'விடிய... விடிய... வெட்டாட்டம்' விடியலை தேடி அதிகாரி திண்டாட்டம்!

Added : ஜன 29, 2019
Advertisement
கலெக்டர் ஆபீஸ் முன், 'ஜாக்டோ-ஜியோ'வின் மறியல் போராட்டம் காரணமாக, சித்ராவும், மித்ராவும் மாற்றுப் பாதையில் சென்றனர்.குளிர் காலம் முடியப்போவதாலோ என்னவோ, வெயில் கொளுத்தியது. களைப்பாக இருந்ததால், இருவரும் அருகிலிருந்த ஜூஸ் கடைக்குள் சென்றனர். ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர்.''மனிதநேயமே இல்லாம போச்சே....'' என்று ஆரம்பித்தாள் மித்ரா.''ஏண்டி, இவ்வளவு
'விடிய... விடிய... வெட்டாட்டம்' விடியலை தேடி அதிகாரி திண்டாட்டம்!

கலெக்டர் ஆபீஸ் முன், 'ஜாக்டோ-ஜியோ'வின் மறியல் போராட்டம் காரணமாக, சித்ராவும், மித்ராவும் மாற்றுப் பாதையில் சென்றனர்.

குளிர் காலம் முடியப்போவதாலோ என்னவோ, வெயில் கொளுத்தியது. களைப்பாக இருந்ததால், இருவரும் அருகிலிருந்த ஜூஸ் கடைக்குள் சென்றனர். ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர்.

''மனிதநேயமே இல்லாம போச்சே....'' என்று ஆரம்பித்தாள் மித்ரா.

''ஏண்டி, இவ்வளவு சலிச்சுக்கற... மனிதநேயம் இல்லைனு நீ எங்க பார்த்தாய்''

''கலெக்டர் ஆபீசில, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆண்டுதோறும் மனிதநேய வாரவிழா கொண்டாடுவாங்க. மத்திய, மாநில அரசு திட்டம், மாவட்டத்துல நடந்த ஆதிதிராவிடர் நலவிழானு, 100க்கும் அதிகமான படங்களோட, திட்ட அறிவிப்புகளோட, கண்காட்சி நடக்கும்''

''இதற்காக, உடுமலை செட்டில்மென்ட் பகுதி மக்களை அழைத்து வந்து, கலை நிகழ்ச்சி நடத்தி, விழா நடத்துவாங்க.ஆனா, இந்த வருஷம் மறந்துட்டாங்க. தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் வந்தன்னைக்கு, மூணு பேனர் கட்டி வச்சு, விழா நடத்தி, ஜோலிய முடிச்சுட்டாங்க''

''அதிகாரிங்க.. இப்டித்தான், இருப்பாங்க,'' என்ற சித்ரா, ''ஏம்பா.. இ-சேவை மையத்தில் கூட்டம் அதிகமாக இருக்குதே. என்ன காரணம்?''

''இல்லக்கா... நானும் 'இ-சேவை' மையத்துக்கு போயிட்டு வந்துட்டு இருக்கேன்... இப்பவெல்லாம், ஆடிட்டர் ஆபீஸ்ல வேலை பார்க்றவங்க, அடிக்கடி வந்துட்டு போறாங்க,''

''அவங்க எதுக்கு வர்றாங்க,''

''ஜி.எஸ்.டி., வந்த பின், 'ரிட்டர்ன்' வாங்கறதுக்கு, சம்பந்தப்பட்ட வரித்துறையில 'கமிஷன்' மூலமாக ஒப்புதல் வாங்கிடறாங்க. அடுத்ததா, அந்த 'பைல்' கருவூல மேஜைக்கு போயிடுது''

''அந்த டேபிளில் இருந்து சீக்கிரமா நகர மாட்டேங்குதாம்... அதுக்காகத்தான், ஆடிட்டர் ஆபீஸ்காரங்க, நேர்ல வந்து, கணக்கு 'டேபிளில்' கணக்கு பார்த்து, 'பைலை' நகர்த்றாங்களாம்,''

''அவங்க சலுகைக்காக, அரசு அலுவலருங்க, கருவூலத்துல காத்திட்டு இருந்தோம். இப்ப, கட்டுன பணத்த திருப்பி வாங்கறதுக்காக, நாங்க வந்து தவம் இருக்க வேண்டியிருக்கு'னு, ஜூனியர் ஆடிட்டர்கள் புலம்புறாங்களாம்,'' என, விளக்கினாள் மித்ரா.

பக்கத்தில் போடப்பட்டிருந்த ேஷாபாவில் சிறுவன் துள்ளிக்குதித்து, விளையாடி கொண்டிருந்தான். அதைப்பார்த்த சித்ரா, ''மெத்தை வாங்க ஒதுக்குன, 1.80 லட்சம் ரூபாய் என்னாச்சுனு, ஏதாச்சும் தெரியுமா?''

''எந்த மெத்தையை சொல்றீங்க...'' என்று மித்ரா சொன்னதும், கண்ணாடி டம்ளரில் ஜூஸ் வந்தது.''உங்க வீட்டு கட்டிலுக்கு மெத்தை வாங்க காசு கொடுக்கல; உயரம் தாண்டும் மாணவருக்கு, மெத்தை வாங்க, 2017 மார்ச்சில், 1.80 லட்சம் ரூபாயை கலெக்டர் நிதியில இருந்து கொடுத்திருக்காங்க. மீதி தொகையை, 'ஸ்பான்ஸர்' பண்ணிடுங்கன்னு சொல்லியிருக்காங்க''

''மெத்தை வாங்கியாச்சுனு லெட்டர் அனுப்புனது எல்லாம் சரியா நடந்திருக்கு; ஆனா, அதை இதுவரை யாருக்கும் கண்ணுல காட்டலை. இந்த விஷயத்தில், கலெக்டர் விசாரிச்சா பரவாயில்லை'' என்றாள் சித்ரா.

''நீங்க மெத்தையை சொன்னீங்க. நான் 'ரன்னிங் டிராக்' பத்தி சொல்றேன் கேளுங்க. 'டிராக்' அமைக்கும் திட்டத்துக்கு திருப்பூர் தடகள சங்கம், ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தாங்களாம். ஆனா, இதுவரை எந்த கணக்கிலும் வரலையாம்,''

''அட கஷ்டமே. 'லஞ்சம்' விளையாடுற துறையா மாறிட்டு வருதோ? இதேபோல, புதுசா வந்துள்ள அரசு பஸ்களில், ஸ்பீக்கர், மைக் செட் எல்லாம், பஸ் டிரைவர் கட்டுப்பாட்டில் இருப்பது போல் வடிவமைப்பு செய்திருக்காங்க. ஆனால், ஒரு பஸ்சில் கூட மைக் பொருத்தலையாம். இதனால், ஸ்பீக்கர் செட் எல்லாம், கண்காட்சி பொருளாத்தான் இருக்காம்,'' சொன்ன மித்ரா, ஜூஸ் குடித்து முடித்ததும், 'ஸ்ட்ராவை' பார்த்து கொண்ட, ''என்ன இது வித்தியாசமா இருக்கே,'' என்றாள்.

''இல்லப்பா. இது மக்காச்சோள மாவில் தயாரிக்கப்பட்ட 'ஸ்ட்ரா'. சுற்றுச்சூழலுக்கு பிரச்னையில்லாதது. பிளாஸ்டிக் தடையினால், கடைக்காரர் இதை யூஸ் பண்றாருன்னு நினைக்கிறேன்,''இருவரும், பில் கொடுத்து விட்டு, புறப்பட்டனர். ''பிளாஸ்டிக் பத்தி நீங்க சொன்னதும், குடியரசு தினவிழா ஞாபகம்வந்துடுச்சு,'' என்றாள் மித்ரா.

''என்ன விஷயம்?''

''கண்ணுக்கு தெரியற மாதிரி பிளாஸ்டிக் தோரணம் எதுவும் இல்லை. கலை நிகழ்ச்சியிலயும் பிளாஸ்டிக் இல்ல. ஆனா, வாட்டர் கேன் மட்டும் நிறையா கிடந்துச்சு. மேடையில கூட, 'ஒன்யூஸ்' வாட்டர் பாட்டில்தான் வச்சிருந்தாங்க; வெளியே தெரியாதபடி, 'டீபாய்க்கு கீழே மறைச்சுத்தான் வச்சிருந்தாங்க''

''காலை டிபன் சாப்பிட்டவங்களுக்கும், பிளாஸ்டிக் டப்பாவுலதான், 'டிபன்' கொடுத்தாங்க; அந்த குப்பையும், அங்கயேதான் போட்டிருந்தாங்க...'' என்றாள் சித்ரா.

''எல்லாருக்கும் முன்மாதிரியா இருக்கோணும்னு, சில்வர் பயன்படுத்தியிருந்தா, இந்நேரம் பாராட்டு குவிஞ்சிருக்கும். அதை செய்ய அதிகாரிங்க ஏன் தயங்குறாங்கன்னு தெரியலையே,'' என, மித்ரா ஆதங்கப்பட்டாள்.

இருவரும், அவிநாசி ரோட்டை கடந்து, அனுப்பர்பாளையத்துக்குள் சென்று கொண்டிருந்தார். அப்போது, போலீஸ் ஜீப் செல்லவே, ''போயம்பாளையத்தில் உள்ள ஒரு தியேட்டர் பின்னாடி ஒரு கும்பல் வெடிய வெடிய 'வெட்டாட்டம்' நடத்துறாங்களாம்,'' சித்ரா சொன்னாள்.

''அட... போங்கக்கா. டவுன்ல பல இடத்திலும் நடக்குதுன்னு பேசிக்கிறாங்க,'' என்று சலித்துக்கொண்டாள் மித்ரா

''சொல்றதை முழுசா கேளுடி. சாயந்திரம் ஆரம்பிச்சு, வெடியற வரைக்கும், பல லட்சம் ரூபாய் வைச்சு, சீட்டு ஆடுறாங்க. போலீசுக்கும் நல்லா தெரிஞ்சும், கண்டுக்கறதில்லை. இதற்கு பரிகாரமாக, கிளப் ஓனர், ஸ்டேஷனிலுள்ள போலீசாரை, இந்த குளிரிலும், 'பண மழையில் நனைய வைக்கிறாராம்,''

''அதேபோல், வீரபாண்டி லிமிட்டில் உள்ள 'டாஸ்மாக்' பார்களில், காலையில் ஆரம்பித்து மதியம், 12:00 மணி வரை, 'சரக்குடன்' லாட்டரியும் விக்கறாங்களாம். அப்புறம், குமரானந்தபுரத்தில் பெரிய மைதானம் மற்றும் மருதாசலபுரம் மெயின் ரோட்டிலும், லாட்டரி கொடி கட்டிப்பறக்குதாம்,'' என, விளக்கினாள் சித்ரா.

''லா அண்ட் ஆர்டர் ஸ்டேஷன் போலீஸ் இப்படின்னா, மதுவிலக்கு போலீசும் தங்களோட கைவரிசையை காட்டறாங்களாம்,'' மித்ரா சந்தேகமாக கேட்டாள்.

''ஆமாண்டி மித்து. அந்த 'விங்க்'கில் பணியாற்றும் குணமான அதிகாரி ஒருத்தர், வீரபாண்டியில் பணம் வைத்து சீட்டு, ஆடிய கும்பலிடம், '50 ஆயிரத்தை' கறந்துட்டாராம். இத்தனைக்கு அது அவர் லிமிட்டே இல்லை. இருந்தாலும், எல்லை தாண்டி, வசூலிச்சுட்டாராம்,''

''காக்கி சட்டை மாட்டினால், எல்லையாவது ஒண்ணாவது? வர்ற வரைக்கும் கலெக்ஷன் பார்க்காம விடமாட்டாங்க. இது உங்களுக்கு தெரியாதுங்களா?''

''சிட்டி மட்டுமல்ல.. மித்து. ரூரலில், சரக்கு விஷயத்தில், வைட்டமின் 'ப' சாப்பிட்டு, நிறைய போலீஸ் புஷ்டியா இருக்காங்களாம். அதுவும், சேவூரில், 'சில்லிங்' வியாபாரம் பட்டைய கிளப்புதாம். அதிலும், தாயும், சேயும் நிறைய காசு பார்க்கிறாங்களாம்,'' என்று சித்ரா கூறியதும், அவளின் மொபைலின் போன், 'கண்ணம்மா.. கண்ணம்மா.. என் அழகு பூஞ்சிலை' என்று பாட்டை வெளியிட்டது.

''ஏக்கா.. என்ன விஷயம். நீதான் 'கரெக்டா' பணம் கொடுத்திடறயே. அப்புறம் எதுக்கு பயப்படறே. போனை வை. சட்டம் தன் கடமையை செய்யும்,'' என்று பேசி விட்டு வைத்ததும், மித்ராவின் மொபைல் போன், 'ஓ... ரவுடி பேபி' என பாடியது. அவளும் பேசி விட்டு வைத்த போது, அங்கும் ரோட்டில் ஆசிரியர்கள் மறியல் செய்து கொண்டிருந்தனர்.

ஒருவழியாக கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, பிரகாரத்தில் அமர்ந்தனர். ''ஏங்க்கா மறந்தே போயிட்டேன். ஒரு ஸ்டேஷனில், அதிகாரியோட 'வாட்ஸ்அப்' ேஹக் செஞ்சு, ஏட்டம்மா ஒருத்தர், அவரையே மிரட்டுச்சாமா?''

''மித்து. அது உனக்கும் தெரிஞ்சிருச்சா. அந்த அதிகாரி, அந்த போலீசோட நெருக்கமாக இருந்தப்ப, 'மொபைல் போனை' எடுத்து, 'வாட்ஸ் அப்'பில், 'க்யூஆர்' கோட 'ஸ்கேன்' செஞ்சு, தன்னோட போனுக்கு வர்ற மாதிரி செட்டப் பண்ணிட்டாங்களாம்,''

''அதில, இன்னொரு லேடி கூட அவர் பழகுவது தெரிஞ்சு, இவங்க சத்தம் போட, 'இதெப்படி தெரிஞ்சது' போலீஸ் மூளையை 'யூஸ்' பண்ணி கண்டு பிடிச்சு, கண்ணாபின்னான்னு, சத்தம் போட்டு, இந்த விஷயத்தில, எப்படா விடியுமுன்னு, சாமி கும்பிடறாராம். ஸ்டேஷன் பூராவும், 'வாட்ஸ்அப்' மேட்டர் பரவி 'வெலவெலத்து' போயிடுச்சாம்,'' என்றாள் சித்ரா.

''வாட்ஸ்அப் விஷயத்தில், ஜாக்கிரதையா இருங்கன்னு, போலீசே சொல்றாங்க. ஆனா, ஒரு அதிகாரிக்கே இந்த கதி என்றால், சாமான்ய பொதுமக்களின் நிலை என்னன்னு தெரியலையே,''என்ற மித்ரா, ''அக்கா.. டைம் ஆச்சு. போலாமா?'' என்றாள். ''ஓ... நான் ரெடி,'' என்றவாறே எழுந்தாள் சித்ரா.அப்போது அருகில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள், ''உப்பை திண்ணவன் கண்டிப்பா தண்ணி குடிச்சுதாண்டி ஆகோணும்,'' என்று காரசாரமாக பேசி கொண்டிருந்தனர். அதைக்கேட்டு இருவரும் சிரித்தவாறே, கோவிலை விட்டு வெளியேறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X