நிர்மலாவை பாராட்டிய காங்., தலைவர்| Dinamalar

நிர்மலாவை பாராட்டிய காங்., தலைவர்

Added : ஜன 13, 2019
Share
நிர்மலாவை பாராட்டிய காங்., தலைவர்

'ரபேல் போர் விமானங்கள் வாங்கும் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அரசு ஊழல் செய்துள்ளது' என தினமும் குற்றம் சாட்டி வருகிறார், காங்., தலைவர் ராகுல். 'பண பரிமாற்றம் நடந்துள்ளது; ஆனால், என்னிடம் எவ்வித சான்றும் இல்லை' என, அவர் கூறி வருகிறார்.இது தொடர்பாக, சமீபத்தில், பார்லிமன்டில் விவாதம் நடந்தது. அப்போது, ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். 'காங்., ஆட்சி காலத்திலேயே இந்த போர் விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டது; ஆனால், கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. உங்களுக்கு கமிஷன் கிடைக்காததால், ரபேல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது' என பேசிய நிர்மலா, மோடி அரசின் செயல்பாடுகளை பட்டியலிட்டார். அத்துடன், காங்., குற்றச்சாட்டுகளுக்கு, விரிவாக, ஆவணங்களுடன் பதில் அளித்தார்; பா.ஜ., கூட்டணி, எம்.பி.,க்கள் மேசைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். நிர்மலாவின் பதிலுக்கு, காங்., - எம்பிக்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். ராகுலோ, எதையும் கண்டு கொள்ளாமல், 'செல்பி' எடுத்துக் கொண்டிருந்தாராம். பா.ஜ., - எம்.பி.,க்கள் பலர், நிர்மலாவிடம் சென்று, 'அருமையாக பேசி, காங்கிரசுக்கு பாடம் எடுத்தீர்கள்' என, பாராட்டினராம். காங்., முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், நிர்மலாவைச் சந்தித்து, 'உங்கள் நாவில் உங்கள் மகள் குடியிருக்கிறாள்' என்றார்.நிர்மலா, புரியாமல் விழித்ததை புரிந்து கொண்ட ஜெய்ராம், 'உங்கள் மகளின் பெயர் வான்மஹி; அதற்கு அர்த்தம், சரஸ்வதி; உங்கள் நாவில் சரஸ்வதி குடியிருக்கிறாள். என்ன அருமையாக, புள்ளி விபரங்களுடன் பேசி அசத்தி விட்டீர்' என்றாராம்.ராகுலுக்கு நெருக்கமானவராக கருதப்படும், ஜெய்ராம் இப்படி வாழ்த்தியது, காங்., உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

தப்பித்த தமிழக தலைவர்கள்
தமிழக காங்கிரஸ் என்றாலே, கோஷ்டி பூசல், என அர்த்தம். தமிழக, காங்., தலைவரை நியமித்த உடன், 'இவரை மாற்றுங்கள்' என, டில்லிக்கு காவடி எடுப்பது, காங்., தலைவர்கள் வழக்கம்.தற்போதைய, காங்., தலைவர் திருநாவுக்கரசரை மாற்ற பல கோஷ்டியினரும் போராடி வருகின்றனர். 'திருநாவுக்கரசர் விரைவில் மாற்றப்படுவார்' என, ராகுலைச் சந்தித்த கோஷ்டியினர் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி. லோக்சபா தேர்தல் முடியும் வரை திருநாவுக்கரசர் மாற்றப்பட மாட்டாராம். ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது; இந்நிலையில் தலைவரை மாற்றினால், தேர்தலில் பிரச்னை வரும் என்பதால், இப்போதைக்கு மாற்றம் செய்ய வேண்டாம் என, ராகுல் முடிவெடுத்துள்ளாராம்; தப்பித்தார் திருநாவுக்கரசர். பா.ஜ.,விலும் இதே நிலைதான். 'தமிழிசையை தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும்' என, பா.ஜ., கோஷ்டிகளும், டில்லிக்கு படையெடுத்தன. கட்சி தலைமையும் மாற்ற தயாராக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், 'இப்போதைக்கு மாற்றம் வேண்டாம்; தேர்தலுக்கு பிறகுதான்' என, அமித் ஷா முடிவெடுத்து விட்டாராம்.லோக்சபா தேர்தலால், இரு தலைவர்களும் தப்பித்து விட்டனர்.
'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்'
லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., தயாராகிவிட்டது. தமிழக கட்சி தலைவர்களை, பிரதமர் மோடி சமீபத்தில் சந்தித்தார்.அப்போது, தமிழக அரசியல் நிலை குறித்து விவாதித்துள்ளார். 'எங்களுக்கு முக்கிய எதிரி ஸ்டாலின்; தி.மு.க., வெற்றி பெறாமல் தடுக்க, அனைத்து முயற்சிகளையும், பா.ஜ., எடுக்கும்; எடுத்து வருகிறது' என, மோடி தெரிவித்துள்ளார். மேலும், 'தமிழகத்தில், தேசிய கட்சியான, பா.ஜ.,விற்கு இடம் உள்ளது. கேரளாவில் சபரிமலை விவகாரத்தால் பா.ஜ.,விற்கு சக்தி கிடைத்துள்ளது; அதே போல், தமிழகத்திலும், பா.ஜ.,விற்கு சாதகமான நிலையை உருவாக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்' என, தன்னை சந்தித்த தமிழக தலைவர்களிடம் சொல்லியிருக்கிறாராம், மோடி.'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், தமிழக, பா.ஜ.,வினருடன், உரையாடி வருகிறார் மோடி. 'இதனால், தமிழகத்தில் அதிக விளம்பரம் கிடைக்கும்' என, எதிர்பார்க்கிறாராம், மோடி.நெருங்கினால் நெருக்கடிஎந்த ஒரு கட்சியிலும், கட்சி தலைவருக்கு நெருக்கமாக உள்ளோரை பார்த்து, மற்ற கட்சி தலைவர்கள் பொறாமைப்படுவர். 'நெருக்கமாக இருப்பவர்கள், பல விஷயங்களைச் சாதித்துக்கொள்வர்' என, மற்றவர்கள், கடுப்பில் இருப்பர். ஆனால், காங்கிரசில் அந்த பிரச்னை இல்லை. சச்சின் பைலட், ராகுலுக்கு நெருக்கமாக இருந்தார். ராஜஸ்தான், காங்., தலைவராக இருந்த பைலட், நிச்சயம் மாநில முதல்வராக வருவார் என, அனைவரும் நம்பினர். சச்சின் பைலட்டும் அப்படித்தான் நம்பினார். கடைசியில் கெலாட் முதல்வரானார்; பைலட் துணை முதல்வரானார். ஜோதிராதித்ய சிந்தியா, காங்., தலைவர் ராகுலுக்கு நெருக்கமானவர். இதனால், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் பதவி தனக்கு கிடைக்கும், என, அவர் ஆவலாக இருந்தார்.ஆனால், கட்சியில் மூத்தவரான, கமல்நாத்திற்கு பதவி கிடைத்தது. 'துணை முதல்வர் பதவியை எடுத்துக் கொள்ளுங்கள்' என, ராகுல் சொல்ல, சிந்தியா மறுத்து விட்டார்.தற்போது, மற்றொரு நெருக்கமானவருக்கும் பிரச்னை. காங்கிரசின் தலைமை செய்தி தொடர்பாளராக இருப்பவர் ரன்தீப் சுர்ஜேவாலா. ஹரியானா மாநில, காங்., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.ஹரியானாவில் ஜிந்த் சட்டசபை தொகுதி, எம்.எல்.ஏ., இறந்ததால், அங்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. 'ஜிந்த் தொகுதியில் நீங்கள் தான் போட்டியிட வேண்டும்' என, சுர்ஜேவாலாவிடம், ராகுல் சொல்லி விட்டார்.'நான் ஏற்கனவே, எம்.எல்.ஏ.,வாக இருக்கும் போது, மீண்டும், எம்.எல்.ஏ.,வாக போட்டியிட வேண்டுமா?' என, ராகுலிடம் கெஞ்சினார், சுர்ஜேவாலா. ஆனால், ராகுல் மறுத்துவிட்டார். இதனால் வெறுப்பில் இருக்கிறார், சுர்ஜேவாலா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X