை கொள்ளையடிக்கின்றனர்.பாதிக்கப்பட்டோர், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால், 'எனக்கு பல உயர் காவல் அதிகாரிகளிடம் பழக்கம் உள்ளது' எனக் கூறி, உயர் காவல் அதிகாரிகளுக்கு உற்சாக பானம் வழங்கும் போட்டோவை காட்டி மிரட்டுகின்றனர் என்ற செய்திகளும் நாளிதழில் வந்துள்ளது.தமிழக அமைச்சருடன் போட்டோ எடுத்து, அதை காட்டி, சில கும்பல் மிரட்டியுள்ளனர் என செய்தி வந்துள்ளது. ஒரு படிப்பில் சேர்ந்து, அதை முடித்த பின், 'அந்த படிப்பு, வேலைக்கு செல்லத்தக்கது அல்ல' என, அரசே கூறியதால், தொலைதுார கல்வி திட்டத்தில் பயில்வோர், பல்கலையில் பயில்வோர் அச்சமடைந்துள்ளனர். எந்த படிப்புடனும், வேலையை ஒப்பிடாமல், கல்வித் தரத்தை மேம்படுத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்க, பல்கலைகள் முயற்சிக்க வேண்டும்!

முதியோர் என்றால் அலட்சியமா?
எல்.ஆல்தொரை, கோவையிலிருந்து எழுதுகிறார்:நான் தேசிய வங்கியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்று, ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன; தற்போது, ௬௬ வயதாகும் மூத்த குடிமகன் நான்.டிச., ௨௮ம் தேதி, என்னுடைய இரண்டு பதிவு தபால்களை அனுப்ப, நரசிம்ம நாயக்கன் பாளையம் தபால் அலுவலகத்திற்கு சென்றேன்; ஒரு பெண் ஊழியர் மட்டும் இருந்தார்.அவரை அணுகியபோது, என் பதிவு தபால்களை வாங்க மறுத்து விட்டார். அதற்கு அவர், 'இரண்டு கவுன்டர் வேலைகளையும், என்னால் செய்ய முடியாது, அருகில் உள்ள வேறு தபால் நிலையத்துக்கு செல்லுங்கள்' என, தயவு தாட்சண்யமின்றி கூறினார்.நான் பலமுறை கெஞ்சியும், அவர், 'யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடுங்கள். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை' என்று கூறியதோடு நில்லாமல், என் பதிவு தபால்களை வாங்கவும் மறுத்து விட்டார். அதன் பின், மிகவும் அவசரமான தபால் என்பதால், வேறு தபால் அலுவலகத்திற்குச் சென்று, என் வேலையை முடித்தேன். இதனால் எனக்கு, ஒரு மணி நேரம் காலதாமதமும், பேருந்து செலவும், மன உளைச்சலும் ஏற்பட்டது. அந்த பெண் ஊழியர் மனது வைத்திருந்தால், என் பதிவு தபால்களை வாங்கியிருக்கலாம். மூத்த குடிமகன்களை கண்டால், இளக்காரம் செய்யக் கூடாது. என்னைப் போன்ற பலருக்கும், இதே நிலை தான் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இதை விட மோசமான சூழ்நிலை, வேறு எந்த இந்திய குடிமகனுக்கும் ஏற்படக் கூடாது என்பதே, என்னுடைய விருப்பம். இந்த மாதிரி நிலைமை, யாருக்கும் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு, தபால் துறையிடம் கேட்டுக் கொள்கிறேன்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
06-ஜன-201908:23:08 IST Report Abuse
Bhaskaran இன்னமுமா தங்க சிலை இருக்க போகிறது ஐம்பொன் சிலைகளே கடத்தி விற்கப்படும்போது தங்கசிலையை இதுநாள்வரை எப்படி விட்டு வைப்பார்களா
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-ஜன-201908:20:51 IST Report Abuse
Bhaskaran அரசு அலுவலகங்கள் வங்கிகள் முதலியவற்றில் பணிபுரிபவர்கள் முதியோர்களை இந்தக்காலத்தில் மரியாதையாக நடத்தினார்கள் avargalukku முதுமை ஒருநாள் வந்தே தீரும் என்னும் உண்மை தெரிந்தும் இப்படி இருப்பது மனவருத்தமாக உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X