'கட்டிங்' கேட்டு கறாரு... காவல் அதிகாரிகள் உஷாரு!

Added : பிப் 05, 2019
Share
Advertisement
'தை அமாவாசை முன்னிட்டு, முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய, பேரூர் படித்துறைக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர்.போலீஸ் பாதுகாப்பு குறைவா இருந்ததால், போக்குவரத்து நெருக்கடி அதிகமாக காணப்பட்டது. நொய்யலில் தண்ணீர் இல்லாததால், ஒரு குடம் ஐந்து ரூபாய்க்கு விற்றார்கள். தர்ப்பணம் செய்து விட்டு, ஸ்கூட்டரில் இருவரும் கோவை திரும்பினர்.வரும் வழியில், பேக்கரியில்
'கட்டிங்' கேட்டு கறாரு... காவல் அதிகாரிகள் உஷாரு!

'தை அமாவாசை முன்னிட்டு, முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய, பேரூர் படித்துறைக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு குறைவா இருந்ததால், போக்குவரத்து நெருக்கடி அதிகமாக காணப்பட்டது. நொய்யலில் தண்ணீர் இல்லாததால், ஒரு குடம் ஐந்து ரூபாய்க்கு விற்றார்கள். தர்ப்பணம் செய்து விட்டு, ஸ்கூட்டரில் இருவரும் கோவை திரும்பினர்.
வரும் வழியில், பேக்கரியில் ஓரங்கட்டினர். இஞ்சி டீ ஆர்டர் கொடுத்த மித்ரா, ''விவசாயிகளுக்கு ரொம்ப தொந்தரவா இருக்குன்னு, சின்ன தம்பிங்கிற காட்டு யானையை காடு மாத்துனாங்களே... அந்த யானையை 'கும்கி'யா மாத்த மாட்டோம்னு சொல்லிட்டாங்களாமே'' என, ஆரம்பித்தாள்.
''ஆமாம்பா... சென்னை ஐகோர்ட்டுல வனவிலங்கு ஆர்வலர்கள் மனு தாக்கல் செஞ்சிருக்காங்க. அதுக்கு, அரசாங்க தரப்புலதான், இப்படி பதில் கொடுத்துருக்காங்க. இப்ப, மறுபடியும் 'சின்ன தம்பி'யை காடு கடத்துறதுக்கு, வனத்துறைக்காரங்க ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்காங்க... மருத்துவ குழு, உடுமலையில முகாமிட்டு இருக்கு''
''நம்மூர்ல வன ஆர்வலர்கள்ங்கற பெயர்ல நெறைய்யப்பேரு சுத்துறாங்களாமே...'' என்றபடி, டீயை அருந்த ஆரம்பித்தாள், மித்ரா.
''யானை, சிறுத்தை, மயில், காட்டுப்பன்றி, பாம்புன்னு எதுவா இருந்தாலும், அவற்றை காப்பாத்த வேண்டிய பொறுப்பு, தங்களுக்கு மட்டுமே இருப்பதாகவும், தங்களது சொல்படியே வனத்துறை நடக்கணும்னு ரொம்பத்தான் எதிர்பாக்குறாங்க.
இதுனால, வனத்துறை அதிகாரிங்க, கொந்தளிப்புல இருக்காங்க,'' என்ற சித்ரா, திடீரென, ''செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன்ல வேலை பார்த்தவர மாத்திட்டாங்களாமே...'' என, 'ரூட்'டை மாற்றினாள்.
மீண்டும் ஸ்கூட்டரில் புறப்பட்டபோது, ''அக்கா... அந்த ஸ்டேஷன்ல வேலை பார்த்த போலீஸ்காரர், வட்டிக்கு பணம் கொடுத்துட்டு இருக்கறதா, கமிஷனர்ட்ட ஒரு பெண் புகார் கொடுத்துருக்காங்க.
விசாரிச்சப்ப, ஒரே ஸ்டேஷன்ல, ரொம்ப வருஷமா, குப்பை கொட்டிக்கிட்டு இருக்கறதும்; கட்டப்பஞ்சாயத்து செய்றதும் தெரிஞ்சது. அவர, சரவணம்பட்டிக்கு துாக்கியடிச்சிட்டாங்க.
பல வருஷமாக ஒரே ஸ்டேஷன்ல இருக்கறவங்கள 'லிஸ்ட்' எடுத்து, 30 பேருக்கு, 'டிரான்ஸ்பர்' கொடுத்திருக்காரு, கமிஷனரு...'' என, மித்ரா சொல்லி முடிப்பதற்குள், ''நிழல் எஸ்.பி.,யா ஒருத்தரு வலம் வர்றாராமே...'' என, நோண்டினாள் சித்ரா.
''ஒங்க காதுக்கும் விஷயம் வந்துருச்சா... ஒவ்வொரு மாசமும், 'கட்டிங்' கொடுக்கணும்னு கறாரா சொல்லியிருக்காராம். கொடுக்காம இருந்தா, எஸ்.பி.,கிட்ட ஒண்ணுக்கு ரெண்டா சொல்லி, 'டிரான்ஸ்பர்' வாங்கிக் கொடுக்கிறாராம். இவரோட, 'டார்ச்சர்' தாங்காம, நேர்மையான சில போலீஸ்காரங்க, வேற இடத்துக்கு பணி மாறுதலாகி போயிருக்காங்க. சில பேர், மாசம் தவறாம, 'கட்டிங்' கொடுத்துட்டு புலம்பிட்டு இருக்காங்க...'' என்றாள்.
டவுன்ஹாலை கடந்து சென்றபோது, ''திருப்பூரை சேர்ந்தவங்க, கார்ப்பரேஷன் அதிகாரியா வரப்போறாராமே...'' என, கொக்கி போட்டாள் மித்ரா.
''ஆமா... அப்படித்தான் பேசிக்கிறாங்க. திருப்பூர் கலெக்டர் ஆபீசுல இருக்கற ரெண்டு பேரும், கார்ப்பரேஷனுக்கு வரப்போறாங்களாம். கலெக்டர் ஆபீசுக்கு திருச்சிய சேர்ந்தவரு வர்றாராம்...'' என்ற சித்ரா, ''ஆளுங்கட்சியில புகைச்சல் ஓய்ஞ்சபாடில்லையாம்...'' என, அரசியலுக்கு தாவினாள்.
''ஏன்... அவுங்களுக்கு என்னாச்சு...''
''ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., குரூப் பாலிடிக்ஸ், இன்னும் போய்க்கிட்டு இருக்காம். ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள தொடர்ந்து புறக்கணிக்கிறதா, மேலிடத்துக்கு குற்றச்சாட்டு போய்க்கிட்டே இருக்காம். கடந்த வாரம், நோட்டரி வக்கீல் தேர்வு 'லிஸ்ட்' வெளியாச்சு. ஆளும்கட்சி ரெகமண்ட் செஞ்ச வக்கீல்கள மட்டும், நோட்டரி வக்கீலா செலக்ட் பண்ணியிருக்காங்களாம். நம்மூர்ல, 52 வக்கீல்கள செலக்சன் லிஸ்ட்ல போட்டிருக்காங்க. ஒருத்தர் கூட ஓ.பி.எஸ்., ஆதரவு வக்கீல் இல்லையாம். லிஸ்ட் பார்த்துட்டு நொந்து போயிட்டாங்களாம்...''
''அடடா... அப்படியா'' என, பரிதாபப்பட்ட மித்ரா, ''எலக்ஷன் கூட்டணி முடிவாயிடுச்சா...'' என, தேர்தல் மேட்டருக்கு தாவினாள்.
''கிட்டத்தட்ட உறுதியான மாதிரி தான்... நாளைக்கு, நம் சி.எம். பழனிசாமியும், சென்ட்ரல் மினிஸ்டர் நிர்மலா சீதாராமனும் கோயமுத்துாருக்கு வர்றாங்க... ஏற்கனவே சென்ட்ரல் மினிஸ்டர் ஸ்மிருதி இரானி வந்துட்டு போயிருக்காங்க. வர்ற, 10ம் தேதி, பிரதமர் மோடியும் வரப்போறாரு. அதனால, பா.ஜ.,காரங்க, 'குஷி'யா இருக்காங்க. கூட்டணி அமைச்சா, கோவையையும், திருப்பூரையும் கேட்டு வாங்கறதுக்கு, முடிவு செஞ்சிருக்காங்க...''
''எதிரணி கூடாரத்துல நெலவரம் எப்படி இருக்கு...''
''வழக்கம்போல, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிய தள்ளி விட்டுட்டு, ஒதுங்கிக்கலாம்னு தி.மு.க., நிர்வாகிங்க நெனைக்கிறாங்க. இந்த முறை எப்படியாவது ஜெயிச்சாதான், கோயமுத்துாரை மறுபடியும் தி.மு.க., கோட்டையா மாத்த முடியும்னு, உடன்பிறப்புக நெனைக்கிறாங்க... ஆனா, ஆளுங்கட்சி 'பலத்தை' சமாளிக்கிற அளவுக்கு, கட்சியில, 'வெயிட்'டான ஆளு வேணுமே... அதனால, கம்யூ.,க்கு ஒதுக்க வாய்ப்பிருக்குன்னு பேசிக்கிறாங்க...'' என்று நிறுத்தினாள்.
மீண்டும் தொடர்ந்த சித்ரா, ''ஆமா... வி.ஏ. ஓ., இல்லாததால, ஒரு 'புராஜக்ட்டே' நிக்குதாமே...'' என, எதிர் கேள்வி கேட்டாள்.
''ஆமாக்கா... 'ஏர்போர்ட்' விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கு. இதுக்காக, நீலிக்கோணாம்பாளையத்துல முகாம் நடத்தியிருக்காங்க. 20 நாளாச்சு; இன்னும் வருவாய்த்துறை தரப்புல ஒரு 'சர்ட்டிபிகேட்' கூட கொடுக்கலை. விசாரிச்சா, உப்பிலிபாளையத்துக்கு, அஞ்சு மாசமா வி.ஏ.ஓ., இல்லியாம்...''
''அப்புறம்...''
''சிங்காநல்லுார் வி.ஏ.ஓ.,தான் கூடுதல் 'பொறுப்பா' கவனிச்சுக்கிறாராம்... இவரோட ஆபீசு, ஒண்டிப்புதுார்ல இருக்கு. 'சர்ட்டிபிகேட்' கேட்டு, உப்பிலிபாளையம் ஆபீசுக்கு யாராவது வந்தா, புரோக்கரை கவனிக்கிற விதமா கவனிக்க வேண்டியிருக்குது,''
''இதேமாதிரி... நீலிக்கோணாம்பாளையம் ரயில்வே மேம்பால பணிக்கு, நிலம் எடுக்குற வேலையும் ரொம்ப நாளா இழுத்துக்கிட்டே இருக்கு,'' என்ற மித்ரா, ''முதல்வரின் தனிப்பிரிவுக்கு 'பெட்டிஷன்' போட்டதால, அதிகாரிங்க ரொம்பவும் டென்ஷனா இருக்காங்களாம்...'' என, கடைசி மேட்டருக்கு தாவினாள்.
''யார் மேல பெட்டிஷன் போட்டுருக்காங்க... கொஞ்சம் விவரமா சொல்லேன்...'' என, கேட்டாள் சித்ரா.
''ஒருத்தர் மேல இல்லை. ஜி.எச்., அதிகாரிங்க, அஞ்சு பேர் மேல ரெண்டு பெட்டிஷன் போட்டிருக்காங்க. 'பினாமி' பேருல கம்பெனி நடத்துறதாவும், ஆஸ்பத்திரிக்கு தேவையான உபகரணங்கள், மருந்துகளுக்காக நடத்தற டெண்டர்ல, அந்த நிறுவனங்கள கலந்துக்கச் சொல்லி, 'கரன்சி'யை அள்ளுறதாவும் புகார் சொல்லியிருக்காங்க. அதனால, ஆஸ்பத்திரி வட்டாரத்துல பிரளயம் நடக்கும்னு சொல்றாங்க...'' என சித்ரா சொல்வதற்கும், வீடு வருவதற்கும் சரியாக இருந்தது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X