சவால் அதிகம்!| Dinamalar

சவால் அதிகம்!

Added : ஜன 18, 2019

தமிழகத்தில், திருவாரூர் சட்டசபை தேர்தல்நடைபெறாது என்ற தேர்தல் கமிஷன் அறிவிப்பு,பல்வேறு அரசியல் கட்சிகளின் வரவேற்பை பெற்றிருக்கிறது. இது சட்டசபையில், ஆளும், அ.தி.மு.க., அரசுக்கு ஒரு சாதகமே.ஏனெனில், மொத்தம், 21 எம்.எல்.ஏக்கள், 'சீட்' காலியாக இருக்கும், 234 பேர் கொண்ட சட்டசபையில், முதல்வர் பழனிசாமி, இன்னமும் தன், 'மெஜாரிட்டி'யை இழக்கவில்லை. அதேசமயம், முக்கிய எதிர்க்கட்சியான, தி.மு.க., தங்கள் கருவூலமாக, திருவாரூரை கருதுகிறது.அத்தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பு வந்ததும், தங்கள் வேட்பாளராக, பூண்டி கலைவாணனை களமிறக்கி, பிரசாரமும் நடத்தியது.இனி அடுத்ததாக, முறைப்படி தேர்தல் வரும்போது,இத்தொகுதி வேட்பாளாராக இவர் தொடர்வது சந்தேகமே.திருவாரூர் தொகுதியுடன், திருப்பரங்குன்றம் உட்பட, 20 தொகுதிகளின் தேர்தல் எப்போதுஎன்பது முடிவாகும் முன், லோக்சபா தேர்தல் ஜுரம்அதிகரித்து விடும். தேர்தல் கமிஷன், இத்தொகுதி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு காரணமாக, 'கஜா' புயல் பாதிப்பை அகற்றும் பணியில், மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் இருப்பதால், அப்பணிகள் நிறைவேற, தேர்தல் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது.அ.தி.மு.க.,விற்கு, இத்தொகுதிக்கான வேட்பாளர் தேர்வு, ஒரு பிரச்னையாக இல்லை. ஆனால், ஜெயலலிதா வென்ற, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற தினகரன், திருவாரூர் தொகுதியும் தனக்கு கிடைக்கும் என, ஆசைப்படுகிறார். அதற்கேற்ற கட்சியின் பின்புலம் என்ன என்று, கணக்கிடவில்லை.இன்றைய நிலையில், இச்சட்டசபையில் கவர்னர்உரை, அதற்குப்பின் அமைச்சர்கள் தந்த தகவல்கள், இதுவரை அதிகம் காணப்படாத முறையில், சில செயல் விளக்கங்களை கொண்டிருந்தன. 'கவர்னர் உரை, வெற்று உரை' என, எதிர்க்கட்சிகள் கூறுவதும், ஆளும் கட்சியின் பட்ஜெட்,'வெத்து வேட்டு' என்பதும், எளிதான வார்த்தைப்பிரயோகங்கள்.இச்சட்டசபைக் கூட்டம் நடக்கும் போதே, பொங்கல் பரிசாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பொருட்கள் பையுடன்,௧,௦௦௦ ரூபாய் தர அரசு முன்வந்ததை, ஐகோர்ட்தடுத்து, பின் அனுமதித்ததும், குழப்பத்தை தருவன. இந்த ரூபாயை அனைவருக்கும் தர, அரசு ஒரு நடைமுறையை உருவாக்காவிட்டால், சந்தேகம் வரும்.அடுத்த பட்ஜெட், அளவுக்கு அதிகமான நிதிப்பற்றாக்குறையை நோக்கி நகரும் போது, பொங்கல்பரிசு, ௧,௦௦௦ ரூபாய் என்பது அதிகம். அதோடு, நியாய விலைக் கடையில், அரிசி அளவை குறைக்கப் போவதில்லை என, அரசு அறிவித்திருக்கிறது. இவை, ஜெயலலிதா பின்பற்றிய, 'இலவச ரகங்கள்' தொடர்வதன் அடையாளம்.மேலும், அரசு ஊழியர்களுக்கு, 30 நாள் பொங்கல் போனஸ், புதிதாக அரசு பஸ்கள் என, அதிக செலவினம் என்ற முடிவுகள், 700 நாளுக்கு மேல் முதல்வராக நீடித்து சாதனை புரிந்த முதல்வர், அரசியல் காய் நகர்த்தும் கலையில் சிறந்ததன் அறிகுறி எனலாம்.அது மட்டும் அல்ல, மத்திய அரசின் சொல்கேட்கும் வகையில், அ,தி.மு.க., இல்லை என்பதன் அடையாளமாக, மேகதாது அணைவிவகாரத்தில், பார்லிமென்டில் எதிர்ப்பை உணர்த்திய விதம் முக்கியமானது. தவிரவும், முற்பட்டவகுப்புஏழைகளுக்கு, 10 சதவீத இடஒதுக்கீடுஎன்ற மத்தியஅரசின் முடிவை, அ.தி.மு.க., விமர்சித்த போது, 'ஜாதி ஒழிந்தால், நீதி ஓங்கும்' என்ற வகையில், திராவிடக் கட்சிகள் கருத்தை வெளிப்படுத்திஇருக்கிறார்.ஓட்டுவங்கியாக தமிழகத்தில், ஜாதிகள் போற்றப் படவில்லையா? தவிரவும், வங்கிக் கடன் பெற்றுதிரும்பச் செலுத்தாதவர்களில் எத்தனை பேர்,வளர்ந்த, 'கிரீமி லேயர் 'என்ற வசதியான வகுப்பினர்என்பதற்கு, எங்கே புள்ளி விவரம் இருக்கிறது?இன்றைய நிலையில், ஆதார் அடையாள அட்டை, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு, பட்டா எண் வாங்க, கணினி நடைமுறைகள், பொருளாதார குற்றங்களை தடுக்க வேண்டிய கட்டாயம் ஆகியவை, தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.ஆனாலும், டெண்டர் ஊழல் புகார்கள், நிர்வாக இயந்திரத்தில் ஏற்கனவே உள்ள குளறுபடிகளின் தொடர்ச்சி, அதிக கிரிமினல் குற்றங்கள், சைபர் கிரைம் அதிகரிப்பு ஆகியவை, தமிழகத்தில் இருக்கின்றன.இவைகளுக்கு விடையாக, தேர்தல் இருக்கலாம் அல்லது தேர்தலில் மக்கள் வேறுவிதமாக ஒட்டளிக்க முயன்றாலும், அது முற்றிலும் மாறுபடலாம். அதற்கு, லோக்சபா தேர்தல் முந்தி வருமா அல்லது காத்திருக்கும் சட்டசபைதொகுதிகள், 21ம் அதனுடன் சேருமா என்பதைப்பொறுத்து, பல விடைகள் கிடைக்கும்.அதோடு, தமிழக பட்ஜெட் காட்டும் வளர்ச்சித் திட்டங்களுக்கு, போதிய நிதி எப்படி கிடைக்கும் என்பதையும், ஸ்திரத்தன்மையை நோக்கிப் பயணிக்கும் தமிழக அரசுக்கு, அதிக சவால்களாக மாறலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X