ரூ.1000 வாங்க சென்னை வாசிகள் ஆர்வம்: 'ஆதார்' விபரம் தர மட்டும் அலட்சியம் காட்டியது ஏன்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1000 வாங்க சென்னை வாசிகள் ஆர்வம்: 'ஆதார்' விபரம் தர மட்டும் அலட்சியம் காட்டியது ஏன்?

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதிய, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு, ஆதார் விபரம் தர அலட்சியம் காட்டிய சென்னைவாசிகள், தற்போது, பொங்கல் பரிசு தொகுப்பில், 1,000 ரூபாய் வாங்க மட்டும், ரேஷன் கடைகளுக்கு படையெடுப்பது, அதிகாரிகளிடம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 2017 ஏப்., மாதம் முதல், 'ஆதார்' விபரங்களின் அடிப்படையில், கையடக்க வடிவில், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.இதனால், ரேஷன் கடைகளுக்கு, பொருட்கள் அனுப்புவது முதல் வினியோகம் வரை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. பொருட்கள் விற்பனை விபரம், ரேஷன் கார்டுதாரருக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தை, 2016ல் செயல்படுத்த, உணவுத் துறை முடிவு செய்தது. இதற்காக, அப்போது, ஏற்கனவே இருந்த ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, ரேஷன் கடைகள் வாயிலாக, ஆதார் விபரங்கள் பெறப்பட்டன.அதை வழங்குவதில், சென்னை தவிர்த்த, மற்ற மாவட்ட மக்கள் ஆர்வம் காட்டினர். ஆனால், சென்னை மக்கள் மட்டும், ஆதார் விபரத்தை பதிவு செய்வதில், அலட்சியம் காட்டினர்.
2017 ஏப்., நிலவரப்படி, சென்னையில் மொத்தம் இருந்த, 21.96 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களில், 8.41 லட்சம் கார்டுதாரர்கள் மட்டுமே, குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின், ஆதார் விபரத்தையும் பதிவு செய்தனர்.எஞ்சிய, 10.64 லட்சம் கார்டுதாரர்கள், பாதி உறுப்பினர்களின் ஆதார் விபரத்தை மட்டும் பதிவு செய்த நிலையில், மற்ற கார்டுதாரர்கள், ஒரு உறுப்பினரின் விபரத்தை கூட பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு, தற்போது, ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது. இதை வாங்க, சென்னைவாசிகள் ரேஷன் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:படித்தவர்கள், விபரம் அறிந்தவர்களான, சென்னைவாசிகள், ஆதார் விபரத்தை, குறித்த காலத்தில் வழங்காததால் தான், ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
குறிப்பாக, முழு ஆதார் விபரத்தை, மற்ற மாவட்ட மக்கள், 70 சதவீதத்திற்கும் மேல் வழங்கிய நிலையில், சென்னையில், 45 சதவீதத்திற்கும் குறைவான மக்களே வழங்கினர்.ரேஷனில், அனைவருக்கும், பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. சென்னையில், தற்போது மொத்தம் உள்ள, 19.30 லட்சம் ரேஷன் கார்டுகளில், ஐந்து நாட்களில் மட்டும், 75 சதவீதத்திற்கும் மேலான கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு வாங்கிவிட்டனர்.
வசதியானவர்கள் அதிகம் உள்ள சென்னைவாசிகள், பரிசுத் தொகை வாங்க காட்டும் ஆர்வம், வியப்பை ஏற்படுத்துகிறது. அவர்கள், விரைவில், ரேஷனில் அறிமுகம் செய்ய உள்ள, கைரேகை பதிவு செய்யும், 'பயோமெட்ரிக்' திட்டத்திற்கும், ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X