பொது செய்தி

தமிழ்நாடு

பேட்ட, விஸ்வாசம் படங்கள் எப்படி.?

Updated : ஜன 10, 2019 | Added : ஜன 10, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: ரஜினி, அஜித்தும் ஒரு சேர களத்தில் இறங்கி, பொங்கலுக்கு ரசிகர்களை மகிழ்விக்க இன்று(ஜன.,10) வெளியாகி உள்ள படங்கள் தான் பேட்ட, விஸ்வாசம். காலை முதலே இருவரின் ரசிகர்களும் தியேட்டர்களில் அதகளம் பண்ணி வருகின்றனர். இந்த இரு படங்கள் எப்படி உள்ளன என்பதை விமர்சனமாக இங்கு பார்ப்போம்...பேட்ட - விமர்சனம்நடிப்பு - ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷாஇயக்கம் -
Petta, Viswasam, Rajini, Ajith, பேட்ட, விஸ்வாசம், ரஜினி, அஜித், சூப்பர்ஸ்டார் ரஜினி,   ரஜினிகாந்த், நயன்தாரா, விஜய் சேதுபதி, தல அஜித், பேட்ட ரஜினி, தல,Rajinikanth, Nayanthara, Vijay Sethupathi, Tala Ajith, petta Rajini,Superstar Rajini, Thala,

சென்னை: ரஜினி, அஜித்தும் ஒரு சேர களத்தில் இறங்கி, பொங்கலுக்கு ரசிகர்களை மகிழ்விக்க இன்று(ஜன.,10) வெளியாகி உள்ள படங்கள் தான் பேட்ட, விஸ்வாசம். காலை முதலே இருவரின் ரசிகர்களும் தியேட்டர்களில் அதகளம் பண்ணி வருகின்றனர். இந்த இரு படங்கள் எப்படி உள்ளன என்பதை விமர்சனமாக இங்கு பார்ப்போம்...


பேட்ட - விமர்சனம்


நடிப்பு - ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா
இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்

இசை - அனிருத்

தயாரிப்பு - சன் பிக்சர்ஸ்

வெளியான தேதி - 10 ஜனவரி 2019

நேரம் - 2 மணி நேரம் 52 நிமிடம்

ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக தனக்கென இருக்கும் ரசிகர்களையும், தன் ஸ்டைலாலும், நடிப்பாலும் கவர்ந்து வருபவர் ரஜினிகாந்த். 'சிவாஜி' படத்திற்குப் பிறகு ஒரு துள்ளலான, இளமையான ரஜினியைப் பார்க்க மாட்டோமா என்று ஏங்கித் தவித்த அவருடைய ரசிகர்களுக்காக மட்டுமே இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

'பீட்சா, ஜிகர்தண்டா' போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், இந்தப் படத்தை அவருடைய படமாகக் கொடுக்காமல் முழுக்க, முழுக்க ரஜினிகாந்த் படமாக மட்டுமே கொடுத்திருக்கிறார்.

எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ரஜினியின் ஸ்டைல், மேனரிசம், பன்ச் என கடந்த சில வருடங்களாக பார்க்காமல் போன ரஜினியிசத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படத்தின் சிறப்பு என்று சொன்னால் அது ரஜினிகாந்த் மட்டுமே.

மலைப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு கல்லூரியின் ஹாஸ்டல் வார்டனாக வேலைக்குச் சேர்கிறார் ரஜினிகாந்த். அவருடைய அதிரடியால் கேலி, கொண்டாட்டம் எனத் திரியும் மாணவர்களைத் தன்வசப்படுத்துகிறார். ஒரு நாள், ஒரு ரவுடி கூட்டம் ஹாஸ்டலுக்குள் நுழைந்து அங்கு படிக்கும் மாணவர் ஒருவரைக் கொல்ல முயற்சிக்கிறது. அந்த ரவுடிகளிடமிருந்து அந்த மாணவரைக் காப்பாற்றுகிறார் ரஜினிகாந்த். அவர் யார் ?, அவர் ஏன் அந்தக் கல்லூரி ஹாஸ்டலுக்கு வந்து வார்டனாக வேலைக்குச் சேர்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

மலைப்பிரதேசத்தில் ஆரம்பமாகும் கதை, பிளாஷ்பேக்கில் மதுரைக்கு நகர்ந்து, வடஇந்தியாவில் வந்து முடிகிறது. படம் முழுவதும் ரஜினி, ரஜினி, ரஜினி என்றுதான் சொல்ல முடிகிறது. அவ்வளவு நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருந்தும் அனைவரும் வந்து போவது படத்திற்கு மைனஸ். இடைவேளைக்குப் பின் கதை எங்கெங்கோ பயணித்து, துப்பாக்கி சத்தங்களுடன், சிலபல சினிமாத்தனமான பழி வாங்கலுடன் முடிகிறது. இன்னும் எத்தனை படத்தில்தான் வில்லன் சுடும் துப்பாக்கி குண்டுகள் நாயகன் மீது மட்டும் படாமல் போகிறது என்பதைப் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை.

ஹாஸ்டல் வார்டன் ஆக ஒரு சஸ்பென்ஸ் என்ட்ரி கொடுக்கிறார் ரஜினிகாந்த். நடுத்தர வயதுத் தோற்றம், ஆனால், 80, 90களில் பார்த்து, பார்த்து ரசித்த அதே ஸ்டைல், மேனரிசம், அந்தத் துள்ளல் அவைதான் படத்தைக் காப்பாற்றுகிறது. அங்கங்கே அரசியல் பன்ச் வசனங்களம் பேசுகிறார் ரஜினிகாந்த். அவர் நடந்து வருவது, உட்காருவது, நடனமாடுவது, பேசுவது, சண்டை போடுவது என தன்னை ஒரு ரஜினி ரசிகனாக மாற்றிக் கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அதிலும் பிளாஷ்பேக்கில் வரும் அந்த இளமை ரஜினிகாந்த், இன்னும் கொஞ்ச நேரம் வர மாட்டாரா என ரசிகர்களை ஏங்க வைப்பார்.

ரஜினியை ஜோடி இல்லாமல் கூட படத்தில் காட்டியிருக்கலாம். பிளாஷ்பேக்கில் த்ரிஷாவாவது ரஜினியின் மனைவியாக வந்து ஓரிரு வசனம் பேசுகிறார். ஆனால், சிம்ரன், ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் எதற்கு என்று தெரியவில்லை. கல்லூரியில் படிக்கும் பெண்ணிற்கு அம்மாவாக இருக்கும் சிம்ரனை, ரஜினி 'சைட்' அடிப்பதெல்லாம் ஓவரோ ஓவர். ரஜினியுடன் நடித்துவிட்டோம் என சிம்ரன், த்ரிஷா இருவரும் பேட்டிகளில் சொல்லிக் கொள்ளலாம். இந்தப் படத்தினால் அவர்களுக்குக் கிடைத்த பலன் அவ்வளவே.

பிளாஷ்பேக்கில் ரஜினியின் நெருங்கிய நண்பராக, தம்பியாக சசிகுமார். இவரின் காதலுக்காக கொலை செய்து சிறைக்கும் செல்கிறார் ரஜினிகாந்த். வில்லனாக நவாசுதீன் சித்திக். மதுரைப் பின்னணிக் குடும்பத்தில் அவருடைய வடஇந்திய முகம் ஒட்ட மறுக்கிறது. அவரின் மகனாக விஜய் சேதுபதி. இருவரும் வட இந்தியாவில், உத்திரபிரதேசத்தில் இருந்து கொண்டு அரசியல் செய்து கொண்டு, கூடவே தமிழ்நாட்டில் இருக்கும் பழைய பகைக்குப் பழி வாங்குகிறார்கள். விஜய் சேதுபதியை இவ்வளவு வீணடித்திருக்க வேண்டாம்.

இளம் காதல் ஜோடிகளாக சனன்த் ரெட்டி, மேகா ஆகாஷ். சீனியல் கல்லூரி மாணவராக பாபி சிம்ஹா. ஒரு சில காட்சிகளில் மகேந்திரன், குரு சோமசுந்தரம், மாளவிகா மோகனன், ஆடுகளம் நரேன், முனிஷ்காந்த் என பல நட்சத்திரங்கள்.

அனிருத் இசையில் 'எத்தனை சந்தோஷம்' பாடலை ரஜினிகாந்தின் நடனத்திற்காகவே பார்த்து ரசிக்கலாம்.

இடைவேளைக்குப் பின் படம் எதை நோக்கிப் போகிறது என்பது தெளிவில்லாத திரைக்கதையால் அல்லாடுகிறது. நினைத்தால் துப்பாக்கியை எடுத்து தாறுமாறாக சுட்டுத் தள்ளுகிறார்கள். பிளாஷ்பேக்கில் கூட ரஜினிகாந்த் அப்படி துப்பாக்கியை எடுத்து ஒருவரை ஊருக்கு முன்பாக சர்வசாதாரணமாக சுட்டுத் தள்ளுகிறார். வில்லனைத் தேடி ரஜினிகாந்த் உத்திரப் பிரதேசம் சென்றவுடன், காட்சிக்குக் காட்சி லாஜிக் இல்லாமல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

நண்பன் மகனைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் பணயம் வைத்து ரஜினி எதிரிகளை அழிப்பதுதான் படத்தின் கதை. நண்பன் சென்டிமென்ட்தான் படத்தின் மையம். அவனது வாரிசைக் காப்பாற்ற அவர் ஆக்ஷனில் இறங்குகிறார். ஆனால், அதை உணர்வு பூர்வமாக சொல்லாமல் துப்பாக்கி சத்தங்களுடன் ஒரு சாதாரண பழி வாங்கல் கதையைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் ரஜினிகாந்த் படத்தில் இருக்கிறார், ஆனால், ரஜினிகாந்துக்கான படமாக இது இல்லை. 'பாட்ஷா, சிவாஜி' போன்ற படங்களைப் பார்த்த திருப்தியைக் கொடுக்கக் கூடிய ரஜினிகாந்த் படத்தை அடுத்து யாராவது தருவார்களா என்ற ஏக்கம் தொடர்கிறது.


பேட்ட - ரஜினி ஏரியா உள்ள வராத!


விஸ்வாசம் - விமர்சனம்


நடிப்பு - அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு மற்றும் பலர்

இயக்கம் - சிவா

இசை - இமான்

தயாரிப்பு - சத்யஜோதி பிலிம்ஸ்

வெளியான தேதி - 10 ஜனவரி 2019

நேரம் - 2 மணி 32 நிமிடம்

ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தயார் செய்வதா என்ற குழப்பம் அவர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுக்கு அதிகம் வரும். இந்தப் படத்தில் ரசிகர்களை அதிகம் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா.

தமிழ் சினிமா இயக்குனர்கள் மதுரையையும் விடமாட்டார்கள், மும்பையையும் விடமாட்டார்கள். இன்னும் எத்தனை படத்தில் தான் மும்பை பின்னணி கதையைப் பார்ப்பதோ தெரியவில்லை. இந்தப் படத்தின் முதல் பாதி தேனி மாவட்டப் பின்னணியிலும், இரண்டாம் பாதி மும்பை பின்னணியிலும் நகர்கிறது.

ஒரு அப்பா சென்டிமென்ட் கதைக்கு அழகாக ஆக்ஷன் முலாம் பூசியிருக்கிறார் இயக்குனர் சிவா. அந்த சென்டிமென்ட்டும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது, ஆக்ஷனும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

கதையை ஒரு வரியில் கூட சொல்லிவிடலாம். மனைவியையும் மகளையும் பிரிந்த ஒருவர் மீண்டும் அவர்களுடன் எப்படி இணைகிறார் என்பதுதான் படத்தின் கதை.

தூக்குதுரை (அஜித்) என்றாலே சுற்றியுள்ள 12 ஊர்களும் அதிரும். அப்படி, அடிதடி, பஞ்சாயத்து, சண்டை என ரத்த சொந்தங்களுடன் இருப்பவர் தூக்குதுரை. அவரின் ஊரான கொடுவிளார்பட்டிக்கு மருத்துவ முகாம் அமைத்து உதவி செய்ய மும்பையில் இருந்து வருகிறார் டாக்டர் நிரஞ்சனா (நயன்தாரா). வந்த இடத்தில் தூக்குதுரைக்கும், அவருக்கும் காதல் மலர்கிறது. அது திருமணத்தில் முடிந்து, குழந்தையும் பிறக்கிறது. குழந்தை பிறந்த பின்னும் தூக்குதுரை கத்தியைத் தூக்குவது நிரஞ்சனாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால், கோபத்துடன் தூக்குதுரையை விட்டுப் பிரிந்து மகளுடன் மும்பை செல்கிறார்.

ஊர் திருவிழாவுக்காக பெரியவர்கள் வற்புறுத்தலால் தூக்குதுரை மனைவியை அழைக்க மும்பை செல்கிறார். அங்கு அவருடைய மகளை யாரோ கொல்ல திட்டமிடுகிறார்கள். அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, மனைவியுடனும், மகளுடனும் சேர்கிறாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தொடர்ந்து சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தில் அஜித் நடிப்பதன் காரணம் தெரியவில்லை. இந்தப் படத்தில் கிடா மீசை, தாடி என முகம் முழுவதும் முடியாக இருக்கிறது. அதையும் மீறி சென்டிமென்ட் காட்சிகளில் அவர் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. இடைவேளை வரை கலகலப்பாக காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் பாசமான அப்பாவாக கண் கலங்க வைக்கிறார். அவருக்கான பில்ட்-அப் காட்சிகளையும், ரசிகர்கள் கைதட்டும் விதத்தில் வசனங்களையும் சேர்த்திருக்கிறார் இயக்குனர் சிவா.

மும்பையிலிருந்து தேனியில் உள்ள சிறிய கிராமத்தை நயன்தாரா எப்படி தேடி வருகிறார் எனத் தெரியவில்லை. அஜித் படிக்காதவராக இருந்தாலும் அவரைக் காதலிக்கிறார். கல்யாணம் செய்து கொள்கிறார், குழந்தையும் பெற்றுக் கொள்கிறார். இருவரது காதலையும் அன்னியோன்யமாகக் காட்டிவிட்டு திடீரென நயன்தாரா பிரிந்து போவது ஒட்ட மறுக்கிறது. அஜித் மனைவியானதும், டாக்டருக்குப் படித்த நயன்தாராவை, இரண்டு மூக்குத்திகளுடனும், புடவையுடனும் கிராமத்துப் பெண்ணாக மாற்றியிருப்பதும் சினிமாத்தனமானது. பிறகு மல்டி மில்லியனர் பெண் தொழிலதிபராக மாறுகிறார். இளம் பெண், மனைவி, அம்மா என மூன்று பரிமாணங்களிலும் நயன்தாரா தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்திருக்கிறார்.

அஜித்தின் வலது, இடது கரங்களாக ரோபோ சங்கர், தம்பி ராமையா. அஜித் பற்றிய பில்ட்-அப்புகளுக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள். ஜெகபதி பாபு, மல்டி மில்லியன் தொழிலதிபர், அவர்தான் வில்லன். ஆனாலும், மகளுக்காகத்தான் வில்லனாக மாறுகிறார். ரோபோ சங்கர் கொஞ்சமே வந்து சிரிக்க வைக்க முயற்சித்து தோற்றுப் போகிறார். இடைவேளைக்குப் பின் விவேக் வருகிறார், சிரிக்க வைப்பதற்குப் பதில் எரிச்சலை ஏற்படுத்துகிறார். அஜித்தின் மகளாக பேபி அனிகா, அவ்வளவு அழகு, பொருத்தமான நடிப்பு.

இமான் இசையில், 'கண்ணான கண்ணே, அடிச்சித் தூக்கு' இரண்டு பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. ஒன்று மெலோடிக்கு, மற்றொன்று ஆட்டத்திற்கு. படம் முழுவதும் காட்சிகள் அனைத்தும் பளிச்சென இருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் அதிரடி அதிகம்.

தேவையற்ற காட்சிகளை வைத்து படத்தை இழுக்கவில்லை. மனைவி நயன்தாரா வீட்டிலேயே அஜித் வேலைக்காரர் போல சேருவது, எல்லாம் கொஞ்சம் ஓவர் பாஸ். கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியப் போகிறது என்று நாமே யூகிக்க முடிவது கொஞ்சம் மைனஸ்.

கதையில் எந்தவிதமான புதுமையும் இல்லை. ஆனால், சென்டிமென்ட் காட்சிகள் மனதை நிறைக்கின்றன. இருப்பினும் இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படி கமர்ஷியலான படங்களில் மட்டுமே அஜித்தைப் பார்ப்பது. புதுமையாக அவருக்கு இருக்கும் அவ்வளவு பெரிய ஆரவரமான ரசிகர்களுக்கு முழு திருப்தியாக ஒரு படத்தைக் கொடுக்கும் இயக்குனர் தமிழ் சினிமாவில் ஒருவர் கூடவா இல்லை.

விஸ்வாசம் - தந்தைப் பாசம்!

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
10-ஜன-201921:56:31 IST Report Abuse
SENTHIL தன் பட ரிலீஸூக்குக்காக மற்ற படங்களை தடுத்தி நிறுத்தி தன் படத்தை மட்டும் வெளியிடும் "ஒரு சில நடிகர்களுக்கு" மத்தியில் தைரியமாக சூப்பர் ஸ்டார் படத்துடன் மோதிய அஜித் என பேர் வாங்கிட்டாங்கப்பா.
Rate this:
Cancel
R Sanjay - Chennai,இந்தியா
10-ஜன-201916:37:25 IST Report Abuse
R Sanjay சினிமா பயித்தியம் நாட்டு மக்களை பாடாக படுத்தி எடுக்கிறது. இந்த சினிமாக்களை மக்கள் ஒதுக்காதவரை இவர்களுக்கு என்றுமே விடிவுகாலம் இல்லை.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
10-ஜன-201916:09:08 IST Report Abuse
M.COM.N.K.K. இரண்டு படமும் சூப்பர் என்று உற்சாகப்படுத்துங்கள்- காசா பணமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X