பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட என கோலிவுட்டின் புதிய வரவாக இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவரது தந்தை கஜராஜ். 'நானும் மதுரைக்காரன் தான்,' என மதுரையின் பெருமை பேசுபவர்களில் ஒருவர்.
இவரும் நடிகர் தான். மகன் இயக்கிய முதல் படமான 'பீட்சா' இவருக்கும் முதல் படம். சூது கவ்வும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், ரஜினி முருகன், முண்டாசு பட்டி உட்பட 37 படங்களில் அப்பா, போலீஸ் அதிகாரி, கலெக்டர் என பல்வேறு குணசித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே பாராட்டு பெற்று வருகிறார்.
அவர் கூறியது: மகனாக இருந்தாலும் நடிக்க வாய்ப்பு கொடு என கேட்பதற்கு முன் ஆயிரம் முறை யோசித்தேன். ஏனென்றால் ஒரு வேளை, ''உனக்கெல்லாம் நடிப்பு சரிப்பட்டு வராது. ஒழுங்கா மெடிக்கல் பிசினைஸபார்,'' என மகன் கூறி விட்டால் என்ன செய்வது?. எனினும் மனதில் தைரியத்தை வரவழைத்து, ''தம்பி... எனக்கு நடிக்கனும்ன்னு ஆசையா இருக்கு! நீ விரும்பினால் நான் நடிக்க தயார்,'' என கேட்டே விட்டேன். எனது பதிலை அவர் ஏற்கனவே எதிர்பார்த்தது போல் சிரித்தார். ''சரி உங்க விருப்பம். சென்னைக்கு வாங்க ஸ்டுடியோவில் வைத்து ஆக்ட் ட்ரைலர் பார்ப்போம். ஒரு டேக்... அதிகபட்சம் இரண்டு டேக்... எடுத்துக்கோங்க... ரிசல்ட் பார்த்து உங்க நடிப்பு ஒகேனா... பார்க்கலாம்,'' என்றார்.
சென்னையில் மகன் கூறிய ஒரு ஸ்டுடியோவிற்கு சென்றேன். அங்கு எரியும் லைட் வெளிச்சம், சினிமாவுக்கே உரிய ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களை கண்டு சற்று ஆச்சரியமாகவும், பிரம்மிப்பாகவும் இருந்தது. இது ஒரு தனி உலகம், என அப்போது புரிந்து கொண்டேன். வசனம் ஒன்றை கொடுத்து, இந்த ஒரு வசனத்தை வைத்து நீங்களே பல விதமாக நடித்து காட்டுங்கள், என்றனர். வசனத்திற்காக நடிக்காமல் இயற்கையாக பேசி நடித்தேன். ஒரு டேக் போதும் என்றனர். அதை என் மகனிடம் திரையிட்டு காட்டியுள்ளனர். வீட்டிற்கு வந்த சுப்பு, ''டாட்... யு ஆர் செலக்ட்டட்' என்றார். எனக்கு துாக்கி வாரிப்போட்டது. சுப்பு இயக்கிய முதல் படம் 2012 ல் வெளியான 'பீ்ட்சா'வில் எனக்கு வாய்ப்பு வழங்கினார். தொடர்ந்து 37 படங்களில் வெற்றி முகமாக சினிமாவில் வலம் வருகிறேன். தற்போது ஐந்து படங்களில் நடித்து வருகிறேன்.
சினிமா உலகில் கார்த்திக் சுப்புராஜ் தடம் பதிக்க காரணமாக இருந்தவர் தயாரிப்பாளர் சி.வி. குமார். இவர் தான் 'பீட்சா' தயாரிப்பாளர். இவரை பற்றி சுப்பு பேசாத நாளே இல்லை எனலாம். சுப்புவின் பள்ளி காலம் முதல் பி.இ., பட்டம் பெற்றது வரை அனைத்தும் மதுரை தான். சின்னத்திரை நடத்திய 'நாளைய இயக்குனர்' போட்டியில் இலங்கை தமிழர் பிரச்னையை மையமாக கொண்டு குழந்தைகளை வைத்து 'காட்சிப்பிழை'எனும் பெயிரில் சுப்பு இயக்கிய முதல் குறும்படம் 'பெஸ்ட் டைரக்டர்' விருதை பெற்று தந்தது. அதிலிருந்து அவரது திரைவாழ்க்கை துவங்கியது. சுப்பு சென்னையில் செட்டிலாகி விட்டார்.
மதுரைக்கு வரும் போதெல்லாம் சுப்புவும், நானும், மதுரை ரசிகர் மன்ற நிர்வாகிகள் வசந்தகுமார், பால்பாண்டி, அழகர்சாமி ஆகியோருடன் இணைந்து ஆதரவற்றோர் இல்லம், மனநலம் குன்றியோர், முதியோர்களுக்கு முடிந்தளவு உதவிகளை செய்கிறோம். இது மனித நேயத்தையும், மன நிறைவையும் தருகிறது. மெடிக்கல் ரெப்பாக எனது வாழ்க்கையை துவங்கி நடிகனாக உயர்ந்துள்ளேன். சினிமாவில் எனது குரு கார்த்திக் சுப்புராஜ் தான். எனினும் மெடிக்கல் தொழிலை விட வில்லை.
இவரை வாழ்த்த spgajaraj@yahoo.co.in என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE