அஷ்டவதானி... அனைத்து கலைகளையும் செய்பவருக்கு இந்த சொல் சொந்தம். இது அருண்காந்திற்கும் சொந்தமானதுதான். கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, தயாரிப்பு, இயக்குனர், டப்பிங், சவுண்ட் இன்ஜினியரிங் என சினிமா பட டைட்டில் போல் அனைத்தையும் தனி ஒருவனாக செய்து தனது முதல் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இந்த 31 வயது இளைஞர். சண்டே ஸ்பெஷலுக்காக அவரிடம் பேசினோம்...
* சினிமா மீது ஆர்வம் எப்படி?நான் கோவையைச் சேர்ந்தவன். படிக்கும் போதே சினிமா மீது ஆர்வம். எம்.பி.ஏ., படித்தாலும் சினிமாதான் என முடிவு செய்து இத்துறைக்கு வந்துவிட்டேன்.
* சினிமாவில் நுழைந்த பின்னணி குறித்து?முதலில் வீட்டில் சவுண்ட் ஸ்டூடியோ அமைத்தேன். அதில் டப்பிங் செய்தேன். அடுத்து எடிட்டிங் கற்றுக்கொண்டேன். பின் இயக்குனராக வேண்டும் என நினைத்து சென்னைக்கு பயணமானேன். 'மீன்குழம்பும், மண்பானையும்' படத்தில் முதன்முதலில் சவுண்ட் இன்ஜினியராக வேலை செய்தேன்.
* எப்படி 16 பிரிவுகளின் வேலைகளையும் ஒரே ஆளாக செய்தீர்கள்?யாரிடமும் நான் உதவியாளராக இருக்கவில்லை. ஸ்டில் போட்டோகிராபி முதற்கொண்டு அனைத்தையும் யூ டியூப்பில் கற்றுக் கொண்டேன். கற்ற விஷயங்களை அன்றே செய்து பார்ப்பேன். இந்த அனுபவ அறிவு எனக்கு கை கொடுத்தது.
* முதல் படம் தலைப்பே 'கோக்கு மாக்கு' ஆக இருக்கிறதே?படத்தின் பெயர் கோக்கே மாக்கோ. கைக்குள் அடங்கும் கோப்ரோ கேமராவிலேயே 12 நாட்களில் படத்தை எடுத்தேன். ஒரு மியூசிக் டைரக்டர் எப்படி டைரக்டரானார் என்பதை காதல் கலந்து சொல்லி உள்ளேன். மேற்கு தொடர்ச்சி மலை, காடு, அருவியில் ஷூட்டிங் எடுத்துள்ளேன். படம் கோக்கு மாக்கா இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தலைப்பை வைத்தேன். பிப்.,14ல் ரிலீஸ் ஆக போகுது.
* 12 நாட்களில் எப்படி முடிக்க முடிந்ததுசொத்துக்களை வங்கியில் அடகு வைத்து 35 லட்சம் ரூபாய் கடன் பெற்று நானே தயாரித்து 12 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டேன்.
* பட்ஜெட் இடித்திருக்குமே?சரத்குமாரின் அண்ணன் மகன்தான் ஹீரோ. மற்ற கேரக்டர் எல்லாம் தினச்சம்பளத்திற்கு நடித்து கொடுத்ததால் பட்ஜெட்டிற்குள் படம் முடிந்தது. போஸ்ட் புரொக்டஷனுக்கு 40 லட்சம் ரூபாய் ஆகும். எனது ஸ்டூடியோவில் நானே செய்ததால் அந்த செலவும் மிச்சமானது.
* இயக்குனரானது ஏன்?உதவி இயக்குனர்களிடம் நல்ல கதைகள் இருந்தும் தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க முன் வருவதில்லை. அதனால் அவர்களால் குறிப்பிட்ட இடத்தை அடைய முடியவில்லை. அதை தவிர்க்கவே நானே என் படத்திற்கு தயாரிப்பாளராகி விட்டேன்.
* நீங்கள் நடிக்க மட்டும்தான் செய்யலை...யாரு சொன்னா... எனது படத்தில் நான் இல்லாமலா... என சிரிக்கிறார் அருண்காந்த்.இவரை பாராட்ட 99447 42045
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE