நாளை முதல், 10ம் தேதி வரை, சாலை பாதுகாப்பு வாரம் என்ற பெயரில், நாடு முழுவதும், ஒரு வாரத்திற்கு, பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி செய்ய, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.இப்போது தான் என்றில்லை, இதுவரை, 29 முறை, நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அது ஏற்பட்டுள்ளதா என்றால், அறவே இல்லை என்பது தான் பதிலாக வருகிறது.பிற திட்டங்களில் அரசின் பணம் வீணடிக்கப்படுவது போலவே, இந்த விஷயத்திலும், அரசு பணம் மட்டுமின்றி, போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகளின் நேரமும், உடல் உழைப்பும் வீணடிக்கப்படுகிறது.பாதுகாப்பான சாலை போக்குவரத்து விழிப்புணர்வு இல்லாததால், விபத்துகளில், ஆண்டுதோறும், 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் மட்டும், கடந்த ஆண்டில், 64 ஆயிரம் விபத்துகள் நடந்ததில், 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்; 20 ஆயிரம் குடும்பங்கள் நிர்கதியாகியுள்ளன.உயிர்கள் பறிபோவது மட்டுமின்றி, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்களும் சேதமடைகின்றன.இந்த இழிநிலைக்கு முக்கிய காரணம், சாலையை பயன்படுத்துபவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான். ரயில், விமானம், கப்பல் போக்குவரத்து துல்லியமாகவும், ஒழுங்காகவும் நடத்தப்படுவது போல, சாலை போக்குவரத்து இருப்பதில்லை.பிற மூன்று போக்குவரத்துகளை விட, சாலை போக்குவரத்துக்குத் தான், அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இதில் தான், லட்சக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன; கோடிக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.சாலை போக்குவரத்தை பாதுகாப்பானதான ஆக்க, சட்டங்கள் சரியாகவே உள்ளன. ஆனால், பொதுமக்கள் அதை அறிந்து கொள்ளாமல் இருப்பதும், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள், அலட்சியமாக இருப்பதும் தான், உயிரிழப்புகளுக்கு காரணம்.வீட்டுக்கு இருவர் இருந்தால், மூன்று வாகனங்கள் இருக்கின்றன. வாகனங்கள் வாங்க, எந்த கெடுபிடியும் கிடையாது. கப்பல், ஹெலிகாப்டர், விமானம் போன்றவற்றை எல்லாராலும் வாங்க முடியாது. ஆனால், டூ-வீலர் மற்றும் கார்களை, யார் வேண்டுமானாலும் வாங்கி விடலாம்.பணம் கொடுத்தால் போதும். நீங்கள் யார் என, எந்த, கார் தயாரிப்பு நிறுவனமும் கேட்காது; விரும்பும் மாடல் வண்டியை, வீட்டுக்கு ஓட்டி வந்து விடலாம். வண்டி வாங்குபவருக்கு, சரியாக ஓட்டத் தெரியுமா என, எந்த வாகன தயாரிப்பு நிறுவனமோ அல்லது விற்பனை செய்யும், 'டீலர்'களோ யோசிப்பது இல்லை.'சரியாக வாகனம் ஓட்டுபவருக்கு, இதுவரை விபத்து குறித்து, போலீஸ், வழக்கு இல்லாதவர்களுக்குத் தான், வாகனத்தை விற்போம்' என, அந்த நிறுவனங்கள் அறிவித்து விட்டால், சாலைகளில், வாகனங்கள் எண்ணிக்கையும் குறைந்து விடும்; விபத்துகளும் இப்போது போல் நடக்காது.வாகனங்களை விற்பனை செய்ய, எந்த கட்டுப்பாடும் இருப்பதில்லை என்பது போல, அவற்றின் வேகத்திற்கும், கட்டுப்பாடு இல்லை. இருந்தாலும், அதை யாரும் மதிப்பதில்லை.சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறிய நகரங்களிலும், சாலைகள் விசாலமாக இருப்பதில்லை. அளவில் பெரிதாக இருந்தாலும், சாலைகளை மறைக்கும் அளவிற்கு, 'பம்பர் டூ பம்பர்' வாகனங்கள் செல்கின்றன.அவற்றிற்கு எங்கிருந்து தான், எரிபொருள் கிடைக்கிறதோ என, எண்ணத் தோன்றும் வகையில், காலை, மாலை வேளைகளில், சங்கிலி தொடர் போல, வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.சரி... வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன... வாகன ஓட்டிகளுக்கு, நாகரிகமாக வாகனங்களை ஓட்டத் தெரிகிறதா என்றால், நிச்சயமாக இல்லை. பெரும்பாலான ஓட்டிகளுக்கு, வேகமாக ஓட்டத் தெரிகிறதே தவிர, பாதுகாப்பாக, ஓட்டத் தெரிவதில்லை.சென்னை போன்ற நகரங்களில், சாலைகளில், வாகனம் ஓட்ட, தனித்திறமை வேண்டும். விபத்தில்லாமல், உரசல் இல்லாமல், யாருடனும் சண்டையிடாமல், சத்தம் போடாமல், புலம்பித் தீர்க்காமல், யாராலும் வண்டி ஓட்ட முடியாது.நிதானமாக வண்டி ஓட்டுபவர்களும், நாகரிகமாக வாகனங்களை இயக்குபவர்களும், சக வாகன ஓட்டிகளின் கோபத்திற்கும், ஏச்சுக்கும் ஆளாக நேரிடுவது வேடிக்கை.இருசக்கர வாகனங்களில், அதிகபட்சம் இருவர் தான் செல்ல வேண்டும். ஆனால், பள்ளிகளுக்கு குழந்தை களை, டூ - வீலரில் அழைத்துச் செல்லும் பெற்றோர், மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கூட, ஒரு வண்டியில் ஏற்றி, படுவேகமாக செல்வதை, நம் ஊர்களில் சகஜமாக காண முடிகிறது.முகத்தை, கடுமையாக வைத்தபடி, வளைந்து, திரும்பி, 'ஹார்ன்' அடித்தபடி, வேகமாக, பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதை பார்க்கும் போது, மனதிற்கு, 'திக்' என, இருக்கும்.இருசக்கர வாகனத்தில் இருவர் செல்லலாம். ஆனால், இருவருடன், பெட்ரோல் டேங்கில், பெரிய சுமையும் இருக்கும் அல்லது பெட்டி இருக்கும். வண்டியை விட நீளமான கம்பி, பொருட்களுடன் பயணிப்பவர்கள், நம் சாலைகளில் சகஜம்.பஸ், லாரிகளுக்கான, அதிக ஒலி, ஹார்ன்களை, இருசக்கர வாகனங்களில் பொருத்துவது; இசை ஒலி அல்லது கர்ண கடூர ஒலி எழுப்பும் ஹார்ன்களை, டூ-வீலரில் பொருத்தி, இடை விடாமல் ஒலித்து, சக வாகன ஓட்டிகளை அச்சமூட்டுபவர்கள் ஏராளம்.அவர்களை கட்டுப்படுத்தவோ, தடுத்து நிறுத்தவோ, போக்குவரத்து காவலர்கள் முன் வருவதில்லை. வாகனங்கள் ஒன்றை ஒன்று இடித்துக் கொள்ளும் வகையில், நெருக்கடியான போக்குவரத்து சூழ்நிலையில் கூட, நிதானமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் கிடையாது. இருக்கும் சில அடி இடத்தில் கூட, முன் சக்கரத்தை நுழைத்து, உடலை வளைத்து, அண்டை வாகனத்தின் மீது இடித்து, எப்படியோ வண்டியை ஓட்டி சென்று விடுகின்றனர்.அவசரமாக அலுவலகம் தான் செல்கின்றனரோ என எதிர்பார்த்தால், அடித்து பிடித்து வேகமாக சென்று, டீ கடை முன், வண்டியை நிறுத்தி, சகஜமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.சரி, வாகன ஓட்டிகள் தான் இப்படி இருக்கின்றனர் என்றால், அவர்கள் ஓட்டும் வாகனங்களாவது, ஒழுங்காக பராமரிக்கப்படுகின்றனவா என்றால், அநேகமாக இல்லை என்பது தான் பதில்.சிலர், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, டூ - வீலரை தான் ஓட்டிச் செல்வார். ஆனால், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, வெளிநாட்டு காரில், அமைதியாக வரும், சக வாகன ஓட்டியை, வாய்க்கு வந்தபடி ஏசியபடி, 'போய்யா... வேகமா' என்பார்.இரு சக்கர வாகன ஓட்டிகள் தான் என்றில்லை... கார் ஓட்டும் பலரும், இப்படித் தான், சக வாகன ஓட்டிகளை, கரித்து கொட்டுகின்றனர்.சரி... வாகன ஓட்டிகள் மற்றும் வாகனங்கள் தான் இப்படி இருக்கிறது என்றால், சாலைகள் நிலைமை... கேட்கவே வேண்டாம்... படுமோசம்!சாலை பிதுங்கும் அளவிற்கு, வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். சொரணையே இல்லாமல், சாலையை ஒட்டியபடி, இரு புறமும் வாகனங்களை நிறுத்தி, பேசிக் கொண்டிருப்பர்.சம்பந்தமே இல்லாமல், மாதக் கணக்கில் சில வாகனங்கள், சாலையை ஒட்டிய படி நிற்கும். அதை அகற்றவோ அல்லது அதை நிறுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கவோ, இங்கு யாரும் கிடையாது.சாலைகளில் பள்ளங்கள், மேடுகள், ஸ்பீடு பிரேக்கர்கள் ஏராளமாக இருக்கும். முதல் நாளில், அரை அடி நீள, அகலத்தில் இருக்கும் பள்ளம், சில நாட்களிலேயே, பெரிய பள்ளமாக மாறி விடும். அதை சீர் செய்ய, எந்த அதிகாரியும் முன் வருவதில்லை. பல மாதங்களாக அப்படியே கிடக்கும்!சாலைப் பணியாளர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் இருக்கின்றனரா என்பதே தெரியவில்லை. டூ-வீலரில், சாலையின் நடுவே சென்றால் தப்பித்தோம். சற்று விலகி, சாலையோரம் வந்தால், அவ்வளவு தான்; டூ - வீலர் சறுக்கி விடும். அந்த அளவுக்கு, மணல் பரவி கிடக்கும்.பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பாலங்களிலேயே, சாலை ஓரங்களில் மணல், ஜல்லிக்கற்கள் பரவி கிடக்கின்றன.ஆனால், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கன் போன்ற, சில ஆசிய நாடுகளை தவிர்த்து, பிற பெரும்பாலான நாடுகளில், இந்நிலை கிடையாது. குறிப்பாக, மேற்கத்திய நாடுகள், வளர்ந்த நாடுகளில், இந்நிலை அநேகமாக இல்லை.சாலையில், குறிப்பிட்ட துார இடைவெளியில், வலது, இடது புறங்களில், குறியீட்டு பலகைகள் இருக்கும். அதில், எவ்வளவு வேகம் செல்ல வேண்டும்; வளைவுகள், பாலங்கள் உள்ளனவா என்பது, தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.நெடுஞ்சாலைகளில் கூட, ஒரு தடத்தில் செல்லும் கார், ஹார்ன் அடித்து, வளைந்து நெளிந்து முந்துவதில்லை. சாலையோரங்களில் இருக்கும் பலகைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேகத்தை விட, அதிக வேகத்தில் வாகனங்களை யாரும் இயக்குவதில்லை.ஆங்காங்கே இருக்கும் கருவிகள், எதிரே வரும் வாகனங்களின் வேகத்தை கண்காணித்து, அதிக வேகத்தில் வந்தால், படம் பிடித்து, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு, உடனடியாக, அபராத நோட்டீசை அனுப்பி விடுகின்றன.சாலையில் வாகனங்களே இல்லாத, நள்ளிரவு அல்லது அதிகாலையில் கூட, சிகப்பு விளக்கு சிக்னலை மீறி, வாகனங்களை இயக்குவதில்லை. அந்த அளவுக்கு, சாலைகளை நாகரிகமாக பயன்படுத்துகின்றனர்.அந்த நாடுகளின், சிறிய கிராம சாலைகளில் கூட, ஒருவரை ஒருவர் முண்டியடித்து செல்வதில்லை. சிக்னல் விழும் வரை காத்திருந்து, ஒன்றன் பின் ஒன்றாக, வாகனங்கள் செல்வதை காண, அற்புதமாக இருக்கும். நகர்புறங்களில் ஆயிரக்கணக்கான இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்; ஹார்ன் ஒலி எழுப்புவதே இல்லை. சிக்னல்களில், அரை நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால், வாகனத்தின் இன்ஜினை அணைத்து விடுகின்றனர். நெடுஞ்சாலைகளில் செல்லும் போது, எதிரே வரும் வாகன ஓட்டியை பார்த்து, பெருவிரலை உயர்த்தி, 'தம்ஸ் அப்' காட்டுவது, வணக்கம் தெரிவித்து, நட்புறவாக வாகனங்களை இயக்குகின்றனர்.அது போல, சாலையில் ஏதாவது ஆபத்து, பள்ளம், மேடு, இடர்பாடு இருந்தால், எதிரே வரும் வாகன ஓட்டியின் கவனத்தை கவர, 'இண்டிகேட்டர்' போட்டு, வாகனத்தை நிறுத்தி, பிரச்னைகளை தெரிவிக்கின்றனர்.ஆனால், நம் ஊர்களில் இந்த நாகரிகமே கிடையாது. எத்தனை கி.மீ., வேகத்தில் முன்னால் வண்டி சென்று கொண்டிருந்தாலும், அதை முந்திச் சென்று விட வேண்டும் என்ற வெறியோடு தான், பெரும்பாலானோர் வாகனங்களை ஓட்டுகின்றனர்.சரி... நம்ம ஊரில், பிரச்னை இருக்கத் தான் செய்கிறது... அதை சரி செய்வது எவ்வாறு என்கிறீர்களா... சாலை போக்குவரத்து விதிகளை கடினமாக்கி, அதை மீறுபவர்களுக்கு தண்டனையை அதிகமாக்க வேண்டும். சாலை பாதுகாப்பு வாரம் என்ற பெயரில், சம்பிரதாயமாக ஒரு விழா நடத்துவதற்கு பதில், வாகன ஓட்டிகளுக்கு, நாகரிகமாக வாகனம் ஓட்ட கற்றுக் கொடுக்க வேண்டும்.கடினமான பணி தான். கஷ்டப்பட்டு தான், நம் மக்களை திருத்த வேண்டும். இதற்கான பணியில், அரசு அதிகாரிகளுடன், சமூக ஆர்வலர்களும், அமைப்புகளும் களத்தில் இறங்குவது அவசியம்.விதிகளை அமல்படுத்துவது, அரசு அதிகாரிகளாக இருந்தாலும், பின்பற்ற வேண்டியது, வாகன ஓட்டிகளான நாம் தானே... இனி வரும் நாட்களிலாவது, நாகரிகமாக வாகனங்களை ஓட்ட கற்றுக் கொள்வோம்; வாழும் வரை, விபத்தின்றி வாகனங்களை ஓட்டுவோம்.சாலை போக்குவரத்தை நாகரிகமாக, பாதுகாப்பாக மாற்றி விட்டால் போதும். நம் நாடு, உலக அரங்கில் எங்கோ சென்று விடும். மாற்றுவோமே, நம் நாட்டை!
வள்ளுவன்
சமூக ஆர்வலர்
இ - மெயில்: A.M.Valluvan2020Gmail.com
மொபைல்: 63823 73442