முதலில்
சுயாதீனம் என்றால் என்னவென்று பார்த்துவிடுவோம்.ஒரு இயக்குனர் தான்
நினைத்த கதையை எவ்வித சமரசமுமின்றி சுதந்திரமாக எடுக்கும் படம்தான் சுயாதீன
திரைப்படம்.
இது போன்ற படங்களை திரையிடுவதற்கும் இது
போன்ற படங்களின் இயக்குனர்களை அறிமுகப்படுத்தி அவர்களுடன் கலந்துரையாடல்
நடத்துவதற்குமாக நடக்கும் விழாதான் சென்னை சுயாதீன திரைப்பட விழாவாகும்.
படைப்பாளியான
மக்கள், நிதிதரும் மக்களால், பார்வையாளரான மக்களுக்காக எடுக்கப்படும்
படங்கள் இது என்று தன் வரவேற்புரையில் குறிப்பிட்ட தமிழ் ஸ்டூடியோ அருண்,
தமிழ் சினிமாவிற்கு நுாறு வயதாகிறது இருந்தும் என்ன பிரயோசனம் கறுப்பு
வெள்ளையில் உள்ளூர் மரத்தை சுற்றி காதல் செய்தவர்கள் இப்போது டிஜிட்டல்
வண்ணத்தில் வெளிநாடுகளில் உள்ள மரத்தைச் சுற்றி காதல் செய்கின்றனர்,காதல்
தவறு அல்ல ஆனால் காதல் மூலம் சந்திக்கும் சமூக பிரச்னைகளை அது ஏற்படுத்தும்
அவலங்களை அதுதரும் சமூக வலிகளை எப்போதுதான் பதிவு செய்யப்போகின்றனர்
என்ற எங்களின் ஆதங்கமே இந்த திரைப்படவிழா என்றார்.
திரையிடப்பட
உள்ள படங்கள் பற்றியும் அதன் இயக்குனர்கள் பற்றியும் லீனா மணிமேகலை
விவரித்தார் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் நான்
ஒரு பார்வையாளானாகவே இங்கு வந்தேன் பேசவரவில்லை என்று சொல்லிவிட்டு
‛ஆல்திபெஸ்ட்' என்று ஒரு வரி சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார், சினிமாவை
வாழ்க்கையாக கொண்டு இயங்கிக் கொண்டு இருக்கும் இளைஞர்களிடம் கொஞ்சமாவது
ஸ்ரீராம் பேசியிருக்கலாம் ஏமாற்றிவிட்டார்.
எது வர்த்தக சினிமா எது சுயாதீன சினிமா என்பதை விளக்கும் வகையில் ஒரு நாடகம் போட்டனர்
அருமையாக இருந்தது அதே போல தப்பாட்ட கலைஞர்களும் சிலம்பாட்ட வீரர்களும்
காட்டிய திறமை அபாரம்.
விழா நடக்கும் இடத்தில் உலக புகழ்
பெற்ற திரைப்பட படைப்பாளிகளின் ஒவியங்களை கண்காட்சிக்கு வைத்துள்ளனர்,
பத்து ரூபாய் விலையில் திரைப்பட தொழில் நுட்பத்தை சொல்லித்தரும்
புத்தகங்கள் உள்ளன.
எல்லாரும் பேசி முடித்த பிறகு
இப்போது விழா துவங்குகிறது முதலில் மிருணாள் சென்னின் படம், என்ன படம்?
என்பது சஸ்பென்ஸ் நீங்களே பாருங்கள் என்றனர்.
மிகப் பழைய
படம் ஆரம்பித்து பத்தாவது நிமிடத்தில் படம் கட்டாகி திரையி்ல் எதுவுமே
தெரியவில்லை இதுதான் சஸ்பென்ஸா? என்றபடி பக்கத்து கட்டிடத்தில் நடந்து
கொண்டிருந்த ‛போன்ஸ்லே' என்ற மராட்டிய திரைப்படம் பார்க்க சென்றேன்.
‛சார்
மீடியாவில் இருந்து வர்ரார் உள்ளே கூட்டிட்டு போய் ஒரமா நிற்க வை'
என்றார் ஒருவர், உள்ளே காலி நாற்காலி இருக்கிறதே என்றபோது அது
‛விருந்தினர்களுக்கு' என்றனர்.
யார் முதலில்
வருகிறார்களோ அவர்கள் உட்காரட்டும் என்ற முற்போக்கு சிந்தனையில்லாமல்,
இன்னமும் இதர வர்த்தக விழாக்களில் நடைபெறுவது போல தெரிந்தவர்,
புகழ்பெற்றவர், இருக்கப்பெற்றவர் என்ற வித்தியாசம் பார்த்து உட்காரவைப்பதை
இந்த விழாவில் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை, நின்று கொண்டு பார்க்க
சுயகவுரவம் இடம் தராததால் சுயாதீன படம் ஒன்றை பார்க்காமலே திரும்பினேன்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in