பாவையில் தெறிக்கும் கத்தியின் கூர்மை...பேச்சில் பட்டென வெடிக்கும் நேர்மை...உள்ளே துடிக்கும் இதயமும் துல்லியமாய் நடிக்கும், திரையில் திறமைகள் எல்லாம் துள்ளி குதிக்கும், ஒவ்வொரு கேரக்டர்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்...என பாராட்ட தூண்டி 'வாவ்' என்று நடிப்பால் வியக்க வைக்கும் நடிகை லதா ராவ் பேசுகிறார்...
* எங்கே இருக்கீங்க பார்க்கவே முடியலை ?நான் இங்கேயே தான் இருக்கேன்...சீரியல்க்கு தான் பெரிய பிரேக் விட்டாச்சு. மலையாளத்தில் 'சுவாமி ஐயப்பா ' சீரியல் ஆன்மிக கதையாக இருப்பதால் மட்டும் நடிக்குறேன். சினிமாவில் நடிச்சுகிட்டு தான் இருக்கேன்.
* நீங்கள் நடிக்கும் படங்களின் பட்டியல் ?'எட்டு' படத்தில் ரோபோ சங்கருக்கு ஜோடி, 'சீறு' படத்தில் முக்கிய கேரக்டர் பண்றேன். இந்த இரண்டு படங்களில் புதுமுக ஹீரோயின்களுக்கு அக்காவா நடிச்சிருக்கேன்.
* தமிழில் தமிழ் தெரியாத ஹீரோயின்கள் ?எனக்கு கூட தான் மலையாளம் தெரியாது; மலையாளத்தில் நடிக்குறேனே...அந்த மாதிரி தமிழ் தெரியாத ஹீரோயின்களும் தமிழ் கொஞ்சம் கற்றுக் கொண்டு நடிக்குறாங்க. சந்தோஷம், கோபம், அழுகை போன்ற உணர்வுகள் எல்லா மொழி படத்திலும் ஒரே மாதிரி தான் இருக்கும். கலைக்கும் கலைஞனுக்கும் மொழிகள் இல்லை.
* நீங்கள் நடித்ததில் பேசப்படும் படம் ?தில்லாலங்கடி யில் வடிவேலு கூட காமெடி கேரக்டரில் நடித்ததால் இன்று வரை மக்கள் பேசுறாங்க. பாராட்டுறாங்க.
* சினிமாவில் உங்கள் விருப்பம் என்ன ?சினிமாவில் மட்டும் தான் ஒரு நாள் டாக்டரா இருக்கலாம், மறுநாள் வக்கீலா வரலாம், அம்மா, அக்கா, மகள் என பல அவதாரங்கள் எடுக்கலாம். அதனால், எனக்கு ஒரு விருப்பமும் இல்லை. கிடைக்குற கேரக்டர்களை சிறப்பா பண்ணினா போதும்.
* உங்களுக்கு என்று ஒரு தனித்துவம் ?பல படங்கள் ஹீரோயினா நடித்த நயன்தாராவுக்கே லேடி சூப்பர் ஸ்டாராக இவ்வளவு நாள் ஆகியிருக்கு. நமக்கெல்லாம் தனித்துவம் கிடைக்க இன்னும் எத்தனை நாள் ஆகுமோ... அப்படி கிடைச்சா சந்தோஷம் தான். எல்லா நடிகைகளும் அதுக்கு தானே வெயிட் பண்றாங்க.
* கணவரும் நீங்களும் ஒரே கலர் டிரஸிங் ?கணவர் ராஜ்கமல் என்கிட்ட காதல் சொல்லும் போது எங்களுக்கே தெரியாமல் ஒரே கலரில் டிரஸ் பண்ணி இருந்தோம். அன்று முதல் வெளியே போகும் போதெல்லாம் ஒரே கலரில் டிரஸ் பண்ணிக்குவோம். எண்ணங்கள் மட்டுமில்ல; எங்கள் வண்ணங்களுக்கும் ஒற்றுமை இருக்குது.
* பிப்.,14 காதலர் தினம் கொண்டாட்டம் ?காதலர் தினம், அன்னையர் தினம், பெண்கள் தினம்...இதெல்லாம் வெளிநாட்டுக்காரன் பரப்பிவிட்டது. பெண்கள் தினத்தில் பெண்களை கொண்டாடிவிட்டு மறுநாள் தூக்கி வீசிடலாமா...எனக்கு தினங்களே பிடிக்காது. எனக்கு தினமும் காதலர் தினம் தான்.
* பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ?பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு ஆண்கள் மட்டும் காரணமல்ல. வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆண்களும் இருக்குறாங்க. சினிமா என்பதால் எங்களுக்கு நடக்கும் வன்முறை பளிச்சென தெரிகிறது. குழந்தைகளுக்கு நல்லது, கெட்டதை சொல்லி கொடுத்து விழிப்புணர்வுடன் வளர்த்தால் இனி வரும் காலங்களில் வன்முறையை ஒழிக்கலாம்.