எப்படியாவது ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள எதிர்க்
கட்சிகள்; பிரதமர் பதவியை அடைவதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ள, பல கட்சிகளின் தலைவர்களால், நாட்டிற்கு அவப்பெயர் ஏற்பட்டு விடுமோ என, அஞ்சத் தோன்றுகிறது.அந்த அளவுக்கு, மத்திய அரசு மீதும், நாட்டின் பிரதமர் மீதும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து
அவதுாறுகளை அள்ளி வீசி வருகின்றன.
'ரபேல்' போர் விமானம் கொள்முதல் விவகாரத்தை எழுப்பி, அதே புகாரை தொடர்ந்து சொல்லி,
மக்களை குழப்பி, குளிர்காய நினைக்கின்றன.இதனால், நாட்டின் பெயர், புகழ், வெளிநாடுகளில் பாதிக்கப்படுமே... பிற நாட்டினர் நம்மை கேவலமாக பேசுவரே என்ற எண்ணம், எதிர்க்கட்சிகளுக்கு இல்லாமல் போயிற்று; பதவி ஆசை, கண்ணை மறைக்கிறது.
உண்மை பேசுகிறவர்களுக்கு இல்லாத வசதி, பொய் பேசுகிறவர்களுக்கு உண்டு. உண்மையை
இப்படித் தான் பேச முடியும்; ஆனால், பொய்யை எப்படி வேண்டுமானாலும் பேசலாம்; ஆதாரம்
வேண்டாம்; பொறுப்பேற்க வேண்டாம்.இத்தகைய சூழலில், உண்மை பேசுபவர்களின் நிலை, கொஞ்சம் பரிதாபமானது தான். தன்னை திட்டுகிறவன் பயன்படுத்தும் அதே வார்த்தைகளில், திருப்பி திட்ட முடியாது; ஆதாரம் இல்லாமல் குற்றசாட்டுகள் கூற முடியாது.
தன் மீது சுமத்தப்படும் பொய் குற்றசாட்டுகளை, ஒரு முறை மட்டுமே மறுக்க முடியும்; தொடர்ந்து மறுத்து வந்தால், வேறு வேலையே பார்க்க முடியாது.மேலும், அதுவே மக்கள் மனதில் சலிப்பையும், அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தி விடும்.பொறுப்பான மனிதர்கள், எல்லா விஷயங்களையும், பொது வெளியில் பேச மாட்டார்கள். அது போல, எல்லா
விஷயங்களையும், எல்லாரிடமும் சொல்லி விட மாட்டார்கள்.பிரதமர் பதவியில் இருப்பவருக்கு, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பை பாதிக்கிற விஷயங்களில், ரகசியம் காக்க வேண்டியது அவசியம்.
இது போல, உண்மை பேசுகிறவர்களுக்கு, பல தர்ம சங்கடங்கள் உண்டு. ஆனால், ராகுல் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, புகார்களை கூறுவதில், புழுதி வாரி துாற்றுவதில், தர்மமும் கிடையாது; தர்ம சங்கடமும் கிடையாது.அதனால் தான், பிரான்ஸ் நாட்டிலிருந்து, 'ரபேல்' போர் விமானங்கள் கொள்முதலில், மத்திய அரசு எவ்வித முறைகேடும் செய்யவில்லை' என, உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், மத்திய அரசு மீது ஏதாவது, ஒரு ஊழல் புகாரை கூற வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து, சொன்னதையே, திரும்பத் திரும்ப கூறி வருகிறது, காங்கிரஸ்.
இதில், உண்மை வெல்லுமா, எதிர்க்கட்சிகளின் பொய் வெல்லுமா என்பது, போகப் போகத் தான் தெரியும்.
இதற்கிடையே, மத்திய அரசு மீது, காங்கிரஸ் சாட்டும் குற்றச்சாட்டுகளில் மற்றொன்று, விவசாய கடன் தள்ளுபடி விவகாரம். விவசாயிகளின் கடன்களை, மத்திய அரசு மற்றும், பா.ஜ., ஆளும் மாநிலங்கள், தள்ளுபடி செய்யவில்லை என்பது, இப்போது கூறப்படும் முக்கியமான குற்றச்சாட்டு.அரசு கஜானாவிலிருந்து பணத்தை செலவு செய்வது, பெரிய சாதனையா என்ன... யார் வேண்டுமானாலும் செய்ய முடியுமே... பணத்தை அரசு கஜானாவில் சேர்ப்பது தான் கடினமே தவிர, செலவு செய்வது கடினமே அல்ல.
மக்கள் தரும் பணத்தை, முறையாக முதலீடு செய்வதும், சிக்கனமாக செலவு செய்வதுமே, திறமையான அரசுக்கு அழகு.தவிர, இலவசத்திற்கும், கடன் தள்ளுபடிக்கும், செலவு செய்வதற்கு, திறமை தேவையில்லை; ஊதாரித்தனமான மனம் இருந்தாலே போதும். இதை தான், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், 'சாதனை' என, தம்பட்டம் அடித்து கொள்கின்றன.
ஒரு நல்ல பிரதமரின் செயல், குடிமக்களிடம் நேர்மையையும், உழைப்பையும், பொறுப்புணர்வையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும்; அன்றி, பேராசையையும், அலட்சியத்தையும், சோம்பேறி தனத்தையும் வளர்ப்பதாக இருக்க கூடாது.மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்
மாநிலங்களில், பா.ஜ., விடமிருந்து ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ், 'விவசாய கடன்களை
தள்ளுபடி செய்கிறோம்' என, அறிவித்தது. அது போல, மத்திய அரசும், பாஜ., ஆளும் பிற மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என, வலியுறுத்துகிறது.
அவர்கள் கேட்பது போல, விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்து விடுவது நல்லதா...
இந்த விவகாரத்தை அலசுவோம்.விவசாயம் செய்யும் விவசாயிகள் அனைவருமே, கடன் வாங்கி விவசாயம் செய்வதில்லை. அவர்களில், 10 - 25 சதவீதம் பேர் மட்டுமே, விவசாய கடன் என்ற பெயரில், வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். மீதி பேர், கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதித்த பணத்தை சேமித்து, அதையே முதலீடாக்கி, விவசாயம் செய்கின்றனர்.
வெள்ளம், வறட்சி அல்லது இயற்கை சீற்றங்கள் போன்றவற்றின் போது, விவசாய கடன் வாங்கியவர்களும் பாதிக்கப்படுகின்றனர்; கடன் வாங்காதவர்களும் நஷ்டப்படுகின்றனர். வங்கிகளில் விவசாய கடன் பெற்றவர்களுக்கு, கடன் தள்ளுபடி ஆகிறது என, வைத்துக் கொள்வோம்...கடன் வாங்காத, 75 - 90 சதவீத விவசாயிகளும் பாதிக்கப்படத் தான் செய்கின்றனர். அவர்களுக்கு, அரசுகள் தரும் மரியாதை என்ன... அவர்களின் இழப்புகளை யார் ஏற்பது?
விவசாய கடன் வாங்கியவர்களில் கூட, வசதியானவர்கள் பலர் இருக்கலாம்; இழப்பை தாங்க கூடிய சிலர் இருக்கலாம். விவசாய கடன் வாங்கி, அந்த பணத்தை, வேறு வகையில் பயன்படுத்தியவர்களும் இருக்கலாம்.உண்மையாகவே விவசாயிகள் மீது, ஒரு அரசுக்கு அக்கறை இருக்குமானால், விவசாயம் செய்வதை எளிதாக்கும் வகையில் திட்டமிட வேண்டும்; விளை பொருட்கள் வீணாகாதவாறு கட்டமைப்பு வசதிகள், குளிர்சாதன கிடங்குகள், போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
புதிய நீர் பாசன திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்; ஏரி, குளங்களை துார் வாரி, மழை நீரை சேமித்து, முப்போகம் விளைச்சலை உறுதி செய்ய வேண்டும். அது போல, அரசு திட்டங்களில் விவசாயிகளுக்கு, முன்னுரிமையும், மரியாதையும் கொடுக்கலாம்.இப்படி பல வழிகளில், விவசாயத்தையும், விவசாயிகளையும், கவுரவிக்கலாம். அதன் மூலம், விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தலாம்.
ஆனால், இப்படி எந்த ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் செய்யாமல், கடன் தள்ளுபடி என்ற, கண் துடைப்பு நாடகத்தை, காங்கிரஸ் மாநில புதிய முதல்வர்கள் நடத்தி உள்ளனர்.நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யக்கூடிய, எந்த உருப்படியான யோசனைகளும், இல்லாத தலைவர்களுக்கு தான், இது போன்ற பொறுப்பற்ற யோசனைகள் வரும்.
கடன் கொடுத்து உதவும் நிதி அமைப்புகள் உருவாக்கபட்டதன் நோக்கம், கடன் வாங்கியர்கள், கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்பதே. அப்போது தான், மேலும் பலருக்கு கடன் வழங்க முடியும். இந்த சுழற்சி தொடர்ந்தால் மட்டுமே, கடன் தேவைப்படும் அனைவருக்கும் தொடர்ந்து சேவை கிடைக்கும்; அதன் மூலம் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
அப்படி இல்லாமல், கடன்களை தள்ளுபடி செய்து விட்டால், அந்த நிதி அமைப்பே முடங்கி விடும் அல்லது, மீண்டும் கடன் வழங்க முடியாத நிலை ஏற்படும்; அந்த அமைப்பின் ஊழியர்களுக்கும், அலட்சியம் வந்து விடும்.மேலும், பணம் சம்பாதிக்கும் ஆசையும் துளிர் விடும்; லஞ்சமும், ஊழலும் பெருகும். எதிர் காலத்தில், கடன் வாங்குகிறவர்கள் கூட, திருப்பி செலுத்தும் மன நிலையில் இருக்க மாட்டார்கள்.
கடன் வாங்கினால், தள்ளுபடி ஆகி விடும் என்ற மன நிலை ஓங்கி விடும். இதனால், கடனே வாங்கக் கூடாது என, உறுதியாக இருப்பவர்களுக்கு கூட, 'நாமும் கடன் வாங்கி இருக்கலாமே...' என்ற உறுத்தல் ஏற்படும். மொத்தத்தில், மக்கள் மனதில் பேராசையும், பொறுப்பற்ற தன்மையும் வளருவதற்கு, கடன் தள்ளுபடி காரணமாகி விடும்.இதற்கு மாறாக, வட்டி தள்ளுபடி, தவணை காலம் நீட்டிப்பு என, விவசாயிகளின் பாரத்தை குறைக்க முயலலாம். இதுவே, நல்ல அரசு செய்ய வேண்டிய காரியம்.
இன்னொரு வகையில் பார்த்தால், நம் நாட்டில் ஏழைகள் அதிகமாகவும், விஞ்ஞான முறையிலான விவசாய விழிப்புணர்வு குறைவாகவும் உள்ளது.இத்தகையோர் அதிகம் வாழும் நாட்டில், விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி நியாயமில்லை. அது, கஷ்டங்களை அனுபவிக்கும், பிற துறைகளில் இருப்பவர்களின் மன நிலையில் பாதிப்பைஏற்படுத்தும்.
விவசாயிகள் மட்டுமல்ல, நெசவாளர்கள், சிறு வணிகர்கள், கூலி தொழிலாளர்கள் நிரம்பியது, நம் நாடு. மேலும், குறைந்த சம்பளத்தில் நிரந்தரமற்ற வேலைகளில் இருப்பவர்கள், நோய் மற்றும் முதுமை காரணமாக உழைக்க முடியாதவர்கள் என, பல தரப்பினர், நம் நாட்டில் உள்ளனர்.
கடன் வாங்கி கஷ்டப்படுவது; கடனை திருப்பி செலுத்த முடியாமல்
உடமைகளை இழப்பது; சொத்துகளை இழப்பது; குடும்பத்தை தொடர்ந்து நடத்த வழி தெரியாமல் தவிப்பது, விவசாய துறையில் மட்டும் இல்லை...வர்த்தக கடன், நகைக் கடன், வாகன கடன், அடமான கடன், வீட்டுக்கடன், தனியார் கடன் என, பல கடன்களை வாங்கி, வாழ வழியின்றி தவிப்பவர்களும், நம் நாட்டு பிரஜைகள் தான். அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கடமையும், அரசுகளுக்கு இருக்கிறது.
இப்படி எல்லாம், பிரச்னைகளை ஆழமாக புரிந்து, சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் திட்டங்களை தான், அரசுகள் தீட்ட வேண்டும். மாறாக, அலங்காரமான, ஆசையை துாண்டுகிற,
அடிமைத்தனத்தை வளர்க்கிற திட்டங்களை அறிவிப்பது, ஓட்டுகளை தந்தாலும் தருமே தவிர, நாட்டிற்கு வளர்ச்சி தராது.அரசியல் பேசும் பலருக்கு, நிர்வாக விஷயங்களில் புரிதல் இருக்காது. எதிர்க்கட்சிகள் சொல்வதையும், கட்சி சார்புள்ள செய்திகளையும் நம்பாமல், நடுநிலையாளர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை, பொதுமக்கள், பார்க்க வேண்டும்.
அதற்கு மேலாக, எந்த விஷயத்தையும், சொல்பவர்களின் யோக்கியதை என்ன என, பார்க்க வேண்டும். அவர்களின் கடந்த கால செயல்கள், ஆட்சியில் இருந்த போது, நடந்து கொண்ட முறை, செயல்படுத்திய திட்டங்கள், செய்த ஊழல்களை நினைத்து பார்க்க வேண்டும்,
'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு' என்ற
திருக்குறளை எப்போதும் மறக்கக் கூடாது.
தெளிவான தொலை நோக்கு பார்வை கொண்ட தலைவர்களால் மட்டுமே, வலிமையான நாட்டை உருவாக்க முடியும். வலிமை மிகுந்த நாடு மட்டுமே, அமைதியான வாழ்க்கையையும், வளர்ச்சியையும், மக்களுக்கு தர முடியும். சுய லாபமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் தலைவர்களால், நாட்டில் குழப்பம் தான் ஏற்படும்.
குழப்பம் மிகுந்த நாடு, எதிரி நாடுகளுக்கு விரைவில் அடிமையாகும்; எதிரிகளின் தலையீடு இருக்கும் நாட்டில், வளர்ச்சி இருக்காது; அமைதி இருக்காது; மக்களுக்கு மகிழ்ச்சியும் இருக்காது.மக்களின் விழிப்புணர்வு ஒன்றே, நாட்டின் எதிர்காலத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல உதவும். சிந்திக்க வேண்டியது தலைவர்கள் அல்ல; மக்கள் தான்!
இ -மெயில்:
bjpratnam@gmail.com
மொபைல் போன்: 98408 82244