ஈரோடு: வயல்களுக்கு, செயற்கைக்கோள் உதவியுடன், தானியங்கி நீர் பாய்ச்சும் தொழில்நுட்பத்தை, விவசாயி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த தொழில்நுட்பத்தால், தண்ணீர் தேவை, 50 சதவீதம் குறைந்ததாக, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில், கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் உட்பட பல அணைகள் மூலம், 2.50 லட்சம் ஏக்கரில், நெல், கரும்பு, மஞ்சள், வாழை உட்பட ஏராளமான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக, போதிய மழை இல்லாததால், வறட்சி ஏற்பட்டு, விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். வறட்சியை சமாளிக்க, விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் முறையில், குறைந்தளவு பரப்பில் சாகுபடி செய்து வந்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த, ராஜகுமாரன் என்ற விவசாயி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன், செயற்கைக்கோள் உதவியுடன், பயிர்களுக்கு தன்னிச்சையாக நீர் பாய்ச்சும் முறையை உருவாக்கியுள்ளார்.
ராஜகுமாரன் கூறியதாவது:
அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் நீர் பாய்ச்சும் மோட்டாருடன், ஒரு மிஷினை பொருத்தி, அதை செயற்கைக்கோள் மூலம் இணைத்து விட வேண்டும். மொத்த வயல்களை யும், 5 வினாடிகளுக்கு ஒரு முறை, தொடர்ச்சியாக செயற்கைக்கோள் படங்கள் எடுத்து, விவசாய நிலத்தின் ஈரப்பதத்தைக் கண்காணித்து, தோட்டத்தின் எந்தப் பகுதிக்கு தண்ணீர் தேவைப்படுகிறதோ, அந்தப் பகுதிக்கு மட்டும், தேவையான அளவு நீரை தன்னிச்சையாக பாய்ச்சும்.
நீர் பாய்ச்சும் போது, நிலத்தின் உரிமையாளரின் மொபைல் போனுக்கு, நிலத்தின் இந்தப் பகுதியில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருப்பதாக, எஸ்.எம்.எஸ்., வரும். இவ்வாறு நிலத்தின் ஈரப்பதத்தை கண்காணித்து, பயிர்களுக்கு தேவைப்படும் போது, நீர் பாய்ச்சுவதால், நீர் தேவை பாதியாக குறைகிறது.மேலும், விவசாய நிலத்தை செயற்கைக்கோள், தொடர்ச்சியாக கண்காணித்து வருவதால், பயிர்களில் ஏதாவது மாற்றம் அல்லது பூச்சி தாக்குதல் ஏற்பட்டால், முன்னதாக விவசாயிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிப்பதால், பயிர்களை, நோய்கள் தாக்குவதில் இருந்தும் காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்
விவசாயி நந்தகுமார் கூறியதாவது:
என், 30 ஏக்கர் நிலத்தில், நீர் பாய்ச்சுவதற்கு, ஐந்து பேர் வேலை செய்து வந்தனர். எனினும் சில நேரங்களில், தண்ணீர் பாய்ச்ச சிரமம் ஏற்பட்டதால், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து தகவல் அறிந்து, அதை தோட்டத்தில் பயன்படுத்தினேன்.இவ்வாறு பயன்படுத்தியதால், 50 சதவீதம் தண்ணீர் மிச்சமானது. இதனால், கூடுதல் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்ய முடிந்தது. செயற்கைக்கோள் உதவியுடன், பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து காத்ததால், அதிக மகசூல் கிடைத்தது.இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயி அசோக்குமார் கூறியதாவது:
விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள இந்த சமயத்தில், செயற்கைக்கோள் உதவி யுடன்,வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருவதால், ஆட்கள் தேவை குறைந்து விட்டது.இந்த முறையை, என் தோட்டத்தில் பொருத்த, ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் ஆனது. ஒரு ஆண்டுக்கு செயற்கைக்கோள் மூலம், என் தோட்டத்தை கண்காணித்து நீர் பாய்ச்சுதல், பயிர்களுக்கு நோய் தாக்குதல் குறித்து முன்னரே அறிவிப்பது போன்றவைகளுக்கு பணம் செலவு இல்லை.
மேலும், ஓராண்டுக்கு பின், மாதம், 500 ரூபாய் மட்டுமே செலவு என்பதால், என் தோட்டத்தில் இந்த தொழில்நுட்பதைப் பயன்படுத்தி உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE