சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

மாணவர்கள் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி?

Added : ஜன 27, 2019
Share
Advertisement
மாணவர்கள் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி?

கேள்வி : சத்குரு, தோல்வியில் இருந்து மீள்வது எப்படி? இன்றைய காலகட்டத்தில் நிறைய மாணவர்கள் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த நிலையிலிருந்து எப்படி அவர்களை மீட்பது?

சத்குரு :
தோல்வி என்றால் என்ன? நீங்கள் எப்படி நினைத்தீர்களோ, ஒருசெயல் அப்படி நடக்காவிட்டால் அதை தோல்வி என்று கருதுகிறீர்கள். உலகில் எல்லா விஷயங்களும் நீங்கள் நினைக்கும் விதமாக நடக்கும் என்று அவசியமில்லை. உலகம் ஒருபோதும் நீங்கள் நினைக்கும் விதமாக 100% நடந்து விடாது.

ஓரளவுக்கு வேண்டுமானால் நீங்கள் விரும்பும் விதமாக நடத்தலாம். உங்கள் வாழ்வில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அடிப்படையாக நலவாழ்வையும், மகிழ்ச்சியையும் தேடுவதாகத்தான் இருக்கிறது. கல்வி கற்பது, வேலைக்கு செல்வது அல்லது தொழில் தொடங்குவது, குடும்பங்களை உருவாக்குவது, உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது போன்ற எல்லா விஷயங்களுமே நலவாழ்வையும், மகிழ்ச்சியையும் தேடித்தான். எனவே, உங்கள் செயலின் நோக்கம் மகிழ்ச்சியும், நலவாழ்வும்தான். அவற்றை வெளிப்புற செயல்களின் மூலமாக அணுகுவதைவிட, நேரடியாகவே அதை அணுகலாம்.

மகிழ்ச்சியை பல விதங்களில் பார்க்க முடியும். இன்றைய நாளில் இதை நீங்கள் மருத்துவரீதியாகக் கூட புரிந்து கொள்ள முடியும். எதை நீங்கள் 'மகிழ்ச்சி' என்று சொல்கிறீர்களோ, அது உங்கள் உடலுக்குள் உள்ள ஒரு இரசாயனம். எதை நீங்கள் 'அமைதி' என்று சொல்கிறீர்களோ, அதுவும் கூட உங்கள் உடலுக்குள் உள்ள ஒருவிதமான இரசாயனம். எதை பதற்றம், பயம், கோபம், துன்பம் என்று சொல்கிறீர்களோ, அவை ஒவ்வொன்றும் இரசாயனத்தின் அடிப்படையைக் கொண்டிருக்கின்றன. வெளிச்சூழலை நமக்கு வேண்டும் விதமாக உருவாக்கிக்கொள்ள, வெளிச்சூழலில் நமக்கு தேவைப்படும் வசதியையும், சௌகரியத்தையும் உருவாக்கிக் கொள்ள எப்படி அறிவியலும், தொழில்நுட்பமும் உள்ளதோ, அதே போல உள்சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வதற்கும் ஒரு விஞ்ஞானம் உள்ளது. உங்களுக்கு எப்படி தேவையோ, அப்படி உள்சூழலை உருவாக்கிக் கொள்ள உதவும் அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் நீங்கள் கண்டறிந்து கொண்டால், உங்கள் தன்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் வெற்றி, தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை.

வாழ்க்கையில் எல்லாம் உங்கள் திறமையைச் சார்ந்து நடக்கிறது. உங்கள் திறமையை மேம்படுத்துவதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர்வதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்து, தற்செயலாக வேறு இடத்தை சென்றடைந்து விட்டால் நீங்கள் எப்போதும் பயத்திலேயேதான் இருப்பீர்கள். உங்கள் திறமையின் காரணமாக ஒரு இடத்தை நீங்கள் அடைந்திருந்தால், அப்போது ஒரு சில சூழ்நிலைகள் தவறாக போனாலும் கூட இன்னொரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுவது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது. எனவே, தோல்வி என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்றால், நீங்கள் நினைத்த விதமாக ஒரு சில விஷயங்கள் நடக்காமல் இருப்பதைத் தான்.

எந்த சூழ்நிலையும் நீங்கள் நினைத்தவிதமாக 100% நடக்க வாய்ப்பில்லை என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓரளவுக்கு மட்டுமே அது நீங்கள் நினைக்கும் விதமாக நடக்கும். வெளிப்புற சூழ்நிலைகள் எப்போதுமே இப்படித்தான் நடக்கும். உங்கள் மகிழ்ச்சி, உங்கள் அமைதி இவையெல்லாம் வெளிச்சூழலுக்கு அடிமைப்பட்டிருக்கும் போது உங்கள் மகிழ்ச்சி, உங்கள் நலவாழ்வு என்பது தற்செயலான ஒன்றாகத்தான் இருக்கும். வெளிப்புற சூழல்கள் 100% நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், உள்சூழ்நிலையில் முழுமையாக கட்டுபாட்டை நம்மால் எடுத்து வரமுடியும். வெளியே யாரும் அல்லது எதுவும் நீங்கள் விரும்பும் விதமாக நடக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நீங்களாவது, இந்த ஒரு உயிராவது முற்றிலும் நீங்கள் விரும்பும் விதமாக நடக்க வேண்டியது அவசியம். நீங்கள் விரும்பும் விதமாக இது நடக்குமானால், இதை ஆனந்தமாக வைத்துக் கொள்வீர்களா? அல்லது துன்பமாக வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? நிச்சயமாக ஆனந்தமாகத்தான். உங்கள் தன்மையிலேயே நீங்கள் மகிழ்ச்சியானவராக இருந்தால், உங்களுடைய உடல் மற்றும் மனதின் திறன்கள் அதன் முழுமையான ஆற்றலோடு வெளிப்படும்.

உங்கள் வாழ்வில் நீங்கள் எவ்வளவு செய்திருக்கிறீர்கள், எவ்வளவு செய்யவில்லை என்பதெல்லாம் ஒரு பிரச்சனையில்லை. 'நீங்கள் யார்' என்பதன் முழுத் தன்மையையும் வெளிப்படுத்தி, முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி பார்த்திருக்கிறீர்களா? ஒருவர் அவரது உள்நிலை ஆற்றலை முழுமையாய் வெளிப்படுத்த முடிந்தால் அவர் முற்றிலும் 'ஆசிர்வதிக்கப்பட்டவர்' என்று சொல்லலாம். அதை தேடித்தான் நீங்கள் பயணிக்க வேண்டும். மற்றவர்களைப் போல் இருக்க முயற்சிக்க வேண்டியதில்லை. மற்றவர்கள் அடைந்த இலட்சியங்களை நோக்கி நீங்களும் பயணிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய முழுத் திறன் வெளிப்படுவதற்கு அனுமதியுங்கள். உங்கள் உள்தன்மையில் போதிய கவனம் செலுத்தி, உங்கள் தன்மையின் மூலமாகவே அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கினால் மட்டுமே இது சாத்தியம். அப்படி நடக்கும் போது தான் உங்களுடைய முழு ஆற்றலும் வெளிப்படும். அதுதான் முழுமையான வாழ்க்கை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X