சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

'வெற்றி பெறுவது எப்படி'

Added : ஜன 16, 2019
Share
Advertisement
'வெற்றி பெறுவது எப்படி'

கேள்வியாளர்: சத்குரு, 'வெற்றி பெறுவது எப்படி' போன்ற பல புத்தகங்கள், பகவத் கீதையில் பல அத்தியாயங்கள், டி.வி.யிலே பல குருமார்களின் சத்சங்கங்கள், அவர்கள் வழங்கும் அறிவுரைகள், போதனைகள் என பலவற்றைக் கேட்டாலும், படித்தாலும், சில சமயங்களில் அவற்றை எல்லாம் மறந்து குழம்பிப் போகிறேன். அதனால் நான் வாழ்வில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரேயரு அடிப்படையான விதியை மட்டும் எனக்குச் சொல்லுங்கள். அந்த ஒன்று எனக்கு ஞாபகம் இருந்து, நான் கடைப்பிடித்தாலே, நான் பொருள்நிலையிலும் ஆன்மீகநிலையிலும் வளர வேண்டும். அப்படி ஒன்றை எனக்குக் கூறுங்கள்.

சத்குரு: ஆக ஒரு ஃபார்முலா (சூத்திரம்) கேட்கிறீர்கள்! பல குருமார்கள் பல போதனைகள் சொன்னார்கள், அதையெல்லாம் மறந்துவிட்டேன் என்று சொன்னீர்கள். மறக்கக் கூடியவை என்றால், அவை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டிய அளவிற்கு ஒன்றும் முக்கியமானதாக இருந்திருக்க முடியாது. ஏதோ ஒன்று உங்களை மிக ஆழமாகத் தொட்டு, உங்களுள் மிக ஆழமாகச் சென்று, உங்கள் வாழ்வையே மாற்றவல்லதாக இருந்தால், அதை மறக்கவோ ஞாபகம் வைத்துக்கொள்ளவோ தேவை இருக்காது. அது உங்களில் ஒரு அங்கமாக மாறி இருக்கும்.

நீங்கள் பகவத்கீதையை படித்ததாகவும் சொல்கிறீர்கள். பகவத்கீதை, இயலாமையால் முற்றிலும் துவண்டுவிட்டிருந்த ஒருவனுக்கு நடத்தப்பட்ட பாடம். வாழ்வில் சாதித்தவர்களுக்கு 'அர்ஜுனா' விருதுகள் வழங்கப்படுகிறது என்று நான் அறிவேன். என்றாலும் தன்னுடைய வாழ்வில், அர்ஜுனன் ஒரு மாபெரும் தோல்விதான். தன் ராஜாங்கத்தை இழந்தான், தன் மனைவியை இழந்தான், தன் சொத்தை இழந்தான், தனக்கு முக்கியமாக இருந்த எல்லாவற்றையுமே அவன் இழந்தான். இப்படி எல்லாவற்றையும் இழந்தவன், மாபெரும் தோல்வியென உங்களுக்குத் தோன்றவில்லையா? உங்கள் வாழ்க்கையும் அவனைப் போல் இருக்கவேண்டும் என்றா நீங்கள் ஆசைப்படுவீர்கள்? இல்லை அல்லவா? ஆக, தம் வாழ்நாள் முழுவதும் தோற்று, தோல்வியின் சின்னமாக இருந்த ஒருவருக்குத் தான் கிருஷ்ணர் கீதையை பாடமாக வழங்கிக் கொண்டிருந்தார். அர்ஜுனனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், அவன் போரை வென்றதுதான். என்றாலும் கீதா உபதேசம் நிகழ்ந்தபோது, போர் இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை. அதனால் அந்த வெற்றியும் அவனிடம் அப்போது இல்லை. அதுவரையிலான அவனது வாழ்க்கை முழுவதும் தோல்வியால் நிறைந்திருந்தது. ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் நடக்கக் கூடாதோ, அது எல்லாமே அவனுக்கு நிகழ்ந்து விட்டிருந்தது.

பகவத் கீதையின் ஒரு துளியேனும் உங்களுக்குள் நுழையவேண்டும் என்றால், நீங்கள் அந்தக் கிருஷ்ணராகவே இருக்கவேண்டும். இல்லையெனில், அதை நீங்கள் புரிந்து கொள்ளமுடியாது. இப்போது பகவத்கீதையை படிப்பதும், அறிவால் புரிந்து கொள்ள முயல்வதும் பரவலாக நடந்து வந்தாலும், அதெல்லாம் முட்டாள்தனம். ஒரு உண்மையை அக்குவேறு, ஆணிவேறு என பிரித்து ஆராய முடியாது. அதை உணர மட்டுமே முடியும். உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளமுடியாது, அதில் கரைந்து போகத்தான் முடியும். உங்கள் கட்டுக்குள் அதைக் கொண்டுவர முடியாது, அதிலே கலந்துவிடத்தான் முடியும். நீங்கள் படித்துப் புரிந்துகொள்வதற்கு அல்ல பகவத்கீதை. நீங்கள் பகவத்கீதையாக மாறிவிடலாம், ஆனால் அதை புரிந்துகொள்ளவோ, கற்றுக்கொள்ளவோ முடியாது.

படைப்பைப் பற்றியும், படைத்தவர் பற்றியும் நீங்கள் அறியவேண்டும் என்றால், அந்த விபரம் எல்லாம் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய ஒரே இடம், உங்களுக்கு 'உள்ளே' மட்டும் தான். எந்த புத்தகமாக இருந்தாலும், அது எவ்வளவு பழமையானதாக இருந்தாலும், இன்னும் சொல்லப்போனால், அந்தப் புத்தகம் எவ்வளவு பழமை வாய்ந்ததோ, அந்த அளவிற்கு அது சிதைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆம், பல நூற்றாண்டுகளில் பலரின் சாயல் அதில் பதிக்கப்பட்டிருக்கலாம். பகவத்கீதையுமே கூட, கிருஷ்ணரால் எழுதப்படவில்லை, தெரியும்தானே! அவர் போர்க்களத்தில் அர்ஜுனருக்கு இதை வாய் வார்த்தையாகத் தான் வழங்கிக் கொண்டிருந்தார். அர்ஜுனனிடம் டேப் ரெக்கார்டர் கூட இல்லை, அதை அப்படியே பதிவு செய்வதற்கு. அப்படியென்றால், இதை யார் எழுதியது? இதை வேறொருவர் தான் எழுதினார். அதிலே எத்தனை அர்த்தப் பிழைகள் நேர்ந்திருக்கிறதோ... அதுவும் நமக்குத் தெரியாது. நிஜத்தில், அர்த்தப் பிழைகள் நேர்ந்திருக்கிறதோ இல்லையோ, மனிதர்கள் பிழை செய்யக் கூடியவர்கள்.

இன்று நீங்கள் கண்ணால் ஏதோ கண்டீர்கள், அதை உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொன்னீர்கள். அவர் வேறொருவருக்கு அதை சொன்னார். இப்படியே இருபத்தைந்து நபர்களிடம் சென்று, அடுத்த நாள் உங்களிடமே அது வருகிறது. நீங்கள் சொன்ன கதைதான் அது என்று உங்களால் அதை அடையாளம் காண முடியுமா? ஒவ்வொரு மனிதனும் ஒரு விஷயத்தை வாய்வழியாகப் பரப்பும்போது, அதை சற்று மிகைப்படுத்தியோ, அல்லது குறைத்தோ சொல்வதுண்டு. ஒரே விஷயம் வெறும் இருபத்திநான்கே மணி நேரத்தில், இருபத்தைந்தே மனிதர்கள் வழியாக வந்தாலும் அது முற்றிலுமாய் மாறிவிடுகிறது. நிலைமை இப்படியிருக்க, நம் இதிகாசங்கள் காலம்காலமாக, ஆயிரக்கணக்கானோர் கைகளில், வாய்களில் சிக்கி வந்திருக்கிறது. இதில் எத்தனை மாற்றங்கள் நடந்திருக்கக் கூடுமோ! ஒவ்வொரு தேர்தல் முடிவிலுமே கூட, பாடப்புத்தகங்கள் உருக்குலைவதில்லையா..? பழம்பெரும் வரலாறுகள்தான் மாறுகிறது என்றல்ல, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களே கூட புத்தகத்தில் முற்றிலுமாய் மாறிவிடுகிறது! ஐம்பது வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்று உங்களால் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியுமா? இதுபோன்ற ஒரு நிலை இருக்கும்போது, ஐயாயிரம் ஆண்டிற்கு முன்பு என்ன நடந்தது என்று யார் இங்கே சொல்வது? ஒரே ஒரு வார்த்தை தவறாகிப் போனாலே, ஏன் ஒரு வாக்கியத்தில் ஒரு நிறுத்தக் குறியீட்டை தவறான இடத்தில் பயன்படுத்தினாலே கூட, ஒரு வாசகத்தின் அர்த்தம் முழுமையாய் மாறிவிடுமே!
நீங்கள் படிக்கும் புத்தகங்களை எழுதியதும், இப்படி திரிபை உண்டுசெய்யக் கூடிய மனிதர்கள் தான். ஆனால் 'நான்' என்று நீங்கள் அழைக்கும் இந்தப் புத்தகத்தை (தன்னை நோக்கி சுட்டிக் காட்டுகிறார்), இந்த உயிரை, படைத்தவனே எழுதினான். இது தவறாக இருக்க முடியாது. இதில் எவ்வித சிதைவோ, அர்த்தப் பிழைகளோ கிடையாது. இதை எப்படிப் படிப்பது என்பதை மட்டும் நீங்கள் கற்றுக் கொண்டால் போதும்.

உயிரைப் படிப்பதுதான் இப்போது தேவையாக இருக்கிறது. அதற்காக கோஷங்களையோ ஊக்க வாசகங்களையோ தேடிப் போகாதீர்கள். கோஷங்களில் ஈடுபடுபவர்கள் மட்டற்ற முட்டாள்கள். கோஷங்கள் செய்தால் மக்களிடம் தன்னம்பிக்கை பிறக்கிறது. மக்களை ஊக்குவித்து ஒன்று திரட்ட வேண்டும் என்றால், கவர்ச்சியாக ஒரு கோஷத்தை உருவாக்கிக் கொண்டால் போதும். அதை வைத்தே மிக எளிதாக யார் வேண்டுமானாலும், எப்படிப்பட்ட காரியத்தை செய்வதற்கும், மக்களை ஒன்றுசேர்த்து விடலாம். மதம், சமுதாய மாற்றம், புரட்சி என்ற பெயர்களில் பல கோஷங்கள் இதுவரை உருவாக்கப் பட்டிருக்கின்றன. அதை வைத்து, மக்களை ஒன்றுதிரட்டி பல செயல்களில் ஈடுபடச் செய்துள்ளனர். ஆனால், இப்படி மக்களை ஒன்றாக சேர்த்து செயல்படும் போது, பலநேரங்களில் அது கொடூரமான சம்பவத்தில் தான் முடிந்திருக்கிறது. புத்திசாலித்தனமான செயல்கள் எப்போதுமே கோஷங்களை சார்ந்து பிறக்காது. ஒரு கூட்டத்தின் செயல் என்றாலே, பெரும்பான்மையான நேரம் அது நன்மை பயக்கக் கூடியதாக இருந்ததில்லை. அதனால் இன்னுமொரு கோஷத்தையோ, ஊக்க வாசகத்தையோ உங்களுக்கு உருவாக்கிக் கொள்ள நினைக்காதீர்கள். உங்களிடம் இருக்கும் எல்லா கோஷங்களையும், வாழ்க்கைக்கு நீங்கள் உருவாக்கியிருக்கும் திடீர் தீர்வுகளையும் உங்களிடம் இருந்து எடுத்துவிடவே நான் விரும்புகிறேன்.

உங்களுக்கு சொல்லித் தருவதற்கு என்னிடம் போதனைகள் எதுவுமே இல்லை, ஏனெனில் நான் படிப்பறிவில்லாத குரு. 'சத்குரு' என்றாலே படிப்பறிவில்லாத குரு என்றுதான் அர்த்தம். எனக்கு சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிஷதம் என எதுவுமே தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம், 'நான்' மட்டும்தான். அதுவே போதுமானது. எந்த சாஸ்திரம் சொல்வதையும் விட, இது மிக அதிகம். காரணம், இது படைப்பின் அங்கம்.

உங்களுக்குத் தேவை ஒரு செயல்முறை, கோஷங்கள் அல்ல. நம் வாழ்க்கையை ஒரு கோஷத்திற்குள்ளோ, ஊக்க வாசகத்திற்குள்ளோ அடக்கிவிட முடியும் என்றால், வாழ்க்கையை வாழ்வதிலேயே அர்த்தமில்லை. வாழ்க்கை மிக அற்புதமானது, ஆனந்தமானது, பல பரிமாணங்களைக் கொண்டது. இதை எந்த வகையான போதனையிலோ ஒரு வரி கோஷத்திலோ அடக்கிவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட செயல்முறைகளை பின்பற்றினால், அந்த பரிமாணங்களை அடைந்திடலாம். ஈஷா யோகா என்பது ஏதோ பாடமோ, போதனையோ அல்ல. அது ஒரு வழி. அதை ஒரு வழியாக பயன்படுத்திக் கொண்டால், அது நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். ஆனால் அதை ஒரு போதனையாக ஏற்றால், அது உங்கள் மனதில் நீங்கள் சேர்த்துக் கொண்ட இன்னுமொரு குப்பையாக ஆகிவிடும்.

அதனால் என்னிடம் போதனைகளே இல்லை. ஆனால் நீங்கள் விருப்பப்பட்டால், நீங்கள் சற்றும் எதிர்பார்க்க முடியாத இடத்திற்கு உங்களை நான் அழைத்துச் செல்ல முடியும். இதுவரை நீங்கள் கனவிலும் நினைத்திராத ஒரு சூழ்நிலையை, ஒரு சக்திநிலையை உங்களுக்குள் நீங்கள் உணர, என்னால் வழி செய்ய முடியும்.

சத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்ள வாருங்கள்
டிசம்பர் 17-18,
கோவை ஈஷா யோகா மையம்
விவரங்களுக்கு: 83000 83111

சத்குருவைப் பற்றி...
சத்குரு அவர்கள் ஒரு யோகியாகவும், ஞானியாகவும், ஆன்மீக குருவாகவும் திகழ்பவர். சிந்திக்கத் தூண்டும் அவரது அறிவுக்கூர்மையான பேச்சும், மனதைக் கவரும் நகைச்சுவை உணர்வும், படைப்பின் பல பரிமாணங்களை உணர்த்தும் மறைஞான அறிவும் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்களை அவர்பால் ஈர்த்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X