சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

'குடி'யுடன் கொண்டாடுவோம் பொங்கலை!

Added : ஜன 09, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'குடி'யுடன் கொண்டாடுவோம் பொங்கலை!


'குடி'யுடன் கொண்டாடுவோம் பொங்கலை!

என்.சாணக்கியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்த ஆண்டு, 'பொங்கல் பரிசு' என, அரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரியோடு, ரொக்கமாக, 1,000 ரூபாயும், அரசு தந்து வருகிறது. அரிசி கார்டுகள், சர்க்கரை கார்டுகள், வெறும் கார்டுகள் என்ற பேதம் இல்லாமல், அனைவருக்கும் பொங்கல் பரிசு அறிவிப்பை வெளியிட்டது, தமிழக அரசு!

இந்த அறிவிப்பால், ரேஷன் கார்டு வைத்திருப்போர் அனைவரும், மகிழ்ச்சியுடன், ரேஷன் கடைகளை நோக்கி படையெடுத்தனர். நான்கு நாட்களில், பெரும்பான்மையான கார்டுதாரர்கள் பணம், இலவச பொருட்களை வாங்கி விட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'அரிசி கார்டுகளுக்கு மட்டும், இலவச பொருட்களுடன், 1,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை, அரசின் இலவச பொருட்களையும், 1,000 ரூபாய் ரொக்கத்தையும் வாங்காத ரேஷன் கார்டுதாரர்கள், செம கடுப்பாகி உள்ளனர்.

ஜெ., முதல்வராக இருந்தபோது, அரிசி கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே, பொங்கல் பரிசு பெறும் பாக்கியவான்களாக இருந்தனர். முதல்வர் பழனிசாமி, எதையும் அள்ளிக் கொடுக்கும் கர்ணனாக, நம் கண்களுக்கு காட்சி அளிக்கிறார். 'கூடவே, லோக்சபா தேர்தலும், நம் கண் முன் நிழலாட மறக்கவில்லை' என்று சிலர், வியாக்கியானம் பேசலாம்.அது பற்றியெல்லாம், முதல்வர் அலட்டிக் கொள்ள மாட்டார். 'இந்த உலகம், நாம் வாழ்ந்தாலும் பேசும்; தாழ்ந்தாலும் பேசும்!' என்று சிந்திக்கும் ரகம் அவர்.

'குடி'மகன்கள், சந்தோஷமாக பொங்கலைக் கொண்டாடட்டும் என்று, 'அள்ளி'விட்டிருக்கிறார். தமிழகத்தில் எப்படியும், 2.6 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருக்கலாம். அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் என்ற வகையில், 100 ரூபாயும், ரொக்கமாக, 1,000 ரூபாயும் ஆக, மொத்தம், 1,100 ரூபாய் ஒரு கார்டுக்குச் செலவாகலாம். எல்லாவற்றுக்குமாக சேர்த்து, 2,600 கோடி ரூபாய்க்கு மேல், அரசுக்கு செலவாகலாம்.

'கஜா' புயல் நிவாரணச் செலவு செய்யவே, போதிய பணம் இல்லாதபோது, இவ்வளவு தொகையை எப்படி சமாளிக்கப் போகின்றனர் என்று, யாரும் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். கொடுக்கப் போகும் பணத்தில் முக்கால்வாசி, டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு திரும்பக் கிடைத்து விடும். ஆக, 'குடி'யும், குடித்தனமுமாகக் கொண்டாடலாம் பொங்கலை!

---


மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும்!

சொ.பீமன், விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: 'துவக்கப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைத்து, ஒரே பள்ளியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக் கல்வித் துறை பரிசீலித்து வருவதாக செய்தி வெளியானது; இது வரவேற்கத்தக்கது. அரசு ஆரம்ப பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை பயின்று, மேல்நிலைப் பள்ளிகளில், ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் கல்வித் தரம், திருப்திகரமாக இல்லை.

அவர்களால், தமிழில் கூட, நான்கு வரிகளை சரளமாக வாசிக்க முடியவில்லை. ஆரம்பக் கல்வி மிகவும் தரமாக இருந்தால் தான், உயர் கல்வியில், மாணவர்களின் திறமை வெளிப்படும். ஐந்தாம் வகுப்பு முடித்து வரும் மாணவர்களை, நான்கு ஆண்டுகளில், ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார்படுத்துவது மிகவும் கடினம். அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தோல்வி அடைகின்றனர்.

இதை யாரும் சுட்டிக்காட்டினால், தலைமை ஆசிரியர்கள், 'ஆரம்பக் கல்வி தரமானதாக இல்லை. எங்களால், நான்கு ஆண்டுகளில், ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, மாணவர்களை தயார்படுத்துவதில் மிகுந்த சிரமம் உள்ளது' என்கின்றனர். துவக்கப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க, எதிர்ப்பு தெரிவித்து, சில ஆசிரியர் சங்கங்கள், தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அதில்,'ஒன்று முதல், பிளஸ் ௨ வரையான வகுப்புகளை, ஒரே தலைமை ஆசிரியர் கவனிப்பது சிரமம்; பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ மாணவர்கள் பாதிக்கப்படுவர்' என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது; இது, ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

அரசுப் பள்ளிகளில் அதிக கல்வித் தகுதியுள்ள, தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஆற்றலால், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை, நன்கு தயார்படுத்த முடியும். இது, ௧௦ம் வகுப்பு, பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ பொதுத் தேர்வுக்கு அவர்களை தயார்படுத்த உதவிகரமாக இருக்கும். பள்ளிக்கல்வித் துறை திட்டத்தை, பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் மற்றும் பொதுமக்களும் ஏற்க வேண்டும். இது, மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கும் என்பதில் சந்தேகமில்லை!

---


போராட்டத்தில் மாணிக்கவேல் வெற்றி பெறுவாரா?

மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்கவேலுக்கு எதிராக, போலீசாரை அடுத்து, அறநிலையத் துறை அதிகாரிகள் சிலரும் புகார் கொடுத்துள்ளனர். இதை உற்று நோக்கினால், 'குற்றவாளிகள் ஒன்று சேர்ந்து விட்டனர்; உத்தமர் எல்லாம் பலிகடா ஆக்கப்பட உள்ளனர்' என்பது புரியும்!

மாநில அரசின் ஆதரவும் கிடையாது. அறநிலைய துறையினரின் ஒத்துழைப்பு இன்றி, தனக்கு ஒதுக்கப்பட்ட போலீசாரை வைத்து, பொன் மாணிக்கவேல், சிலைகள் மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஆனால், அவரை அந்த பணியில் இருந்து விரட்டியடிக்க, அனைத்து வகையிலும் தொந்தரவுகள் தரப்படுகின்றன.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கும்பலாகச் சென்று, டி.ஜி.பி., அலுவலகத்தில், பொன் மாணிக்கவேலுக்கு எதிராக புகார் கொடுத்தனர். பின், மீடியாக்களை சந்தித்து, அவருக்கு எதிராக, சேற்றை வாரி இறைத்தனர்.

கோவில்களில், சிலைகள் திருடு போன போது, அலறாத அறநிலையத்துறை, இன்று பொன் மாணிக்கவேலை கண்டு ஏன் அலற வேண்டும்? எனவே, சிலை கடத்தல் வழக்கு விசாரணை சுதந்திரமாக நடக்க வேண்டும். உச்சி முதல் உள்ளங்கால் வரை, பொன் மாணிக்கவேலை குற்றவாளிகள் சூழ்ந்து விட்டனர். சிறப்பு அதிகாரி என்ற அந்தஸ்தில் இருந்து அவரை நீக்கினால் தான், தப்பிக்க முடியும் என, கயவர்கள் ஒன்று சேர்ந்து விட்டனர். அதன் விளைவாக தான், பொன் மாணிக்கவேலுக்கு எதிராக புகார்கள் கொடுக்கப்படுகின்றன.

உண்மையான, சுதந்திரமான விசாரணை நடந்தால், சிலை கடத்தல் வழக்குகளில், அறநிலைத்துறையில் உலாவும் திமிங்கிலங்கள் சிக்கும்! நீதிமன்றத்தை முழுக்க நம்பி, பொன் மாணிக்கவேல், விசாரணையை நடத்தி வருகிறார். தனி மனிதனாக போராடி, சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் வெற்றி பெறப் போகிறாரா என்பதை, பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
10-ஜன-201906:20:22 IST Report Abuse
venkat Iyer திரு.சாணக்கியன் எழுதியது உண்மையில் தமிழ் நாட்டின் நிலைக்கு மிதந்து மிகவும் கவலை ப்படுவதன் வேண்டியுள்ளது.அரசுக்கு இருக்கும் கடன் பற்றி ஆளும் முதல் அமைச்சர்கள்,மந்திரிகள் கவலைப்படுவதாக தெரியவில்லை.ஆந்த இலவசம்,அனைத்து கார்டுகளுக்கும் பாரபட்சமின்றி வழங்குவதற்கு காரணம் பற்றி திருடர் மந்திரியிடம் கேட்டபோது வசதி படைத்தவர்கள் யாரும் விரும்பி வாங்க வரமாட்டார்கள்.பொங்கல் பண்டிகையை யாரும் வருத்தப்படாத வகையில் முதலாவதாக உள்ள தமிழ் பண்டிக்கையை சிறப்பாக கொண்டாட இந்த ஏற்பாடு என்று சொல்லுகிறார்கள்.பல பணக்காரர் ரேஷன் கார்டு வைத்து உள்ளவர்கள் தன்னிடம் வேலை செய்யும் பணிப் பெண்ணிடம் கொடுத்து வாங்குவதுதான் உண்மை.அரசின் பணம் உண்மையில் வீணாக்கும் படுகிறது என்பதுதான் உண்மை.பணம் கொடுப்பது டாஸ் மாஸ்கில் சரிபடுத்தப்படும் என்பது உண்மை.என்னிடம் பணிபுரியும் நபர் கூட ஒரு வாரம் விடுப்பு அதாவது விடுமுறையை தாண்டி விடுப்பு எடுத்து ஆண்டில் இந்த பண்டிகையை கூதுகுலத்துடன் கொண்டாட திட்டம் தீட்டி உள்ளன.அவரது மனைவிக்கூட, வரும் ஒரு நாள் பண்டிகையில் சந்தோஷமாக குடித்துவிட்டு போகட்டும் என்று பச்சை கொடி காட்டியது உண்மையில் அந்த கொடுத்த பணம் அரசுக்கு வந்து சேரும்.நன்றாக குடித்து பொங்கலில் சந்தோஷமாக இருந்ததை நாளை தேர்தலில் நினைக்க தோன்றும்போது வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் வருங்காலத்தில் பொங்கலுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்து ஓட்டினை இவர்களுக்கு நிச்சயம் போடுவார்கள்.திமுக ஆட்சிக்கு வந்தால் கூட தமிழர் பண்டிகை என்பதுடன்,தமிழர் வருஷபிறப்பு என்று தை மாதம் முதல் நாளை சொல்லி வரும் நிலையில் அவர்களும் இதே சிந்தனையில் தான் இருப்பார்கள்.ஆனால்அதிமுக நாங்கள்தான் முதலில் செய்தோம்,கொடுக்காவிட்டால் மக்கள் குறை கூறுவர் என்று சொல்வார்கள்.திமுக முகத்தினை துடைத்து கொள்ள நேரிடும்.சரி,கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு போட்டி போட்டு உடைத்து அரசின் நிதி நிலை மிகவும் சீர்கெடுவதுடன்,சட்டம் ஒழுங்கு குடியினால் பாதிக்கும்.தமிழ் நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியுமா என்று நினைப்பது டன்,அந்த கடவுளை வேண்டுகின்றேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X