அதிகார வர்க்கம்... வலுவானது!| Dinamalar

அதிகார வர்க்கம்... வலுவானது!

Added : ஜன 11, 2019
Share
சட்டசபைக் கூட்டத்தில் இத்தடவை, சில விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்ட விதத்தில் இருந்து, ஆரோக்கியமான விவாதங்களுக்கு எதிர்காலம் வழிகாட்டும் போக்கு தெரிகிறது. பொதுவாக, அரசை அர்த்தமுள்ள விமர்சனங்கள் மூலம், கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பது என்பது, மக்களுக்கு புரியும் அளவுக்கு வெளிவரும் போது, எந்த அளவு வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறையாகிறது என்பது தெரியும்.ஏனெனில், அதிகார

சட்டசபைக் கூட்டத்தில் இத்தடவை, சில விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்ட விதத்தில் இருந்து, ஆரோக்கியமான விவாதங்களுக்கு எதிர்காலம் வழிகாட்டும் போக்கு தெரிகிறது. பொதுவாக, அரசை அர்த்தமுள்ள விமர்சனங்கள் மூலம், கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பது என்பது, மக்களுக்கு புரியும் அளவுக்கு வெளிவரும் போது, எந்த அளவு வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறையாகிறது என்பது தெரியும்.

ஏனெனில், அதிகார வர்க்கம், ஜனநாயகத்தின் ஓர் அங்கம். தொடர்ச்சியாக, செயலகத்தில் இருந்து முடிவுகளை எடுத்து, அரசுக்கு உதவுவதுடன், அதை அமல்படுத்துவதிலும் அவர்கள் பங்கு அதிகம்.குட்கா ஊழல் விவகாரத்தில், முந்தைய தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் பெயர், ஆழமாக ஊடாடி நிற்கிறது என்பதன் அடையாளம், அன்றைய நிலையில், அரசு மறைமுகமாக காய் நகர்த்தியிருக்கிறது என்பதன் பரிமாணம்.

அதே சமயம், உயர்கல்வித்துறை உயர் அதிகாரி அவதுாறு வழக்கில் சிக்கி, பின் மன்னிப்பு கேட்டது வித்தியாசமானது. அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கைகோர்ப்பு, அதிக ஊழலின் அடையாளம். அது, குறையும் காலம் இது.ஆனால், திறமைமிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், காலம் காலமாக அரசுக்கு, சட்டத்தின் நெளிவு சுளிவுகளை அடையாளம் காட்டி, அவர்கள் சார்ந்திருக்கும் அமைச்சரவைப் பணிகளை சீராக்க உதவுவர். அரசுடன் இணங்காத நிலையில், சாதாரண பணிகளுக்கு, தனி அறைகளில் இருந்து பணியாற்ற வேண்டிய காலமும் வந்திருக்கிறது.

தமிழக சட்டசபை நடக்கும் போது, ஜெ., மர்ம மரண விசாரணை குறித்து, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மீது, ஒரு அமைச்சரே புகார் கூறியதும், அதை, அரசு தரப்பில், 'அக்கருத்து, அந்த அமைச்சரின் சொந்தக் கருத்து' எனக் கூறியதும், இதன் அடையாளம். இனிஅத்துறையில், ராதாகிருஷ்ணன் நீண்ட நாள் தொடர்வது சந்தேகமே.

இது ஒருபுறம் இருக்க, விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சில கட்சித் தலைவர்கள், மத்திய - மாநில அரசை கண்டபடி விமர்சிக்கின்றனர். ஆனால், டெல்டா மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தென்கோடி மாவட்டங்கள்ஆகிய விவசாயிகளை, ஒரே கோணத்தில் ஒன்றிணைத்து, பிரச்னையை அனுசரிக்க முடியாது.

தவிரவும், பெரிய நிலச்சுவான்தார் என்ற கணக்கில், மொத்த விவசாயிகள் எண்ணிக்கையில், 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பர். விவசாயிகள் பிரச்னையை, புதிய பரிமாணத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது.சபையில் வெளிப்படையான தகவல் வருவதன், சிறிய உதாரணமாக, 'கஜா' புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், பழைய எழில் வர, இன்னமும் இரு ஆண்டுகள் ஆகும் என்ற தகவல் கூறப்பட்டிருக்கிறது.

இந்த சீரமைப்பு பணிகளுக்கு இதுவரை, மத்திய, மாநில மற்றும் பேரிடர் நிதி, பல்லாயிரம் கோடி ரூபாய் வந்திருக்கிறது. அதிலும், இப்பகுதிகளில், 90 சதவீதத்திற்கு மேலாக, மின்தொடர்பு முழுவதுமாக இணைக்கப்பட்டது மிகப்பெரும் பணி.

அதுமட்டும் அல்ல... தமிழக மேற்கு மாவட்டங்களில், அதிக திறன் கொண்ட மின்சாரம் கொண்டு வரும் வகையில், உயர் மின் கோபுரங்கள் அமைப்ப தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன; கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பவர் கிரிட் அமைப்பும், மின்தொடரமைப்பு கழகமும் மேற்கொள்ளும் இத்திட்டத்திற்கு, அதிக எதிர்ப்பு உள்ளது.

ஒரு ஏக்கர் அல்லது 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி நிலத்தில், டவருக்கு, 40க்கு, 90 மீட்டர் என்ற கணக்கில், கேபிள் கோபுரம் அமைகிறது. இதனால், தங்கள் விவசாயத்திற்கு வழி இல்லை என்ற கருத்தின் மீதான விவாதம், நீண்ட நாளுக்கு பின் சரியான தகவல் கொண்டிருக்கிறது.

'ஏன், பூமிக்கடியில் கம்பிவட கேபிளால், கொண்டு வரக்கூடாது. அமெரிக்கா போன்ற நாடுகளைப் பின்பற்றலாம்' என்ற எதிர்க்கட்சி கோரிக்கை, சரி என்றே தோன்றும். ஆனால், 'மின்சார தேவை அதிகம்; அதை, சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து கொண்டு வரும்போது, இந்த முறை எளிதானது, வசதியானது' என, அமைச்சர் தங்கமணி விளக்கியது நல்லது.

'அமெரிக்காவிலும், உயர் மின்கோபுரங்கள் உள்ளன. அண்டை மாநிலமான கேரளாவிலும், இதே பாணி தான். மொத்தம், 183 மின்கோபுரங்கள் மட்டுமே அமையும். விவசாயிகளுக்கு அதிக நிவாரணம் தர, அரசு தயார். தவறான பிரசாரங்களால், மக்களை துாண்டிவிட வேண்டாம்' எனக் கூறியதை, எத்தனை பேர் உன்னிப்பாக அறிந்தனர் என்று கூற முடியாது.

தவிரவும், 20 ஆண்டுகளுக்கு முன் சிக்கிய வழக்கு தீர்ப்பால், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி இழந்திருப்பதால், சில அமைச்சர்கள் பதவி மாற்றமும், சில நாட்களில் நடக்கலாம். அது,அ.தி.மு.க., தலைமை வலுப்படுவதன் அடையாளம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X