தைபே: சீனாவுக்கு தொழில் ரகசியங்களை விற்றதாக 6 பொறியாளர்களை தைவான் அரசு கைது செய்தது.தைவான் தலைநகர் தைபேயில் ஜெர்மனின் கெமிக்கல் நிறுவனமான பி.ஏ.எஸ்.எப். உள்ளது. இதேதொழிலில் சீனாவின் ஜிங்குவா மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் உள்ளது. இரு நிறுவனங்களுக்கும் இடையே கடும் தொழில் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் பி.ஏ.எஸ்.எப். நிறுவன தயாரிப்புகள், தொழில்நுட்பங்களை சீன நிறுவனம் பயன்படுத்துவது தெரியவந்தது. இதற்கான ரகசியங்கள் தைபேயில் உள்ள நிறுவனத்தில் இருந்து கசிந்திருப்பது உறுதியானது.இதையடுத்து தைவானின் குற்ற விசாரணை அமைப்பு சி.ஐ.பி. ரகசிய விசாரணை நடத்தியது. இதில் பி.ஏ.எஸ்.எப். நிறுவனத்தின் ரகசியங்களை 4 பொறியாளர்கள், 2 இயக்குநர் நிலையிலான அதிகாரிகள் சீன நிறுவனத்திற்கு விற்றது தெரியவந்தது.அவர்களை கைது செய்த சி.ஐ.பி. அதிகாரிகள் கூறியது: 114 மில்லியன் டாலர் மதிப்பிலான ரகசியங்களை இவர்கள் விற்றுள்ளனர். ஆனால் அதி முக்கிய ரகசியத்தை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அதற்குள் பிடிபட்டுவிட்டனர், என்றனர். பி.ஏ.எஸ்.எப். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், விசாரணை அமைப்புகளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.உண்மையாகும் குற்றச்சாட்டுகள்கடந்த அக்டோபரில் தைவானின் மைக்ரோன் நிறுவனத்திடமிருந்து ரகசியங்களை பெற்றதாக சீனா மீது அமெரிக்க குற்றம்சாட்டியது. 5 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் சீனா மீது டிரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சீனா அறிவுச்சுரண்டலில் ஈடுபட்டுள்ளது. பிற நாட்டு தொழில்நுட்பங்களை முறைகேடான வழிகளில் பெற்று தங்கள் தொழில்நுட்பமாக்கி விற்கிறது. சர்வதேச காப்புரிமை விதிகளை காலில்போட்டு மிதிக்கிறது. எனவே சீன பொருட்களுக்கு கூடுதல் வரியை விதிக்கிறோம். சீனா தன்னை மாற்றிக்கொள்ளாவிடில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என கூறி வருகிறார்.அவரது குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக மறுத்துவரும் நிலையில் தைவானில் தொழில் ரகசியங்களை வாங்கிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது டிரம்பின் குற்றச்சாட்டை உண்மையாக்கும் விதத்தில் உள்ளதால், சீனாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.