சிட்னி: சிட்னியில் நடந்த 4வது டெஸ்டின் 5ம் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. இதனையடுத்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 622/7 ('டிக்ளேர்'), ஆஸ்திரேலியா 300 ரன்கள் எடுத்தன. ஆஸ்திரேலிய அணிக்கு 'பாலோ-ஆன்' வழங்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட நான்காம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது.
இன்றைய 5ம் நாள் ஆட்டம் மழையால் முழுமையாக ரத்தானது. இதனையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. தவிர, ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய புதிய வரலாறு படைத்தது இந்தியா. இதற்கு முன், 11 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்ற இந்தியா, 8 முறை தொடரை இழந்தது. மூன்று முறை தொடரை 'டிரா' செய்திருந்தது.