விருத்தாசலம்: ஏ.சித்துார் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் 93 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கக் கோரி, விருத்தாசலத்தில் கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு 2016 - 17 மற்றும் 17 - 18ம் ஆண்டுகளுக்கான மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரைய தொகையை ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெற்றுத் தர வேண்டும். 23 மாதங்களாகியும் 1966 கரும்பு கட்டுப்பாடு சட்டத்தின் படி, கரும்பு வழங்கிய 14 நாட்களுக்குள் வழங்கவில்லை. எனவே, அந்த தொகைக்கு 15 சதவீத வட்டி வழங்க வேண்டும். 5 ஆண்டுகளாகியும் அரசு மற்றும் ஆலை நிர்வாகம் அறிவித்துள்ள கரும்பு பாக்கி தொகை 93 கோடியே 46 லட்சத்து 63 ஆயிரத்து 875 ரூபாயை உடன் வழங்க வேண்டும்.விவசாயிகளை ஏமாற்றி ஆலை நிர்வாகம் 40 கோடி ரூபாய் முறைகேடாக கடன் பெற்று, நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் வந்துள்ளதால், விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், பாலக்கரை அம்மா உணவகம் முன் நேற்று காலை 10:30 மணியளவில், போராட்டம் துவங்கியது. மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமை தாங்கினார். மாநில செயலர் சக்திவேல், நிர்வாகிகள் அண்ணாதுரை, வேல்முருகன், கவியரசன், பாலகிருஷ்ணன், பன்னீர், ராஜா உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது, ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகையை வழங்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்.எத்தனை நாட்களானாலும், இங்கேயே காத்திருப்போம் என விவசாயிகள் தெரிவித்து இரவும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE