தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முகவரி கிடைக்காதா என கோடம்பாக்கம் முகவரி தேடி சென்றவர்களில் சிலர் தன் சுய முகவரி தொலைத்து தடுமாறி போவது வழக்கமான நிகழ்வு தான். ஆனால், சினிமாவில் முகவரி தேடி சென்ற ஒருவர் சினிமாவுக்கே முகவரியாக மாறினால் அது வித்தியாசமான நிகழ்வு தானே...
புதுக்கோட்டையில் பிறந்து, கரூரில் வளர்ந்து சினிமா கனவுடன் சென்னை சென்ற கார்த்திகேயன் இன்று 'அட்ரஸ் கார்த்தி' என்ற பட்டத்துடன் நடிகராக வலம் வருகிறார்.''நான் 10வது படிச்சுட்டு கரூர் பத்திர ஆபீஸில் பத்திர எழுத்தராக வேலை பார்த்தேன். படிக்கும் போது தமிழ் உட்பட பல மொழி சினிமாக்கள் பார்ப்பேன். குத்துச் சண்டையில் ஆர்வம் இருந்ததால் வறுமை சூழலில் கூட என் அம்மா கொடுத்த தன்னம்பிக்கையில் பயிற்சியில் ஈடுபட்டேன். சினிமா பார்த்துட்டு வீட்டுக்கு வந்து கண்ணாடி முன் நடித்து பார்ப்பேன். ஒரு நாள் ஹாலிவுட் படம் பார்த்து அதில் வரும் ஹீரோ மாதிரி மாடியில் இருந்து தாவி குதிச்சேன்.
பக்கத்து வீட்டு ஓட்டை உடைச்சுகிட்டு கீழே விழுந்தேன். விழுந்த நான் நடிகராக தான் எழுந்திருக்கணும்னு 2002ல் சென்னை வந்தேன். ஓட்டல் வேலையில் சேர்ந்து அதில் கிடைக்கும் சம்பளத்தை கொண்டு சினிமா வாய்ப்பு தேடினேன். ஒரு நாள் ஓட்டலுக்கு சாப்பிட வந்த ஒருவரின் 'டி சர்ட்' பின் 'அரக்கன்' என 'பிரின்ட்' செய்திருந்தது. விசாரித்த போது 'நான் ஸ்டில் போட்டோகிராபர் விமல், அரக்கன் படத்தில் வேலை செய்றேன்' என அறிமுகமானார். அதற்கு பின் அவர் மூலம் வாய்ப்பு தேடினேன்.
அன்றைய நாட்களில் நான் ஏறி, இறங்கிய சினிமா கம்பெனிகளின் 'அட்ரஸ்'களை டைரியில் குறிப்பேன். பத்திர எழுத்தராக இருந்ததால் எழுத்து பழக்கம் என்னை விட்டு போகலை. முதலில் சீரியல், சினிமாவில் சின்ன கேரக்டர்கள் நடித்தேன். வேல், வேட்டைக்காரன், தெகடி, சூது கவ்வும், கோ 2, உறியடி என பல படங்கள் மற்றும் 70 குறும்படங்கள் பண்ணியாச்சு. இப்போ 'வண்டி' படத்தில் நடிச்சிருக்கேன்.
அட்ரஸ் எல்லாம் சேகரிப்பதை பார்த்த என் நண்பர் தான் எனக்கு 'அட்ரஸ் கார்த்தி' என பெயர் வைத்தார். சினிமாவுக்கு வரும் பலர் என்னிடம் இயக்குனர்கள், நடிகர்கள் அட்ரஸ் கேட்பார்கள். உண்மையான ஆளாக இருந்தால் கொடுத்து உதவி செய்வேன். ஒரு நபர் என்னிடம் 'சார் நீங்க தான் 'ஆல் இன் ஆல் அட்ரஸ் கார்த்தி'யாச்சே சன்னி லியோன் இருந்தால் நம்பர் கொடுங்களேன்'னு கேட்டார்,. நான் அப்படியே ஆடி போயிட்டேன் என்றபடி, இந்தாங்க என் 'அட்ரஸ்' என விசிட்டிங் கார்டு கொடுத்துவிட்டு அடுத்த அட்ரஸ் தேட கிளம்பினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE