அவுரங்காபாத் : கர்நாடகாவில் காங் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு நிலையாக தான் உள்ளது. பா.ஜ., தான் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது என கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை பா.ஜ., திட்டவட்டமாக மறுத்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், கர்நாடகாவில் நிலையான ஆட்சி நடப்பதை பா.ஜ., விரும்பவில்லை. மக்களின் எண்ணத்திற்கும் அவர்கள் மரியாதை அளிக்கவில்லை. சூழ்நிலையை மாற்றி, ஆதாயம் காண நினைக்கிறார்கள். ஆனால் ஒன்றும் நடக்காது. 2 சுயேட்சை எம்எல்ஏ.,க்கள் ஆதரவை திரும்பப் பெற்றது குறித்து கவலை இல்லை. அவர்கள் தற்போது வரை எங்களுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள். விரைவில் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. ஒரு எம்எல்ஏ கூட ராஜினாமா செய்ய மாட்டார்.
அரசியல் என்பது சதுரங்கம் போன்றது. கால்பந்து இல்லை. நாங்கள் ஆட்சியை இழப்போம், பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஒரு போதும் நாங்கள் நினைக்க மாட்டோம். மக்களின் தீர்ப்பை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். ஆனால் காங்.,ன் குற்றச்சாட்டை பா.ஜ., மறுத்துள்ளது. இது குறித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், நாங்கள் யாருடனும் பேசவில்லை. முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் தான் அமைச்சர் பதவி மற்றும் பணம் தருவதாக கூறி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.