புனே : லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ள தேசியவாத காங்., கட்சி தலைவர் சரத் பவார், பிரதமர் மோடி லோக்சபாவில் ஆற்றிய உரையில் நாகரிகம் இல்லை என பேசி உள்ளார்.

சரத் பவார் நேற்று, மாநில அளவிலான தனது கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என வற்புறுத்தினர். நான் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவதாக அவர் தெரிவித்தனர். அவர்களின் முடிவுக்கு மதிப்பளித்தே தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இருந்தாலும் அது பற்றி சிந்திக்க உள்ளேன் என்றார்.

தொடர்ந்து லோக்சபாவில் பிரதமர் மோடி சமீபத்தில் ஆற்றிய உரை குறித்து கருத்து தெரிவித்த அவர், மன்மோகன் சிங், நரசிம்மராவ் உள்ளிட்ட பல முந்தைய பிரதமர்களின் உரையை கேட்டுள்ளேன். அவைகள் பார்லிக்கு மரியாதை கொடுப்பதாகவும், நாகரிகமானதாகவும் இருந்துள்ளன. ஆனால் மோடியின் பேச்சு நாகரிகம் அற்றதாகவும், கலாச்சாரத்திற்கு எதிரானதாகவும் இருந்தது என்றார்.
2018 ம் ஆண்டு பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பவார், லோக்சபா தேர்தல்களில் தான் இனி போட்டியிட போவதில்லை என அறிவித்தார். 2009 முதல் 2019 வரை மாதா தொகுதி லோக்சபா எம்பி.,யாக இருந்த பவார், 2014 தேர்தலிலும் போட்டியிடவில்லை.