தமிழில் பெஸ்ட் போட்டோகிராபி சானல் எது?| Dinamalar

தமிழில் பெஸ்ட் போட்டோகிராபி சானல் எது?

Added : ஜன 11, 2019
தமிழில் பெஸ்ட் போட்டோகிராபி சானல் எது?

இது யூ ட்யூப் யுகம்

என்ன வேண்டும் என்றாலும் யூ ட்யூப்பில் போய் தெரிந்து கொள்ளலாம்.

இப்போது யூ ட்யூப்பில் அதிகம் இளைஞர்கள் தேடுவதும் கற்றுக்கொள்வதும் போட்டோகிராபி பற்றித்தான்.ஆனால் போட்டோகிராபி கற்றுக் கொடுப்பவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டினராகவும் அவர்கள் பேசக்கூடிய மொழி அந்நிய மொழியாகவும் இருந்து வருகிறது. தாய்மொழியாம் தமிழில் போட்டோகிராபி பற்றி யாராவது யூ ட்யூப்பி்ல் சொல்லித்தர மாட்டார்களா? என்ற பலரது ஏக்கத்தை நிறைவு செய்து வருபவர்தான் சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரசன்னா வெங்கடேஷ்.

‛பெஸ்ட் போட்டோகிராபி' சார்பில் போட்டோகிராபிக்கான சிறந்த தமிழ் சானல் விருதினை சமீபத்தில் பெற்ற ஆர்.பிரசன்னா வெங்கடேஷ் குறுகிய காலத்தில் 13ஆயிரத்து 266 வாடிக்கையாளரைப் பெற்று வீறு நடைபோட்டு வருகிறார்.

போட்டோகிராபி என்பது ஒரு பெரிய கடல்.கேமிரா வாங்குவது போல அதன் அறிவை எளிதில் வாங்கமுடியாது.அனுபவம் மிகுந்த நட்புடன் பேசக்கூடிய உண்மைத்தன்மையுடன் கூடிய யாராவது ஒருவர் அமைந்தால்தான் இதெல்லாம் நடக்கும்,கிடைக்கும். இந்த நிலையில் அந்த யாரோ ஒருவராக ஏன் நாமே இருக்கக்கூடாது என்று நினைத்தேன், சானலை துவக்கினேன் மக்களின் அமோக ஆதரவுடன் செயல்பட்டு வருகிறேன்.

நான் போட்டோகிராபி கற்றுக்கொள்ளும் போது எந்த மாதிரி சந்தேகங்களும் கேள்விகளும் வந்ததோ அதை மனதில் வைத்துக்கொண்டு அது போன்ற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் யூட்யூப்பில் விளக்கம் தந்துவருகிறேன்.

அதுதான் சானல் விருது பெற்றதன் ரகசியம்.

பேசிக் போட்டோகிராபி கற்றுக் கொள்ளவேண்டுமா? குறைந்த பட்ஜெட் கேமிரா எது? கேண்டிட் போட்டோகிராபி எடுப்பது எப்படி?எடுத்த படங்களை காசாக்குவது எப்படி?திருமணம் போன்ற விசேஷங்களை படமெடுக்க போகிறவர்கள் மேற்கொள்ள வேண்டியது என்ன? என்பது போன்ற எழுபத்தைந்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் சேனலில் பதில் கிடைக்கும் விசிட் செய்து பாருங்கள்.(யூட்யூப்பிற்குள் போய் r.prasanna venkatesh என்றுதேடவும்)

புகைப்படத் துறையில் சமீபத்திய வரவான மிர்ரர் லெஸ் கேமிரா,கோடக்ஸ் பிளாஷ், ட்ரோன் கேமிராக்களை இயக்கும் விதம் என்று நவீன போட்டோகிராபி பற்றியும் எனது சானல் விளக்கும்.

மேலும் இந்த சானலில் நான் என்னை முன்னிறுத்துவது கிடையாது தொழில்நுட்பத்தை மட்டுமே முன்னிறுத்துவேன் ஆகவே நிறைய விஷூவல்ஸ் கிடைக்கும் அத்துடன் எல்லாவற்றுக்கும் நானே பதில் சொல்லிக்கொண்டு இராமல் துறைசார்ந்த நிபுணர்களை அழைத்தும் பேசவைக்கிறேன் அப்படி ஒளிபரப்பான புகைப்படங்கள் தொடர்பான காப்புரிமை தகவலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

எதைச் சொன்னாலும் பத்தில் இருந்து பதினான்கு நிமிடத்திற்குள் சொல்வதால் நிறயை பேரிடம் சானல் போய்ச் சேர்ந்திருக்கிறது கட்டணம் ஏதுமில்லை இலவசம்தான்.

விளம்பர படம் எடுப்பது,சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களை படம் எடுப்பது, பயிற்சி வகுப்புகள் நடத்துவது என நான் நாள் முழுவதும் பிசியாக இருந்தாலும் இந்த யூட்யூப் சானலில் புதுப்புது விஷயங்களை சொல்வதை தவிர்ப்பதே இல்லை காரணம் புகைப்படத்தின் மீதான காதல்.

ஒரு கேமிரா வாங்கிவிட்டு இவரது யூட்யூப் முன்னால் உட்கார்ந்துவிட்டால் ஒரு நல்ல போட்டோகிராபராக மாறுவது நிச்சயம் அந்த அளவிற்கு சானலில் விஷயமும்,தரமுமிருக்கிறது. சானலை பாருங்கள் படியுங்கள் உங்களிடம் கேமிரா இல்லாவிட்டால் கேமிரா வைத்திருப்பவர்களுக்கு இந்த சானலை சிபாரிசு செய்யுங்கள்,அவரது எண்:9884878101.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X