பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு: பிற்பகலில் தீர்ப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு: பிற்பகலில் தீர்ப்பு

Updated : ஜன 11, 2019 | Added : ஜன 11, 2019 | கருத்துகள் (7)
பாலகிருஷ்ணா ரெட்டி, தீர்ப்பு, சென்னை ஐகோர்ட், மேல்முறையீடு

சென்னை : முன்னாள் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
1998 ம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது பஸ்கள் மீது கல்வீசி தாக்கி பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பாலகிருஷ்ணா ரெட்டி, சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்தும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில், எரித்ததாகவோ, தாக்கியதாகவோ என் மீது நேரடி குற்றச்சாட்டு ஏதும் இல்லை. எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறியும் சிறப்பு கோர்ட் அதை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. நான் அந்த வழக்கில் 72வது குற்றவாளி. காவலர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் பழமையான வழக்கில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். 28 சாட்சிகளில் ஒரு சாட்சி தவிர வேறு யாரும் என் பெயரை கூறவில்லை. தீர்ப்பு வந்ததும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தீர்ப்புக்கு தடை விதிக்க பரிசீலிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
தொடர்ந்து அரசு வழக்கறிஞர் வாதிட்ட போது, கூட்டாக செய்தார்கள் என்றே குற்றச்சாட்டு. பாலகிருஷ்ணா ரெட்டி மீது தனிப்பட்ட புகார் இல்லை என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை ஏன் தடுக்க வேண்டும்? சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு தவறு என்கிரீர்களா? அரசியல் தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்து செல்வதில் முன் மாதியாக இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் சிறை தண்டனையை தடுக்க சொன்னால் சரி. தீர்ப்பையே ஏன் தடுக்க வேண்டும்? என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், காவல் துறையின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து தண்டனைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X