சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள மூன்று முக்கியமான தீர்ப்புகள் மக்கள் மனதில் பல குழப்பங்களை விளைவித்து பதிலளிக்க முடியாத பல கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
நீதிமன்ற தீர்ப்புகளை விமரிசிப்பது என்பது உசிதமல்ல. அதனால் இந்த தீர்ப்புகளை விமரிசிப்பதை விட்டு விட்டு, இந்த தீர்ப்புகளால் சமூகத்தில் என்னென்ன விளைவுகள் நிகழும் என்று அலசி ஆராய்வது சமூக அக்கறையுள்ள பொதுமக்கள் அனைவருடைய தார்மீக கடமையாகும்.
முதலாவது தீர்ப்பு:
ஓரின சேர்க்கை என்பது சட்டப்படி தவறல்ல. அதாவது ஓரின சேர்க்கையை சட்டத்தின் மூலம் தடுப்பது தனிப்பட்டவருடைய உரிமையை பறிப்பதாகும் என்பதும் அதனால் சட்டம் அதற்கு பாதுகாப்பு அளிக்கிறது என்பதுதான் சாராம்சம்.
ஓரின சேர்க்கை என்பது ஐந்தறிவு கொண்ட விலங்கினஙகளில்கூட இல்லை என்பதும், பரிணாம வளர்ச்சி கண்டு ஆறாவது அறிவையும் பெற்ற மனிதன் இதில் ஈடுபடுவது - மனிதன் தன்னைத்தானே விலங்களினங்களுக்கும் கீழான நிலைக்கு கொண்டு செல்கிறான் என்பதும் விளங்கும். இதனால் ஓர் அவலமான சமூக சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறான் என்பது தான் உண்மை. இதில் 'தனிமனித உரிமை' என்பது எல்லாம் தவறுகளையெல்லாம் நியாயப்படுத்துகிற வெறும் பசப்பு வார்த்தைகள் தாம். ஆனால் இந்த தீர்ப்பு இது காறும் சட்டத்திற்கு புறம்பானது என்று கருதப்பட்ட ஒரு செயலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்திருக்கிறது.
இரண்டாவது தீர்ப்பு:
கணவன் மனைவி உறவைத்தவிர வெளியே யாருடனும் உறவு கொள்வது என்பது தனிமனித உரிமை. அதை சட்டத்தின் மூலம் தடுக்கக்கூடாது என்பது தான். இந்த தீர்ப்பும் இதுநாள் வரை குற்றம் என்று கருதப்பட்ட ஒரு சமூக சீர்கேட்டுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது. பகுத்தறிவு பகலவன்கள் என்று கூறி பசப்பி திரியும் பலருக்கு இது மிகவும் உவப்பான செய்திதான். ஆனால் சமூக அக்கறை கொண்ட பெரும்பான்மை மக்களை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இனி கட்டுக்கேப்பான குடும்பங்கள் என்ற நிலை இருக்குமா என்ற கவலையில் மக்களை ஆழ்த்தியிருக்கிறது.
பகுத்தறிவு என்ற போர்வையில் இருந்து கொண்டு சமூகத்தில் இருந்து வரும் நியாயமான கட்டமைப்புகள், கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் போன்றவற்றை தகர்த்தெறிந்து மனிதர்களை எந்த கட்டுப்பாடும் அற்ற விலங்குகள் போன்ற வாழ்க்கையை வாழச் செய்வதுதான் அவர்களுடைய நோக்கம். இதற்காக முதலில் அவர்கள் கையில் எடுத்திருப்பது 'பெண்ணுரிமை' என்பது. பெண் விடுதலை, பெண்ணியம், பெண்ணுக்கு சம அந்தஸ்து போன்ற பகட்டு வார்த்தைகளை பிரயோகித்து, மக்களை, குறிப்பாக பெண்களை தங்கள் இலக்கு நோக்கி இழுக்க முயற்சிப்பது தான் அவர்கள் எண்ணம்.
குடும்பக் கட்டமைப்பு
முதலாவதாக குடும்பம் என்ற கட்டுக்கோப்பான அமைப்பின் மீதே அவர்களுக்கு எள்ளளவும் உடன்பாடு இல்லை. கணவன் - மனைவி என்கிற திருமண பந்தம் பெண்ணை அடிமைப்படுத்துகிறது. தாலிகட்டுவதன் மூலம் பெண்ணடிமைத்தனம் தொடர்கிறது. ஆகவே தாலிகட்டாமல், திருமணம் என்ற பந்தம் இல்லாமல், வேறு எந்த சாட்சியும், பொறுப்புகளும் இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது என்றும், எப்போது அந்த உறவு பிடிக்கவில்லையோ, ஒத்து வரவில்லையோ அப்போது பிரிந்து விடுவது என்பதுதான் அவரகள் வகுத்தமுறை. இதில் அவர்கள் தனிமனித ஒழுக்கத்தை உதறி எறிந்து விட்டு ஆடை உடுத்திய விலங்கு வாழ்க்கை தானே வாழ்கிறார்கள். குடும்பம், அன்பு, பாசம், பிணைப்பு, நேசம், கடமை என்று எந்தவிதமான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளாத வாழ்க்கைதானே அவர்கள் நினைப்பது. ஆக குடும்பம் என்பதே ஒரு அடிமைத்தளை என்பது அவர்கள் சித்தாந்தம்.
ஒருவனுக்கு ஒருத்தி
உலகமே போற்றி வியந்து நோக்கும் நம் குடும்பம் என்ற கட்டமைப்பு மூலம் பெண் அடிமைப்படுத்தப் படுகிறாள் என்பது அவர்கள் வாதம். ஆனால் மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் உச்சமான குடும்பம் என்ற கட்டமைப்பும், ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற உயரிய பண்பும், பிறன் மனை நோக்கா பேராண்மையும் தானே பெரிதாக போற்றப்படுகிறது. ஆணாதிக்க சமூகத்தின் அடிமை விலங்குதான் திருமணம் என்று மேடையில் வாதிக்கிற பலர் மேடையை விட்டு இறங்கி சென்ற பின் தங்கள் அருமையான அமைதியான 'குடும்ப வாழ்கையை' சுமுகமாக நடத்திக் கொண்டு தானிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. 'நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்' என்று சொன்ன கவிஞர் கண்ணதாசனின் வரிகளை எல்லாரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்த பகுத்தறிவு ஜீவிகள் உட்பட. ஆனால் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள அவர்கள் மனதும், அகந்தையும் இடம் கொடுப்பதில்லை.
தனித்தனி கடமைகள்
நம் சமூகத்தில் குடும்பத்தலைவன், குடும்பத்தலைவி, குழந்தைகள் என்றும் அதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்பதுதான் குடும்பத்தின் அடிப்படை தத்துவம். இதை மேற்கொண்டு சிறப்பாக செயல்படும் குடும்பமே தெய்வீகமானது. நம் பாரம்பரியம் பெண்களை குடும்பத்தில் மிக உயர்வான இடத்தில் வைத்து கொண்டாடுகிறது. பெண்கள் குடும்பத்தை காக்கும் தேவதைகள் எனவே போற்றப்பட்டு வருகின்றனர். பெரும்பான்மையான பெண்கள் மிக மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் குடும்பத் தலைவி என்ற பொறுப்பை ஏற்று நடக்கின்றனர். அடிப்படைவாதிகள், பெண்ணியவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் பலருடைய குடும்பங்களில் உள்ள பெண்களே, அவர்கள் போதிக்கின்ற எந்த கட்டுப்பாடுமற்ற வாழ்க்கை முறையை அங்கீகரிக்கவில்லை. என் பாதையும் அவர்கள் அறிவர். ஆகவே இந்த தீர்ப்பும் ஒரு கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பை சிதைக்கும் விதமான விளைவுகளை ஏற்படுத்தும்.
மூன்றாவது தீர்ப்பு:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எல்லா வயதிலுமுள்ள பெண்களும் போகலாம். 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களை அனுமதிக்காதது பெண்ணுரிமைக்கு எதிரானது என்பதுதான்.
இந்த தீர்ப்புக்கு காரணமான பொது நல வழக்குகளை தொடுத்தவர்கள் சில பெண்ணியவாதிகளும், பகுத்தறிவுவாதிகளும். அதில் இரண்டு பேர் முக்கியமானவர்கள்...
1. நவ்ஷத் அகமத்கான் என்ற இளைஞர். இவர் இளம் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.
இந்த ஒரு விஷயமே இந்த வழக்கு அடிப்படையிலேயே தவறான வழக்கு என்று தெரிவிக்கிறது. ஒரு மதத்தின் கோட்பாடுகள் மற்றும் நியமங்களில் வேற்றுமதத்தைச் சார்ந்த ஒருவர் மூக்கை நுழைத்து அதில் தவறு கண்டுபிடிப்பதும், அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதும் நியாயமற்ற தவறான அணுகுமுறை.
2. திருப்தி தேசாய் என்ற இளம்பெண். மஹாராஷ்ட்ர மாநிலத்தில் 'பும்தா பிரிகேட்' என்ற இடது சாரி அமைப்பை நடத்தும் அதன் தலைவர். இவருக்கு கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடைமுறை விதிகள் குறித்து எதுவுமே தெரியாத நிலையில் பெண்கள் கோயிலுக்கு செல்ல தடைவிதிக்கும் பாலின பாகுபாடு கூடாது என்று வழக்கு தொடுத்திருந்தார். இங்கே 'பாலின பாகுபாடு இலலை. எல்லா வயது பெண்களும் செல்வதற்குத்தான் தடை' என்ற உண்மை மறைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வந்த உடன் கேரள முதல்வர். பினராயி விஜயன் - சீபத்தில் கேரளாவை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டு பெருத்த பேரழிவை ஏற்படுத்திய பிரளயத்தையும், அது தொடர்பான பெரிய புனரமைப்பு பணிகளையும் கூட மறந்து விட்டு இந்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த முயற்சிக்கிறார்.
பாரபட்சமான நடவடிக்கை
சென்ற ஜூலை மாதம் கேரளாவில் ஒரு சர்ச் யாருக்கு சொந்தம் என்று இரண்டு பிரிவினருக்குள் தகராறு வந்தது. 'சிரியன் ஆர்தடாக்ஸ்' மற்றும் 'ஜாக்கபைட்' என்ற இரு பிரிவும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று 'ஆர்த்தாடாக்ஸ்' பக்கம் தீர்ப்பானது. ஆனால் 'ஜாக்கபைட்' பிரிவு ஒருலட்சம் பேரை திரட்டி ஒரு பேரணி நடத்தி காட்டியது. அப்போது கேரள அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்தியே தீருவோம் என்று மார்தட்டவில்லை. மாறாக, இது ஒரு உணர்ச்சிபூர்வமான விஷயம், எந்த தரப்பும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். உடனே அமல்படுத்தினால் பலர் தற்கொலை செய்து கொள்ள கூடும். ஆகவே சமயம் கொடுங்கள்; இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்க்கிறோம் என்று அவகாசம் கேட்டது.
ஆனால் இந்த சபரிமலை தீர்ப்பு விஷயத்தில் மாநில அரசு நடந்துகொண்ட விதம் முற்றிலும் மாறுபட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பாக இருந்தாலும், பெரும்பான்மையான மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நாடு தழுவிய எதிர்ப்பு எழுந்தபோகே மாநில அரசு விழித்துக் கொள்ளவில்லை. என்று நாடு தழுவிய எதிர்ப்பு எழுந்தபோதே மாநில அரசு விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். தீர்ப்பை அமல்படுத்த சற்று அவகாசமும் கேட்டு பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமான உடன்பாடு எட்ட தேவையான நடவடிக்கைகள் எடுத்திருக்கவேண்டும். ஆனால் என்ன காரணத்தினாலோ இறை நம்பிக்கையே இல்லாத கம்யூனிஸ்கள் குறிப்பாக முதல்வர் பினராயி விஜயன் இதை அமல்படுத்த காட்டும் வேகம் அதிர்ச்சி அளிக்கிறது. ஏதோ உள் நோக்கம் கொண்டதாக தோன்றுகிறது.
அனுமதி மறுப்பதேன்
ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை பெண்களை அனுமதிக்காததற்கு சாஸ்திர ரீதியாக, விஞ்ஞான ரீதியாக மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல காரணங்கள் உண்டு.
* 48 நாட்கள் கடுமையான விரதமிருந்து பின்னர் இருமுடி கட்டி கோயிலுக்கு செல்ல வேண்டும். உடல் ரீதியாக பெண்களுக்கு இது சாத்தியமில்லை. மருத்துவரீதியாக ஹார்மோன்களின் அளவு சற்று ஏறுமாறாக இருக்கிற நேரஙகளில் பல உடல் உபாதைகள் ஏற்படலாம்.
* மலையில் உள்ள காட்டுப்பாதையில் பயணம் என்பது மிகவும் கடுமையானது. இயற்கையிலேயே மென்மையான உடல்வாகு படைத்த பெண்களுக்கு அதை தாங்குவது கடினம்.
* ஆண்டுதோறும் 4 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். அதன் காரணமாக சந்நிதானத்திலும், வழியெங்கும் ஏற்படும் கூட்ட நெரிசல் தவிர்க்க முடியாதது. இத்தகைய நெரிசலான சூழ்நிலையில் தரிசனம் செய்வது பெண்களுக்கு அவ்வளவு சுலபமல்ல.
* மலையின் மீது பயணம் செய்யும்போது பாதுகாப்பு மற்றும் சுய செளரியங்கள் போன்றவற்றில் மிகுந்த குறைபாடுகளை சந்திக்க நேரிடும்.
நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான ஐயப்பன் கோயில்கள் உள்ளன.அவற்றில் பெண்கள் அவர்களுக்கு செளகரியமான நாட்களில் சென்று வழிபட எந்த தடையுமில்லை. ஆனால் சபரிமலையில் அமர்ந்திரக்கும் ஐயப்பனை தரிசிக்க மிக கண்டிப்பான விதிமுறைகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக அவை நடைமுறையில் உள்ளன. அவற்றை கடைபிடித்தே தீரவேண்டும். கோயில்களில் விதிமுறைகள் யாருக்காகவும் தளர்த்தப்படுவதில்லை; தளர்த்தப்படவும் கூடாது. ஆகவே இந்த பெண்ணியவாதிகள் 'சபரிமலையில் எல்லா பெண்களுக்கும் தரிசனம்' என்ற விஷயத்தை தங்கள் போராட்டத்திற்கு எடுத்துக் கொண்டதே தவறு. எந்த இந்து பெண்ணும் சபரிமலைக்கு போயே ஆகவேண்டும் என்று கேட்கவோ அடம் பிடிக்கவோ இல்லை. யாரும் அத்தகைய மனநிலையிலும் இல்லை. மாறாக எதிர்க்கிறார்கள். பல லட்சம் பெண்கள் நாடு முழுவதும் பேரணிகள் நடத்தி தங்கள் எதிர்ப்பை பல வழிகளில் பதிவு செய்திருக்கிறார்கள்.
மும்பையை சேர்ந்த பத்மா என்ற பெண்மணி இதற்காக 'காத்திருக்க தயார்' என்ற பொருள்படும் 'ரெடி டுவெய்ட்' என்ற செய்து, ஐயப்ப தரிசனத்திற்காக 50 வயது வரை காத்திருக்க தயார் என்ற அமைப்பை முன்னெடுத்து செய்கிறார்.
மத சுதந்திரம்
இந்துக்கள் எப்போதும் தங்கள் மதசுதந்திரத்தை தெளிவாக அறிந்து அனுபவித்து வருகிறார்கள். இறை நம்பிக்கை உண்டாயின் சரி; இல்லையயினும் சரி; கோயிலுக்கு சென்று வழிபட்டாலும் சரி; இல்லையென்றாலும் சரி; ஒன்றும் குற்றமாக கருதப்படுவதில்லை. நீதிமானாக, நேர்மையானவனாக, பிறர்க்கு தீங்கு செய்யாதவனாக வாழ்வதே தெய்வ நம்பிக்கை என்ற பரந்த சித்தாந்தம் தான் அடித்தளம் என்று இந்துமதம் போதிக்கின்றது. மதரீதியாக எந்த கட்டாயங்களும் அவர்கள் மீது திணிக்கப்படுவதில்லை.
பெண்களை இந்து மதம் என்றும் உதாசீனப்படுத்தியதில்லை. பெண்களைத் தாயாக கருதி, கண்ணியம் மிக்க குடும்பத் தலைவியாக பெருமையோடு நடத்துகிறது. இது குறித்து எந்த இந்துப் பெண்ணும் குறைபட்டுக் கொள்ளவில்லை. நம் முன்னோர்கள் பெண்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் எல்லாம் அவர்களது பாதுகாப்பு குறித்த அக்கறையினால்தான் என்பதும், அவர்களை அடிமைப்படுத்துவதற்கு அல்ல என்பதையும் அவர்கள் அறிவார்கள். இந்து மதத்தில்தான் இறைவன் தன்னில் சரிபாதியை பெண்மைக்கு அளித்து, "அர்த்தநாரீஸ்வரர்” என்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். நம் நாட்டில் குடும்பங்கள் கட்டுக்கோப்பாக இயங்கி வருவதே பெண்களின் திறமையான, பொறுமையான, அன்பான அணுகுமுறையினால்தான். மேலை நாடுகளைப் போலல்லாமல் அன்பால் பிணைக்கப்பட்டவை நம் குடும்பங்கள். சின்னச் சின்ன சலசலப்புகளால் அவை அசைந்து கொடுப்பதில்லை. மேலை நாட்டினரே போற்றி வணங்கும் நம் பாரம்பரியமே நம் குடும்ப அமைப்புதான்.
பெண்ணியவாதிகளின் தாக்கம்
பெண் உரிமை, பெண்ணியம், பெண்கள் சம உரிமை என்று கூறி நம் பெண்களைத் தவறாக வழி நடத்தும் பெண்ணியவாதிகளின் தாக்கத்தால் இன்று பல குடும்பங்கள் சிதறுண்டு, நிலைகுலைந்து போவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். தங்களின் நளினம், பொறுமை, அன்பு, தியாகம் போன்ற நற்குண்ங்களையெல்லாம் உதறிவிட்டு, ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் என்று சொல்வதில் எந்த பெருமையுமில்லை. குடும்பங்கள் இன்று சிதறுண்டு போகாமல் நிலைத்து நிற்பது பெண்களால்தான் என்று சொல்லியே பெண்களை அடிமைப் படுத்தி விடுகிறார்கள் என்று கூக்குரலிடும் பெண்ணியவாதிகள் ஓர் அடிப்படை உண்மையை மறந்து விடுகிறார்கள். எந்த ஒரு ஆணும் ஒரு அன்னையிடமிருந்து வந்தவன் தான் - வானத்திலிருந்து குதித்தவன் அல்ல என்பதும், ஓர் நல்ல அன்னையால் வளர்க்கப்பட்ட ஆண்மகன் எந்தவொரு பெண்ணையும் இழிவாக நடத்துவதில்லை என்பதும்தான் அந்த உண்மை. இதை பெரும்பான்மையான தாய்மார்களும் பெண்களும் மறுக்க மாட்டார்கள். பொய்மையான பெண்ணியவதிகள் வேண்டுமென்றால் வாதத்திற்காக மறுக்கலாம்.
உள் நோக்கம் அம்பலம்
சபரிமலையில் பெண்களை வயது வித்தியாசமின்றி அனுமதிக்க வேண்டுமென்று வழக்கு தொடுத்த திருப்தி தேசாய் என்ற அந்த மகராஷ்டிராவைச் சேர்ந்த இளம்பெண் 17ம் தேதி சபரிமலை நடை திறக்கும்போது நான் தரிசனத்திற்கு வருவேன் என்று அறிவித்துவிட்டு, மேலும் 6 பெண்களை அழைத்துக் கொண்டு கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அங்கு ஏற்பட்ட தீவிர எதிர்ப்பு காரணமாக காவல்துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பினர். கொச்சி விமான நிலையத்தில் அவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து புலால் உணவு உட்கொண்ட காட்சி வீடியோவாக சமூக வலைத் தளங்களில் பரவியது. இது ஒன்றே அவர்களுடைய நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்துகிறது.
பொதுவாகவே கேரளத்தில் கோயில்களில் பக்தர்கள் யாராக இருந்தாலும் அங்குள்ள விதிமுறைகளை கடைப்பிடித்தால்தான் தரிசனம் செய்ய முடியும். அங்கு யாருக்கும் எந்த வித பாகுபாடும் காண்பிக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு: பல வருடங்களுக்கு முன் அப்போதைய ஜனாதிபதி ஆர்.வெங்கட் ராமன், குருவாயூர் கோயில் தரிசனத்திற்கு சென்றார். மேல் சட்டையில்லாமல், வேஷ்டி அணிந்துதான் உள்ளே செல்ல வேண்டும் என்ற விதியை அனுசரித்து தரிசனம் செய்ய தயாரானார். ஆனால் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அதை அனுமதிக்கவில்லை. ஆகவே அவர் வாசலின் வெளியே நின்றபடி தரிசனம் செய்து விட்டு திரும்பினார். அவருக்காக விதி தளர்த்தப்படவில்லை. அது போலவே யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய மனிதராக கருதப்பட்டாலும், 48 நாள் விரதமிருந்து, இருமுடி கட்டிச் சென்றால் மட்டுமே, 18 படி ஏறி, சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க இயலும் என்பது விதி. அது யாருக்காகவும் தளர்த்தப்படுவதில்லை. 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதும் தளர்த்தப்பட முடியாத விதி.
அப்படிப்பட்ட ஒரு புண்ணிய தலத்தில், விளம்பர மாடலாக பணிபுரியும் ரெஹ்னா பாத்திமா என்ற ஒரு முஸ்லிம் பெண், ஸ்வீட்டி மேரி என்ற ஒரு கிறிஸ்துவ பெண், மேலும் ஒரு நாத்திக போராளி பெண் ஆகிய மூவரும் திட்டமிட்டு சபரிமலை பக்தர்களின் நம்பிக்கையையும், அந்த ஆலயத்தின் சாந்நித்தியத்தையும் குலைப்பதற்காகவே மலை ஏற்கின்றனர். அதில் ஒரு பெண் சனிட்டரி நாப்கின்களுடன் இருமுடி கட்டிக் கொண்டதாக அறிவிப்பு செய்தார். பின்னர் அந்த பெண் அநாகரிகமான ஆடைகளுடன், மது புட்டியுடன் இருப்பது போன்ற படம் ஊடகங்களில் வெளியாயிற்று. ஆகவே இந்த வேற்று மத பெண்களுக்கும் ஐயப்ப தரிசனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் நோக்கமும் அது அல்ல. அந்த ஆசாரங்களையும், நம்பிக்கைகளையும் கொச்சைப் படுத்தி சிதைப்பதுதான் என்று தெளிவாக தெரிகிறது.
ஆனால் மாநில அரசோ அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பௌஅளித்து, வனத்துறையின் சீருடையையும் அணிவித்து, தலைக்கு ஹெல்மெட்டும் அணிவித்து ஐயப்ப தரிசனத்திற்கு அனுப்பி வைக்கிறது. ஐயப்ப பகதர்களின் தீவிர எதிர்ப்பால் அவர்கள் 18 படி ஏறி கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அரசுக்கு ஏன் இவ்வளவு அக்கறை
ஐயப்பனுக்கு சம்பந்தமே இல்லாத ரெஹ்னா பாத்திமா, ஸ்வீட்டி மேரி போன்ற பெயர்களைக் கேட்ட உடனேயே, உங்களுக்கும் ஐயப்பனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டிருக்க வேண்டாமா? போலீஸ் பந்தோபஸ்துடன் சபரிமலைக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் என்ன? இதையெல்லாம் தொடர்ந்து அங்கு தேவையில்லாமல் 144 தடை உத்தரவு பிறப்பித்து, பத்தாயிரம் போலீஸ் படையை அனுப்பி வைத்து, பக்தர்களுக்கு பெரும் இடையூறு விளைவித்து, பக்தர்களைத் தேவையின்றி கைது செய்து அவர்களைத் தீவிரவாதிகள் போல் நடத்துவது மிகவும் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.
ஒரே ஒரு சம்யோசிதமான, புத்திசாலித்தனமான அறிக்கை மூலம் பினராயி விஜயன் அரசு சுலபமாக, நியாயமாக இந்த குழ்ப்பங்களை எல்லாம் தவிர்த்திருக்க முடியும். அதாவது, "பெரும்பான்மையான மக்கள் இந்த தீர்ப்பு அமலாக்கப்படுவதை விரும்பவில்லை; ஆகவே மக்கள் சார்பாக இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய இந்த அரசு மனு தாக்கல் செய்ய விரும்புகிறது; அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று அறிவித்திருக்கலாம். அது அரசுக்கும், பினராயி விஜயனுக்கும் பெருமையையும், மதிப்பையும் தேடித் தந்திருக்கும். இப்போது புலி மேல் சவாரி என்ற நிலை ஆகி விட்டது. பினராயி விஜயனும் மற்றும் கம்யூனிஸ்ட்களும் மீண்டும் எப்போதும் தலை தூக்க இயலாத அதல பாதாளத்தில் வீழ்ச்சியடைய போகிறார்கள் என்பது சர்வ நிச்சயம்.
தனி மனித சுதந்திரம், பெண்ணுரைமை என்ற பெயரில் தனி மனித ஒழுக்கத்தையும், சமூக நல்லொழுக்கங்களையும் காவு வாங்கியாயிற்று. இனி என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வி மட்டுமே தொக்கி நிற்கிறது.
டாக்டர் எஸ்.ஏகநாதபிள்ளை, முன்னாள் பேராசிரியர், மதுரை மருத்துவ கல்லூரி.
98421 68136