பொது செய்தி

தமிழ்நாடு

ஆல்கொண்டமால் கோவில் திருவிழா கோலாகலம்! பாரம்பரியம் காக்க திரண்ட மக்கள்

Added : ஜன 17, 2019
Advertisement
 ஆல்கொண்டமால் கோவில் திருவிழா கோலாகலம்! பாரம்பரியம் காக்க திரண்ட மக்கள்

உடுமலை:உடுமலை, சோமவாரபட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா 'களை' கட்டியது. பல ஆயிரக்கணக்கான மக்கள், பால் அபிேஷகம் செய்தும், உருவாரங்கள் நேர்த்திக்கடன் செய்தும் வழிபட்டனர்.உடுமலை அருகேயுள்ள சோமவாரப்பட்டியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவிலில், பாரம்பரிய விழாவான, தமிழர் திருநாள் திருவிழா, நேற்றுமுன்தினம், உழவர் திருநாள் பூஜையுடன் துவங்கியது.
நேற்று அதிகாலை, சுவாமிக்கு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. அதிகாலை முதலே, உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள், பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். பெரும்பாலான விவசாயிகள், ரேக்ளா வண்டிகளில், கோவிலுக்கு வந்தனர்.கால்நடை செல்வங்கள் செழிக்கவும், கால்நடைகளை நோய், நொடிகள் அண்டாமல் பாதுகாக்கவும், வேளாண் வளம் சிறக்கவும், கறந்த பாலை கொண்டு வந்து சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் கொண்டு வந்த லட்சக்கணக்கான லிட்டர் பால் அபிேஷகம் நாள் முழுவதும் நடந்தது.
மலைபோல் குவிந்த உருவாரங்கள் கால்நடைகளுக்கு பிணி தீரவும், கால்நடை செல்வம் பெருகவும், மாடு, ஆடு, கன்றுடன் கூடிய கறவை பசு, நாய், சேவல், குதிரை என, கால்நடை உருவாரங்கள் வாங்கி வந்து, பாம்புக்கு பால் கொடுக்கும் பசு சிலை அருகே வைத்து உருவார பூஜை நடத்தினர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உருவாரங்கள் மலைபோல் குவிந்திருந்தன.தைமாதம் முதல்நாள் பிறக்கும், கன்றுகள், ஆல்கொண்டமாலுக்கு சொந்தம் என்பதால், கன்றுகள், ஆடு ஆகியவற்றை, கோவிலுக்கு வழங்கினர். பக்தர்கள் வழங்கிய கால்நடைகள் கோசாலையில் பெறப்பட்டன.அணிவகுத்த சலகெருதுகள் சுற்றுப்புற கிராமங்களில், நாட்டு மாட்டு இனங்களை பாதுகாக்கும் வகையில் உள்ள, கிராமத்திற்கு பொதுவாக வளர்க்கப்படும் சலகெருதுகள் வளர்க்கப்படுகிறது. சுற்றுப்புற கிராம மக்கள், நேற்று சலகெருதுகளை அழைத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.உருமி இசையுடன், சலகெருது மறித்தல் விளையாட்டும், தேவராட்டம் ஆடியும் குதுாகலமாக வந்து, சலகெருதுகளுடன் கோவிலை வலம் வந்தனர். பின்னர் ஆல்கொண்டமால் முன்பு அழைத்து வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து சலகெருதுகள் வந்திருந்தன; அதற்கென, தனி வழி அமைக்கப்பட்டிருந்தது.மக்கள் நெரிசலில் கோவில் வளாகம் பாரம்பரியமாக நடக்கும் இந்த விழாவிற்கு, அதிகாலை முதலே, கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர்.
பல மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர்.காணும் பொங்கலன்று திருவிழா நடப்பதால், பொழுது போக்கு அம்சங்கள், திருவிழா கடைகளால், கோவில் வளாகம் 'களை' கட்டியது. நேர்த்திக்கடன் செலுத்தும் உருவாரங்கள் விற்பனைக்கடைகள், தேங்காய், பழம், பூக்கடைகள், உணவு பண்டங்கள், மாடுகளுக்கு தேவையான கயிறுகள், உழவுக்குத்தேவையான உபகரணங்கள் விற்கும் கடைகள் நுாற்றுக்கணக்கான கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் ராட்டிணங்கள், சிறுவர் விளையாட்டு உபகரணங்களில் மகிழ்ச்சியாக விளையாடினர். பொங்கலுக்கே அடையாளமாக உள்ள கரும்பு விற்பனை கடைகள் அதிகளவு காணப்பட்டன. கரும்புகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X