chennai | கிழிந்து அழிந்து போன கண்ணதாசன் காவியங்கள்..| Dinamalar

கிழிந்து அழிந்து போன கண்ணதாசன் காவியங்கள்..

Updated : ஜன 11, 2019 | Added : ஜன 11, 2019 | கருத்துகள் (1)
கிழிந்து அழிந்து போன கண்ணதாசன் காவியங்கள்..

கவியரசர் கண்ணதாசன் எப்போதுமே பாடல்களைச் சொல்ல சொல்ல உதவியாளர் எழுதித்தருவார் இது கண்ணதாசனை பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும் ஆனால் அவர் சொல்லச் சொல்ல எழுதிய எத்தனையோ பாடல்கள் அவர் கண்முன்பாகவே கிழித்து போடப்பட்டது எத்தனை பேருக்கு தெரியும் என்றார் கண்ணதாசனின் மகனான கோபி கண்ணன்.
ஸ்ரீ கிருஷ்ண ஸ்வீட்ஸ் உபயத்தி்ல்,கண்ணதாசன் புகழ் பாடும் காலங்களில் அவன் வசந்தம் என்ற மேடை நிகழ்ச்சி பல மாதங்களாக சென்னையில் நடந்துவருகிறது.
இசைக்கவி ரமணன் இந்த நிகழ்வை நடத்திவருகிறார் ஒவ்வொரு மாதமும் யாராவது ஒரு கண்ணதாசன் ரசிகர் அவருடன் பங்கேற்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வர்.
சுவராசியமான இந்த தொடர்நிகழ்வில் கடந்த முறை ரமணணுடன் மேடையேறியவர் கண்ணதாசனின் எட்டாவது மகனும் நடிகருமான கோபிகண்ணன் ஆவார்.

இவர் தனது அனுபவ பக்கங்களில் இருந்து கண்ணதாசன் பற்றி சொல்லும் போது பல நேரம் கவியரசர் என்றே தனது தந்தையை பெருமையுடன் குறிப்பிட்டார்.
தனிமையை அவர் மிகவும் விரும்பினார் அவர் வார்த்தையை உபயோகிக்கும் வேகத்திற்கு விரல்கள் ஒத்துழைக்கவில்லை என்று எண்ணினாரோ என்னவோ தான் எழுதுவதை விட்டுவிட்டு எழுதுவதற்கு என்று ஒரு உதவியாளர் வைத்துக் கொண்டார்.
அவருடன் எப்போதாவது பாடல் பதிவு நடக்கும் இடத்திற்கு போவோம் அங்கே எம்எஸ்வி மாமா மற்றும் டைரக்டர் மட்டும் இருப்பர்.கண்ணதாசனிடம் கதையையும் பாடல் இடம் பெற வேண்டிய சூழ்நிலையையும் இயக்குனர் விவரிப்பார், ஏற்கனவே எம்எஸ்வி மெட்டு போட்டு வைத்திருப்பார் அதை தனது ஆர்மோனியத்தில் வாசித்துக் காட்டுவார்.
ஒரு சில நிமிடம் அதை உள்வாங்கி பின் கடகடவென கவிதையை அதாவது பாடலை பொழிய ஆரம்பித்துவிடுவார் உதவியாளர் கிடுகிடு வென எழுதிவிடுவார் எங்கே எழுதியதை படித்துக்காட்டு என்பார் உதவியாளரும் படித்துக்காட்டுவார் பிறகு இது சரியா என தெரிந்துகொள்ள இயக்குனர் முகத்தை பார்ப்பார் அவர் திருப்தி இல்லை என்பது போல முகத்தைக் காட்டினால் கொஞ்சம் கூட யோசிக்காமல் ‛அதை துாக்கி போட்டுறு இப்ப சொல்றத எழுதிக்கொள்' என்பார்.
உதவியாளரும் ஒரு பெரிய கோடு ஒன்றைப்போட்டு எழுதியதை
அடித்து அந்தப் பேப்பரை அந்தப்பாடலை அப்படியே குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு அடுத்த பாடலை எழுத தயராகிவிடுவார், அதுவும் சரியில்லை என்று டைரக்டர் அபிப்ராயப்பட்டால் அந்த பாடலும் குப்பைக்கூடைக்கு போய்விடும் கடைசியில் ஒரு பாடல் ஒகேயாகும்.
குப்பைக்கூடைக்கு போனாதால் அவை குப்பைகளல்ல மாணிக்கங்கள்தான் பத்திரப்படுத்திவைத்திருந்தால் பிற இடங்களில் பிற சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கலாம் ஆனால் அந்த பொக்கிஷங்கள் எல்லாம் குப்பையோடு குப்பையாகவே மங்கி மறைந்துவிட்டன இப்போது பாடப்படும் கண்ணதாசன் பாடல்களை விட பாடப்படாத அந்தப்பாடல்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கலாம் என்றார்.
ஒரு கிராமத்திற்கு போயிருந்தேன் அங்கே உள்ள டீகடையில் இரண்டே படங்களை அந்த எழுதப்படிக்கத் தெரியாத டீக்கடைக்காரர் மாட்டிவைத்திருந்தார். ஒன்று முருகன் படம் இன்னோன்று கவியரசர் படம் அவர் கவியரசரை எந்த அளவிற்கு நேசித்திருக்கிறார் என்பதே அதற்கு சாட்சி.
நான் அவரது படத்துடன் அவர் எப்போதும் அவர் விரும்பி ரசித்த ஒரு கண்ணன் படத்தை அவரது நினைவாக வைத்துள்ளேன்.அவர் கண்ணனை மிக மிக நேசித்தார் அவர் எழுதிய கண்ணன் பாடல்களில் தனிச்சுவை இருக்கும் எத்தனை காலமானாலும் அது வசந்தமாய் ஒலிக்கும்.
கண்ணதாசன் சூரியகாந்தி என்ற படத்தில் ‛பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?' என்ற பாடலுக்கு பாடுவது போல நடித்திருந்தார்.
கவியரசரின் தோற்றத்தில் மேடையேறி அந்தப்பாடலுக்கு வாயசைக்க என்னை ஒரு மெல்லிசைக்குழு கேட்டுக்கொண்டது. நானும் அவர் நினைவாக பல ஆண்டுகள் பிரிக்காமல் வைத்திருந்த,‛ சூரியகாந்தி' படத்தில் நடிக்கும் போது அணிந்திருந்த அதே சால்வையை அன்று சென்டிமென்டாக அணிந்துகொண்டு மைக்முன் நின்றேன்.
எல்லோரும் என்னைப் பார்த்தைவிட என் சால்வையைத்தான் அதிகம் பார்த்தனர் பாடல் முடிந்த பிறகு ஏன் சால்வையை அப்படி உற்றுப்பார்தார்கள் என்று கழட்டிப்பார்தால் அந்த சால்லை பல நாளாக உபயோகிக்காததால் மடிப்பு உள்ள இடங்களில் கிழிந்து கந்தலாக காணப்பட்டது.
ஏன் இவ்வளவு பழைய சால்வை, வேறு சால்வை கிடைக்கவில்லையா? என்று அமைப்பாளர்களும் கேட்டனர். ஒகோ! பார்வையாளர்கள் பரிதாபமாக என் சால்வையை பார்த்ததற்கு காரணம் இதுதானா? என்பதை புரிந்து கொண்ட நான், உடனே திரும்ப மைக் முன்பாக வந்து கிழிந்த சால்வையுடன் மேடைக்கு வரவேண்டும் என்று நினனக்கவில்லை உண்மையைச் சொன்னால் இந்த சால்லை கிழிந்ததே எனக்கு இப்போதுதான் தெரியும் இந்த சால்வையை அணிந்ததன் பின்னனி இதுதான் என்பதைப் பற்றி சொன்னதும் மேடையில் இருந்து பலரும் அந்த சால்வை என்ன விலை என்றாலும் எனக்குத்தான் வேண்டும் என்று கேட்டு மேடைக்கு வந்துவிட்டனர் இதுவும் கவியரசரின் மீதான அவரது ரசிகர்களின் ஈர்ப்பைத்தான் காட்டுகிறது.
எந்த காலங்களிலும் அவர் வசந்தம்தான் என்று சொல்லிமுடித்தார்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.inAdvertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X