பெங்களூரு: வன அதிகாரிகளின் கை,கால்களை வெட்டுவேன் என காங்., எம்.எல்.ஏ., பேசிய பேச்சால் கர்நாடக மாநில அரசியிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பத்ராவதி தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.கே. சங்கமேஸ்வரா. இவரது தொகுதிகுட்பட்ட பத்ராவதி வனப்பகுதிக்குள் அப்பகுதி கிராம மக்கள் கோயில் கட்ட விரும்பினர். தொடர்ந்து கோயில் நிர்மாணத்திற்கு தேவையான கற்களை உட்பட பல்வேறு பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு வந்தனர்.
வனப்பகுதிக்குள் கோயில் கட்ட அனுமதி கிடையாது என வனத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தங்களது தொகுதி எம்.எல்.ஏ.,வான சங்கமேஷ்வரை சந்தித்து முறையிட்டனர். இதனையடுத்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசிய எம்.எல்.ஏ. சங்கமேஷ்வர் ,யாரும் இங்கே கட்டுமானத்தை எதிர்க்க கூடாது. அப்படி செய்தால் நான் அவர்களின் கை கால்களை வெட்டுவேன் உங்களுக்கு நான் சொல்லும் நல்ல வார்த்தைகள் புரியும் என்று நினைக்கிறேன் எனஅன்பான முறையில் போனில் மிரட்டி உள்ளார்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மஜத பிரமுகர் கொலை சம்பவத்தில் மாநில முதல்வர் குமாரசாமி நடந்து கொண்ட விதம் மாநில அரசியலில் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். சர்ச்சையை ஏற்படுத்திய எம்.எல்.ஏ.,மீது காங்கிரஸ் கட்சி கட்சி சார்பில் எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.