இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள்!| Dinamalar

இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள்!

Added : ஜன 26, 2019 | கருத்துகள் (6) | |
தமிழகத்தில், 25 - 30 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போன்ற, வேலையில்லா திண்டாட்டம் போன்ற நிலைமை, மீண்டும் மாநிலத்தை கவ்வியுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை; கிடைத்தாலும், போதிய சம்பளம் இல்லை என்ற நிலை, பரவலாக காணப்படுகிறது.குறிப்பாக, பட்டப்படிப்பு மற்றும் இன்ஜினியரிங் படிப்பை, சுமாராக படித்த மாணவர்களுக்கு, தகுந்த வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. இது, சில ஆண்டு களாக
இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள்!

தமிழகத்தில், 25 - 30 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போன்ற, வேலையில்லா திண்டாட்டம் போன்ற நிலைமை, மீண்டும் மாநிலத்தை கவ்வியுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை; கிடைத்தாலும், போதிய சம்பளம் இல்லை என்ற நிலை, பரவலாக காணப்படுகிறது.குறிப்பாக, பட்டப்படிப்பு மற்றும் இன்ஜினியரிங் படிப்பை, சுமாராக படித்த மாணவர்களுக்கு, தகுந்த வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. இது, சில ஆண்டு களாக இருந்தாலும், இப்போது தான், அதன் பாதிப்பு, அனைத்து தரப்பினருக்கும் தெரிய வந்துள்ளது.நகர்ப்புறங்களில் வசிக்கும் படித்த இளைஞர்கள், 'ஸ்விக்கி, சோமாடோ, யுபர் ஈட்ஸ்' என, ஏதாவது ஒரு, உணவு, 'சப்ளை' இணையதள நிறுவனத்தில் வேலை பார்த்து, ஏதோ கொஞ்சம் சம்பளத்தை ஈட்டி விடுகின்றனர். ஆனால், கிராமப்புறங்களில் வசிக்கும், படித்த இளைஞர்களின் பாடு தான், மிகவும் கஷ்டம்.பத்தாண்டுகளுக்கு முன், கம்ப்யூட்டர் பற்றி தெரிந்திருந்தால் அல்லது கம்ப்யூட்டர் மொழி ஏதாவது ஒன்றை அறிந்திருந்தால் போதும்... சென்னை, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களில், நல்ல வேலை கிடைத்தது; நம் வீட்டு பிள்ளைகள், கை நிறைய சம்பாதித்தனர்.அதன் பிரதிபலிப்பு, நம் இல்லங்களிலும், தெருக்களிலும், மாநிலத்திலும் தென்பட்டது. ஆனால், இப்போதோ, பெரும்பாலான, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இழுத்து மூடப்பட்டு விட்டன.'சாப்ட்வேர்' எனப்படும், மென்பொருள் தயாரிப்பு வல்லுனர்கள் ஆவதற்கு, சிறப்பாக படித்திருக்க வேண்டும்; அதிக மதிப்பெண்ணுடன், திறனும் இருக்க வேண்டும். பி.பி.ஓ., எனப்படும், தொலைபேசியில் பேசி, இன்சூரன்ஸ், கிரெடிட் கார்டு போன்றவற்றை விற்கும் வேலை மட்டும் தான், கம்ப்யூட்டர், 'பீல்டி'ல், தற்போது எளிதாக கிடைக்கிறது.அதுவும், மிகவும் குறைந்த சம்பளம் தான். பி.பி.ஓ., வேலைக்கு, 10 ஆண்டுகளுக்கு முன், குறைந்தபட்ச சம்பளம், 20 - 25 ஆயிரம் ரூபாய் என, இருந்தது. இப்போது, சாதாரண, நடுத்தர நிறுவனங்களில், 8 - 10 ஆயிரம் ரூபாய் தான் கொடுக்கின்றனர்.
எனினும், அந்த சம்பளத்திற்கும், போட்டி அதிகம் உள்ளது தான் கொடுமை.லட்சக்கணக்கில் செலவு செய்து, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படித்து, பட்டம் பெற்ற, பல இளைஞர்கள், வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். இந்த உண்மையை, பல இளைஞர்களை சந்தித்து, கேட்டறிந்தேன். அவர்கள் சொல்லும் தகவல், கண்ணீரை வரவழைக்கிறது.'ஏன்டா படித்தோம்... பெற்றோர் சொன்னதால், இந்த படிப்பை படித்து, கஷ்டப்படுகிறோமே... வேலை கிடைக்காமல் ஒவ்வொரு இடத்திலும் அவமானப்படுகிறோமே...' என, இளைஞர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.சராசரியாக நம் ஒவ்வொருவர் வீடுகளிலும், கடந்த சில ஆண்டுகளாக, இந்த குரல் கேட்கத் துவங்கியுள்ளது.கேரள மக்கள் போல, குறைந்தபட்ச படிப்பு படித்து, தொழிற்கல்வி கற்றதும், வெளிநாடுகளுக்கு சென்று, கையில் கிடைத்த வேலையை பார்க்க, தமிழக இளைஞர்களுக்கு தெரியவில்லை. படித்த படிப்பிற்கு, உள்ளூரில் அல்லது பக்கத்து மாநில நகரங்களில், வேலை கிடைக்கும் என, காத்திருக்கின்றனர்.படித்து முடித்தவுடன், தகுந்த வேலை கிடைக்காத விரக்தியில், தடம் மாறி, தறி கெட்டு, சமூகத்தில் சீரழியும் முன், அந்த இளைஞர்களை காப்பாற்ற வேண்டியது, மத்திய, மாநில அரசுகளின் கடமை. அரசுகளுக்கு வலியுறுத்த வேண்டியது, 'ஓட்டு' என்ற ஆயுதத்தை கையில் வைத்துள்ள, நம் பொறுப்பு.கடந்த, 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, 'ஒவ்வொரு ஆண்டும், இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்' என, மோடி அறிவித்தார். அந்த கால கட்டத்தில், தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, பல லட்சம் கோடி ரூபாய்க்கு, தமிழகத்தில் புதிய தொழில்கள் துவங்கப்படும் என்றார்.அதற்காக, பல, பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். அந்த வேலை எல்லாம், இப்போது எங்கே போயிற்று என்றே தெரியவில்லை. இப்போது மீண்டும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள், மாநாடு, நடந்து முடிந்துள்ளது.இதாவது, தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த காலத்தில், 10ம் வகுப்பு அல்லது, பிளஸ் 2 படித்து முடித்ததும், தட்டச்சு, சுருக்கெழுத்து படிப்பில் இளைஞர்கள் இறங்கினர்; படித்து முடித்ததும், ஏதாவது ஒரு வேலை கிடைத்தது.ஆனால், இப்போதைய நம் இளைஞர்கள், தட்டச்சும் படிப்பதில்லை; சுருக்கெழுத்தும் படிப்பதில்லை. 'ஸ்மார்ட்' மொபைல் போனில், 'டைப்' செய்வதோடு சரி!படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதற்காக, 'எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச்' எனப்படும், மாநில அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்கள், எல்லா நகரங்களிலும் உள்ளன. அவற்றால், படித்த இளைஞர்களுக்கு பயன் இருக்கிறதா என்பது, கேள்விக்குறியாகவே உள்ளது.தமிழக அரசில், வேலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய நடத்தப்படும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள், நியாயமாக நடத்தப்படுகிறதா... அதனால் எத்தனை பேர், வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்ற கேள்விக்கும், சரியான பதிலில்லை.'அவருக்கு இவ்வளவு லட்சம் ரூபாய் கொடுத்து, வேலை வாங்கி விட்டான்... இவருக்கு, இவ்வளவு லட்சம் ரூபாய் கொடுத்து, பணியில் சேர்ந்து விட்டான்...' என்ற பேச்சுகள் தான் உலா வருகின்றன. இதனால், நம் இளைஞர் பட்டாளம் வேதனை அடைந்துள்ளது.போதாக்குறைக்கு, நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளையும், புதிய திட்டங்களையும், தமிழ் உணர்வு, ஜாதி, மத, 'போர்வையாளர்கள்' இழுத்து மூடச் செய்கின்றனர். மேலும், புதிய திட்டங்களுக்கு முன்னோடியாக, சாலை விரிவாக்கம், மின் தட விரிவாக்கம் போன்றவற்றிற்கும், எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அப்பாவிகளை துாண்டி விட்டு, அதனால் அரசியல் லாபம் அடையும் போலி தலைவர்களால் பாதிக்கப்படுவது, நம் இளைஞர்கள் தான் என்பதை, இனி மேலாவது, போர்வையாளர்கள் மற்றும் பிரிவினை உணர்வாளர்கள் உணர்வரா?இளைஞர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தின் நிலை உள்ளது. அதற்கு காரணங்களும் உள்ளன...சமீப காலமாக, தமிழகத்தில் பெரிய அளவில், எந்த தொழில் நிறுவனமும், தொழில் தொடங்கவில்லை. மத்திய, மாநில அரசு வேலைகளில், சொற்பமானவர்களே சேர்கின்றனர். அரசு நிறுவனங்களில், தடாலடியாக, ஆட்குறைப்பு செய்கின்றனர்.படித்த இளைஞர்களுக்கு தான், சரியான வேலை கிடைக்கவில்லை என்றால், குறைவாக படித்தவர்களுக்கும், வேலை இல்லாத நிலை தான் காணப்படுகிறது. சாதாரண, கொத்து வேலை, ஓட்டல், 'சர்வர்' வேலை, முடி திருத்தும் வேலை, தெருக்களில் வியாபாரம் போன்றவற்றில், வட மாநில மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் இளைஞர்கள் தான், பெரும்பாலும் உள்ளனர்.அவர்கள் மாநிலத்தில் நிலைமை இன்னும் மோசம் போலும்... அதனால் தான், நம் ஊர்களுக்கு வந்து, கிடைக்கும் கொஞ்ச சம்பளத்தில், அந்த இளைஞர்கள் வேலை பார்க்கின்றனர்.குறைவான சம்பளம் கொடுத்தால் போதும்; சலுகைகள் எதிர்பார்க்க மாட்டார்கள்; அடிக்கடி, 'லீவு' போட மாட்டார்கள் என்பதால், வட மாநில, வட கிழக்கு மாநிலங்களின் இளைஞர்களுக்கு, நம் ஊர்களில், வேலை எளிதாக கிடைக்கிறது.இது போன்ற பல காரணங்களால், இன்ஜினியரிங் மற்றும் பட்ட, பட்ட மேற்படிப்பு படித்த தமிழக இளைஞர்கள், 5,000 - 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு, கம்ப்யூட்டர் மற்றும் பிற நிறுவனங்களில் வேலை பார்க்க வேண்டிய நிலை உள்ளது.நிலைமை இவ்வாறு இருக்க, சென்னையில் நடந்து முடிந்த, உலக முதலீட்டாளர் மாநாட்டில், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், முதலீடு குவிந்துள்ளதாக, முதல்வர், பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.ஆனால், முந்தைய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தொழில் துவங்க முன் வந்த நிறுவனங்களில், பாதி தான், சொன்னபடி துவக்கியுள்ளன என்ற தகவல் வெளியாகி, அதிர்ச்சியை அளிக்கிறது.அது போக, ஏற்கனவே பல ஆண்டுகளாக, இந்த மாநிலத்தில் செயல்பட்ட, பல தொழிற்சாலைகள், பக்கத்தில் உள்ள, ஆந்திராவுக்கு சென்று விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.முந்தைய காலங்களில், தேர்தல்களின் போது, தேர்தல் அறிக்கைகளில், வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை கொடுப்பதை பார்த்துள்ளோம். ஆனால், சமீப காலமாக, இலவசங்களும், கவர்ச்சி திட்டங்களும் தான், தேர்தல் அறிக்கையில், பிரதான இடத்தை பிடிக்கின்றன.இந்த செயலை, ஓட்டு போடும் இயந்திரங்களான, அப்பாவி பொதுமக்கள், கண்டும், காணாமல் இருந்ததால் தான், இப்போது, நம் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.அரசுகள் செய்யும் ஒவ்வொரு தவறும், நம் எதிர் கால சந்ததியினரை தான் பாதிக்கும் என்ற உணர்வு, இனிமேலாவது நமக்கு வர வேண்டும். தொழில் வளம் தான், நாட்டில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.சிறு குண்டூசி தயாரிக்கும் தொழிற்சாலையும், மூடப்படக் கூடாது என்பதில், நாம் உறுதியாக இருக்க வேண்டும். 'சுற்றுச்சூழலுக்கு மாசு... இயற்கைக்கு எதிரானது' என்ற கோஷமெல்லாம், நம் இளைஞர்களை அழிக்கும் விஷம் என்பதை, இனிமேலாவது உணர வேண்டும்.தொழில் வளத்தால், அபரிமித வளர்ச்சியை அடைந்துள்ள, அண்டை நாடான சீனா, சுற்றுச்சூழல் பிரச்னையையும், சிறப்பாக சீர் செய்து வருகிறது. முதலில் நாம், தொழில் வளத்தில் வளர்ந்து காட்டு வோம்; அதன் பிறகு, சுற்றுச்சூழலுக்கு எதிரான விஷயங்களில் கவனம் செலுத்துவோம்.அரசியல் காரணங்களுக்காகவும், ஜாதி, இன விரோதங்களுக்காகவும், தொழிற்சாலைகள் மற்றும், 'மெகா' திட்டங்களுக்கு எதிராக, போர்க்கொடி துாக்குவோரை, அடையாளம் கண்டு, விரட்டி அடிப்போம்.அதே நேரத்தில், நம் இளைஞர்கள், வேலை கிடைக்கும் தொழில்களுக்கான படிப்புகளை, தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். உலக அளவில், எந்தெந்த படிப்புகளுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை அறிந்து, அதில் சிறப்புற வேண்டும்.அதற்காக, கடினமாக உழைக்க வேண்டும். பெற்றோர் பணத்தை வாங்கி, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் கொடுத்து விட்டு, வெறும் கையுடன் வெளியே வந்து, வேலை தேடிக் கொண்டிருக்காதீர்கள்.வெளியே வரும் போதே, வேலையுடன் வாருங்கள். அதற்காக, கண்ணும், கருத்துமாக படியுங்கள். பெயருக்கு முன், 'இன்ஜினியர்' அல்லது பெயருக்கு பின், பி.ஏ., - எம்.ஏ., என, போட்டுக் கொள்ளலாம் என நினைத்து, இனிமேலும் ஏமாந்து போகாதீர்.இ - மெயில்: pvssaravan@gmail.comமொபைல் எண்: 9789919720

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X