உங்களை கேட்க யாருமில்லையா?| Dinamalar

உங்களை கேட்க யாருமில்லையா?

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (4) | |
மூளை பலத்தைக் காட்டிலும், முதுகெலும்பின் வலு தான் ஆரோக்கியத்துக்கு முக்கியம். முதுகெலும்பு பாதிக்கப்பட்டால், நடக்க, குனிய, நிமிர இடர்பாடுகள் வரும். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு, வங்கித்துறை. இந்த துறையில் பாதிப்பு ஏற்பட்டால், நாடு எழுந்து நிற்கவே முடியாது. இந்நிலை ஏற்படவா, இத்தனை ஆண்டுகளாக, நம் பொருளாதார அறிஞர்களும், மேதைகளும் இரவு, பகலாக பாடுபட்டனர்? உலக
உங்களை கேட்க யாருமில்லையா?

மூளை பலத்தைக் காட்டிலும், முதுகெலும்பின் வலு தான் ஆரோக்கியத்துக்கு முக்கியம். முதுகெலும்பு பாதிக்கப்பட்டால், நடக்க, குனிய, நிமிர இடர்பாடுகள் வரும். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு, வங்கித்துறை. இந்த துறையில் பாதிப்பு ஏற்பட்டால், நாடு எழுந்து நிற்கவே முடியாது. இந்நிலை ஏற்படவா, இத்தனை ஆண்டுகளாக, நம் பொருளாதார அறிஞர்களும், மேதைகளும் இரவு, பகலாக பாடுபட்டனர்? உலக அரங்கில், நம் நாட்டின் புகழ், பெருமை, பொருளாதார வளம் சற்று உயர்ந்துள்ளது என, கூறப்படும் நிலையில், அதற்கு பாதகமான வழியில், வங்கி ஊழியர்களின் செயல்பாடு உள்ளதே... எல்லா துறையினருக்கும் பிரச்னைகள், கோரிக்கைகள் உள்ளன. அதற்காக ஒவ்வொருவரும், போராட்டம் என, களத்தில் இறங்கி விட்டால், நாடு என்னவாகும்? பொதுத்துறை வங்கி ஊழியர்களில் பெரும்பாலானோர், உலக நாடுகளுக்கு, ஆண்டுக்கு, இரு முறை சுற்றுலா சென்று வருகின்றனர் என, அந்த துறையில் பணியாற்றும் நண்பர்கள் சிலர், என்னிடம் கூற கேட்டுள்ளேன். நல்ல முன்னேற்றம் தான்... நீங்கள் சென்ற, சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா போன்ற நாடுகளில், வங்கி ஊழியர்கள் இப்படி, இரண்டு

நாட்கள், மூன்று நாட்கள் என, போராட்டத்தில் ஈடுபடுகின்றனரா? உங்களின் கோரிக்கைகள் நியாயமானவையாக இருக்கலாம்... மத்திய, மாநில அரசுகள் அவற்றை கண்டுகொள்ளாமலும் இருந்திருக்கலாம். போராட்டம் மூலம் தான், பிரச்னைக்கு தீர்வு வரும் என, நினைக்கும் நீங்கள், பிரச்னை தீரும் வரை, வங்கிகளை இழுத்து மூடி விடுவீர்களா? ஓரிரு நாட்கள் நீங்கள் நடத்தும் போராட்டங்களால், எத்தனை பேர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, மீண்டு வர

முடியாத நிலையை அடைந்துள்ளனர் என்பதை உணர்வீர்களா? கடந்த, 2018 டிசம்பர்

இறுதியில், இரண்டு நாட்கள், நீங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டீர்கள். ஆனால், ஐந்து நாட்கள், வங்கிகள் மூடப்பட்டு விட்டன. டிசம்பர், 2ம் தேதி, நாடு தழுவிய அளவில், நீங்கள்

போராடினீர்கள். அதற்கு மறுநாள், இரண்டாம் சனிக்கிழமை, மறுநாள், ஞாயிறு. அதற்கு அடுத்த நாள், திங்கள் கிழமை மட்டும் பணி. அதற்கு மறுநாள் கிறிஸ்துமஸ், தேசிய விடுமுறை.

இப்படி, ஐந்து முதல், ஆறு நாட்கள் வரை, வங்கிகள் இழுத்து மூடப்பட்டதால், நாட்டின்

வங்கிச் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன; ஏழை பாழைகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.

உங்களுக்கு வேண்டுமானால், 100, 200 ரூபாய் பெரிதாக இருக்காது.ஆனால், இன்னமும், கிராமப்புற வங்கிகளில், 100, 200 போடும்,எடுக்கும், எண்ணற்ற ஏழைகள் உள்ளனர். அவர்களுக்கு நீங்கள்,

கஷ்டத்தை கொடுக்கலாமா?அந்த வேலைநிறுத்தம் முடிந்து, சில நாட்கள் தான் ஆகிறது; அதற்குள், அடுத்த வேலைநிறுத்தம். ஜனவரி, 8, 9ம் நாட்களில், இரண்டு நாட்கள், இழுத்து மூடி விட்டீர்கள். எத்தனை பாடு, பொதுமக்களுக்கு... சற்று யோசித்து பாருங்கள்!பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு இருக்கும் பிரச்னைகளை விட, தனியார் வங்கிகளின் ஊழியர்கள், அதிகாரி

களுக்கு ஏராளமான பிரச்னைகள் உள்ளன. வேலைநிறுத்தத்தில் அவர்கள் ஈடுபடுவதில்லை; ஆனால், உங்களால், அவர்களும் செயலிழந்து, உட்கார்ந்து இருக்கின்றனர். 'ஒருவர் பசித்திருந்தால் கூட, உலகத்தை அழிப்பேன்' என்றார், பாரதியார். உங்களின், ஒன்றிரண்டு லட்சம் ஊழியர்களால், 120 கோடி இந்திய மக்கள் பாதிக்கப்படலாமா?பொதுத்துறை வங்கிகளில் பணி புரிபவர்களே... கோபம் வேண்டாம். கொஞ்சம் நிதானமாக சிந்தித்து பாருங்கள். பணிக்கு சேர்ந்த

புதிதில், 'வேலைநிறுத்தங்களில் ஈடுபட மாட்டோம்; பொதுமக்களுக்கு சேவையாற்றுவோம்; கிராமப்புறங்களில் பணியாற்ற தயங்க மாட்டோம்' என, எழுதி கொடுத்ததை, சற்று நினைத்து பாருங்கள். பணியில் சேர்ந்த போது, வாடிக்கையாளர்களின் நலன்களுக்காக, எவ்வளவு கடினமாக, உண்மையாக உழைத்தீர்கள்... அது போல, இப்போது இல்லையே, ஏன்? உங்களின் வசதி,

வாய்ப்புகளும், வங்கிகளின் நிதி இருப்பும் அதிகரித்ததும், ஏழை மக்கள் பற்றிய எண்ணம் மறந்து போய் விட்டதா? இன்றைய வங்கிப் பணியில், சாதாரண ஊழியர்களுக்கு, கணினிகளை இயக்கும் ஆற்றல், பணத்தை எண்ணி வாங்கும் திறன் இருந்தால் போதும். கணிசமான ஊதியம், 'குளுகுளு' வசதி, ஏழு மணி நேரப்பணி, ஏராளமான, தாராள விடுப்பு வசதிகள் உள்ளன.

நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள்; உள்நாட்டு பாதுகாப்பில் உள்ள போலீசார்; நாள் தோறும், ஒவ்வொரு நிமிடத்தையும் கண்காணிக்கும் பத்திரிகையாளர்கள் போன்றோருக்கு, இது போன்ற விடுப்பு, சலுகைகள், வாய்ப்புகள் கிடையாதே! சம்பளம், சலுகைகள் பற்றி ஒப்பிட்டு பேச வேண்டாம் என்பீர்கள். சரி, அது பற்றி பேச வேண்டாம். நாட்டின் உயிர் மூச்சான, பணச் சேவையை, மூச்சு முட்டும் வகையில், பிடித்து நிறுத்தலாமா... எவ்வளவு தான், இணையவழிச் சேவை இருந்தாலும், கையில் பணத்தை பிடிக்காமல், எதுவும் நடப்பதில்லையே!கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு, அன்றாட பிழைப்பு, உணவு என, எவ்வளவோ பேர், வங்கிகள் மூலம், பணத்தை பெற்றும், போட்டும், வங்கி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். போராட்டம் என்ற

பெயரில், அவர்களை நிலை குலைய செய்து விடுகிறீர்களே... உங்களை கேட்க, இந்த நாட்டில் ஆளே இல்லையா? நன்றாக நினைவில் இருக்கிறது... சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஆண்டுக்கு, ஒரு நாள் அல்லது இரு நாட்கள் தான், வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்

தத்தில் ஈடுபடுவர். அதுவே, 20 லட்சம் கோடி ரூபாய்... 30 லட்சம் கோடி ரூபாய் பாதிப்பு என, செய்தித்தாள்களில் செய்தியாக வரும்; மனம் பதைக்கும். ஆனால் இப்போது, ஒரு வார இடைவெளியில், இரண்டு நாட்கள் போராட்டம்; இரண்டு நாட்கள் விடுப்பு; மூன்று நாட்கள் விடுமுறை என, ஒரு வாரத்திற்கும் மேலாக, வங்கித்துறையை ஸ்தம்பிக்கச் செய்து விடுகிறீர்கள்.

இதற்கெல்லாம் காரணம், மத்திய, மாநில அரசுகளிடம், வலுவான சட்டங்கள் இல்லாதது தான்!

நம் வீடு நன்றாக இருந்தால் தான், நாடு நன்றாக இருக்கும். வங்கிகள் நன்றாக, வலுவாக இருந்தால் தான், நாடு முன்னேறும். அதை நினைத்து, இனி மேலாவது போராட்டங்களை நடத்தி, நாட்டின் முன்னேற்றத்தை சீர்குலைக்காதீர்கள்.எல்லாருக்கும், ஏதாவது ஒரு விதத்தில், அரசிடம் கோரிக்கை, அரசு மீது எதிர்ப்பு, அரசுக்கு வலியுறுத்தல் இருக்கவே செய்யும். அதற்காக, போராட்டமே தீர்வு என, அனைவரும் இறங்கி விட்டால், நாடு என்னவாகும்?

இப்படித் தான், கேரளாவில், எடுத்ததற்கெல்லாம் போராட்டம்! எப்போது கடையடைக்கப்படும்; எப்போது மறியல் நடக்கும் என, யாருக்கும் தெரியாது. அதனால், அந்த மாநிலத்தில், ஒரு சிறிய தொழிற்சாலை கூட, நிம்மதியாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

அந்த மாநிலத்தவர், பிற மாநிலங்களில் வேலை தேடி அலைகின்றனர்; வளைகுடா நாடுகளில், லட்சக்கணக்கில் குடி புகுந்துள்ளனர்.உங்களுக்கு தான், அமெரிக்கா, ஜப்பான், சீனா பற்றி நன்கு தெரியுமே... அங்கெல்லாம், வங்கி ஊழியர்கள் எப்படி, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர் என, கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இனிமேலாவது, பொதுமக்களை பாதிக்கும்

போராட்டங்களை, கையில் எடுக்காதீர்கள்.'நாடு எக்கேடு கெட்டால் என்ன; நாம் வாழ்ந்தால் போதும்' என, நினைக்கும் ஒரு சில அரசியல்வாதிகள் போல, வங்கி ஊழியர் தொழிற்சங்க தலைவர்கள் பலர், ஓய்வுபெற்ற பிறகும், அப்பாவி ஊழியர்களை துாண்டி விட்டு, போராட்டங்களில் ஈடுபட செய்கின்றனர் என்ற தகவல், பரவலாக உள்ளது. வங்கிகள், 1991ல், தேசிய மயம் ஆன கால கட்டத்தில், தொழிற்சங்க போராட்ட கோஷம் இப்படித் தான் இருந்தது.

'அமெரிக்காவில் ஆள் இல்லை; அங்கே வேண்டும் கம்ப்யூட்டர்... ஆளுக்கென்ன பஞ்சமா... இங்கே எதற்கு கம்ப்யூட்டர்...' என, வங்கி ஊழியர்கள் கோஷமிட்டனர். வங்கியில் கணக்கராக பணியாற்றிய, எனக்கு தெரிந்த ஒருவர், இந்த கோஷத்தை வடிவமைத்து கொடுத்தார். பின்னாளில் அவரே, கம்ப்யூட்டர் கற்று, அந்த வங்கிக்கே, பொது மேலாளர் ஆனார். இப்படித் தான் உள்ளது, வங்கிப் பணியாளர்களின், 'போராட்ட' பின்புலம். அப்போது, கம்ப்யூட்டர் வேண்டாம் என, போராடினீர்கள். இப்போது, வேண்டாம் என, உங்களால் சொல்ல முடியுமா... எனவே, போலி தொழிற்சங்கவாதிகளின் வலைகளில், வங்கிப் பணியாளர்கள் யாரும் இனிமேலும் வீழாதீர்கள்.

அடுத்தவரை, 'ஹிந்தி படிக்காதே' என்று சொல்லி, தன் பிள்ளைகளுக்கு தனியாக வாத்தியார் வைத்து, ஹிந்தி சொல்லிக் கொடுத்த, சில அரசியல்வாதிகளின் சாயல், வங்கி தொழிற்சங்க தலைவர்களின் செயல்பாட்டில் தென்படுகிறது. வங்கி பணியாளர்கள் மீதும், வங்கியில் வேலை என்பதையும், இன்று நேற்றல்ல; காலம் காலமாக, உயர்வாக, நம் மக்கள் கருதுகின்றனர். அந்த எண்ணத்தை, உங்களின் போராட்டம் குலைத்து விடாமல் இருக்கட்டும். ஏனெனில், வங்கி ஊழியர்கள், இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், முதல் நாளில், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முடிகிறது. அடுத்த நாள், கஜானா காலி... 500, 1,000 ரூபாய் பண மதிப்பிழப்புக் காலம் நினைவுக்கு வருகிறது, அடிக்கடி, உங்களின் செயலால்! 'பணத்தை முன் கூட்டியே எடுத்து வைத்துக் கொண்டால் என்ன...' என, ஒரு வங்கி அதிகாரி, என்னிடம் கேட்டார். நாங்கள், சாதாரண பொதுஜனம் தானே... 100ம், 500ம் எங்களுக்கு இன்னமும், அத்தியாவசிய பணம் தானே!

நேர்மையான போராட்டத்தை, வேண்டாம் என, யாரும் சொல்ல மாட்டார்கள். கோடீஸ்வரர்களுக்கு அள்ளிக் கொடுத்து, பல லட்சம் கோடி வாராக்கடனை வசூலிக்க, நீங்கள் போராட்டம் நடத்தினால், உங்களுக்கு பொதுமக்களும் ஆதரவு தருவர். ஆனால், உங்களின் போராட்டம், சாதாரண மக்களுக்கு எதிரானது; வர்த்தகர்களுக்கு விரோதமானது; அரசு அலுவலர்களுக்கு ஆபத்தானது. அனைவரையும் எந்த விதத்திலாவது பாதித்து விடுகிறது, உங்களின் போராட்டம்.

எனவே, நீங்கள் தான் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பதை, இனிமேலாவது உணர்ந்து கொள்ளுங்கள். நேர்மையான, பல வங்கி ஊழியர்களை நான் அறிவேன்.

வங்கிப் பணம், ஒரு பைசாவை கூட, வெளியே விடாமல் பார்த்துக் கொண்ட பலர் உள்ளனர். அனைவரும் அவர்களைப் போல மாற வேண்டும். உங்களின் வசதி, வளமான வாழ்க்கைக்காக, நாட்டின் முன்னேற்றத்தை சீர்குலைக்காதீர்கள் என்பது தான், என் உருக்கமான வேண்டுகோள்!


சீத்தலைச்சாத்தன்


தனியார் வங்கி முன்னாள் அதிகாரி


இ - மெயில்: send2subvenk@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X