நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும், அரசியல் கட்சித் தலைவர்கள் இருந்துள்ளனர்; இப்போதும் இருக்கின்றனர். அப்போது இருந்தவர்களை விட, இப்போது இருப்பவர்களின் செயல்பாடு, பலத்த சந்தேகத்தை எழுப்பும் விதமாக உள்ளது. அதிலும், எப்போதும் இல்லாத வகையில், இப்போது, பெரும்பாலான, அரசியல் கட்சித் தலைவர்களின் செயல்பாடு, நாட்டு நலனுக்கு எதிராகவே உள்ளதை அறிய முடிகிறது. இவர்களுக்கு, தேச பக்தி, நாட்டின் நலன், பொருளாதார வளர்ச்சி பற்றி எல்லாம், எந்த சிந்தனையும் இல்லை. இது, இவர்களின் செயல்பாட்டில் தெரிகிறது! இவர்களுக்கு இருப்பது, சுய லாப கொள்கை மட்டுமே. எந்த கட்சியுடன் கூட்டு சேர்ந்தால், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு பெறலாம்; அரசியல் செல்வாக்கு அடையலாம் என்ற, குறுகிய நோக்கமே, அவர்களிடம் மேலோங்கி இருப்பதை அறியும் போது, மனம் வேதனைப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கூட, இந்த நிலையில்லை. ஆளும் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த எதிர்க்கட்சிகள், எதிரி கட்சிகளாக மாறியதே இல்லை. எதிரி கட்சி மனப்பான்மையால், நாட்டிற்கே துரோகம் செய்யும் விதத்தில், அவற்றின் தலைவர்களின் செயல்பாடு உள்ளது. தான் சேர்ந்துள்ள அரசியல் கட்சியில், யாரை, 'காக்கா' பிடித்தால், தேர்தலில் நிற்க, 'சீட்' கிடைக்கும்... சீட் கிடைத்தால், எவ்வளவு தொகை, 'முதலீடு' செய்ய வேண்டியிருக்கும். ஓட்டுக்கு, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து தான், தங்கள் மண்டையை குடைந்து, யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மந்திரி ஆக... வாரியங்கள், கழகங்களின் தலைவர் ஆக, எந்த அமைச்சரை அணுகுவது என்றும் யோசிக்கின்றனர். அத்துடன், கூடவே இருந்து, குழி பறிப்பவர்களை சமாளிக்க, என்ன செய்ய வேண்டும்... கட்சி மேலிடத்தில், அவர்கள் குறித்து, எப்படி, 'போட்டுக் கொடுப்பது' எனவும் யோசிக்கின்றனர். அத்துடன் முடிகிறதா... இல்லை. ஆட்சியில் முக்கிய பொறுப்புகளுக்கு வந்த பிறகு, 'கான்ட்ராக்ட்'களை யாருக்கு வழங்குவது... அவர்களில், தன், 'பினாமி'க்கு எத்தனை வேலைகளை வழங்குவது... கட்சிக்காரர்களுக்கு எவ்வாறு வேலைகளை பகிர்ந்து அளிப்பது என்றே சிந்திக்கின்றனர்.
அரசியலில் நுழைந்த போது, சாதாரண, வாடகை வீட்டில் வசித்தவர்கள் கூட, இப்போது, முக்கிய பெரு நகரங்களில், பிளாட்டுகளாகவும், மனைகளாகவும் வாங்கிக் குவித்துள்ளதை அறிய முடிகிறது. சொந்தமாக பங்களாக்கள், பண்ணை வீடுகள் இல்லாத அரசியல் தலைவர்களை, இப்போது பார்க்கவே முடியவில்லை. இதெல்லாம், இட்டுக்கட்டிய பொய் அல்ல; உண்மை தான். கண்ணுக்கு முன் நிறைய உதாரண புருஷர்கள் உள்ளனர். அவர்களில் பலர், அரசியலுக்கு வந்த புதிதில், எப்படி இருந்தனர்... இப்போது எப்படி இருக்கின்றனர் என்பதை, அவர்கள் வலம் வரும் வாகனங்களை வைத்தே கண்டுபிடித்து விடலாம். மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பதே, அரசியல்வாதிகளின் கடமை. ஆனால், தங்கள் பைகளை நிறைத்துக் கொண்டவர்களே அதிகம்.
'டொயோட்டோ இன்னோவா, கிரிஸ்டா, டிஸ்கவரி, ஹம்பர், பி.எம்.டபிள்யு., ஆடி, போர்டு எண்டோவர்' போன்ற சொகுசு கார்கள் இல்லாத, அரசியல் தலைவர்கள் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம். ஒன்றுக்கு, நான்கைந்து சொகுசு கார்களை வைத்துள்ளனர் என்பது தான் யதார்த்தம்! பிறருக்கு முன்னுதாரணமா க விளங்க வேண்டிய, பெரிய கட்சிகளின் தலைவர்களே, ஆடம்பரத்திலும், அநாவசிய சொத்து குவிப்பிலும் ஈடுபட்டுஉள்ளனர்.
இதை, காங்கிரஸ் முன்னாள் தலைவர், சோனியா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி, தமிழக முன்னாள் முதல்வர்கள், ஜெயலலிதா, கருணாநிதி போன்றோரை பார்த்து அறிந்து கொள்ளலாம். 'தேசத்தந்தை' மஹாத்மா காந்தி போதித்த, எளிமை, உண்மை, நேர்மை, அஹிம்சை போன்ற உயரிய கொள்கைகளை பின்பற்றும் கட்சிகளின் தலைவர்கள் யாராவது இருக்கின்றனரா... அவ்வாறு இருந்தால், அதிசயம் தான்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர், சோனியா, டில்லியில், பெரிய அரசு பங்களாவில் வசிக்கிறார்; அவருக்கு கணவர் இல்லை. சோனியாவின் மகன், திருமணமாகாத ராகுல், அம்மாவுடன் வசிக்காமல், தனியாக, பெரிய பங்களாவில் வசிக்கிறார். இவர்கள் தான் இப்படி என்றால், சோனியாவின் மகள் பிரியங்கா, தனி பங்களாவில், தன் கணவர், ராபர்ட் வாத்ரா மற்றும் பிள்ளைகளுடன் வசிக்கிறார். இவை போக, ஏராளமான சொத்துகளையும், நிலங்களையும், பண்ணை வீடுகளையும், டில்லியை ஒட்டியுள்ள, பல மாநிலங்களில் வளைத்து போட்டுள்ளனர்.
சரி, டில்லி உதாரணம் இருக்கட்டும். நம் மாநிலத்தில் பார்ப்போமே...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலாவின் உறவினர்களும், அவர்களது துாரத்து சொந்தங்களும், எவ்வளவு செல்வ செழிப்பாக உள்ளனர் என்பது, அனைவரும் அறிந்தது தானே!
ஜெயலலிதாவின் நட்பு கிடைப்பதற்கு முன், சசிகலா குடும்பத்தினர் எப்படி இருந்தனர்; இப்போது எப்படி இருக்கின்றனர் என்பதை, நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்கின்றனர்.
அது போலவே, மறைந்த முன்னாள் முதல்வர், கருணாநிதியின் ஆரம்ப கால எளிமையான வாழ்க்கை, அனைவரும் அறிந்தது தான். இப்போது அவரின் வாரிசுகள், நெருங்கிய உறவினர்கள், எந்த அளவுக்கு, எத்தனை வளமாக இருக்கின்றனர் என்பதும், உலகம் அறிந்தது தான்! இவர்களை விடுங்கள்... அண்டை மாநிலமான ஆந்திராவை பார்ப்போம்; அம்மாநில முதல்வர், சந்திரபாபு நாயுடுவின் சொத்துகளை விட, அவரது பேரனின் சொத்து மதிப்பு தான் அதிகமாம். ஆறேழு வயதிலேயே, அவரின் பேரன், கோடிகளை குவிக்கும் வித்தையை அறிந்துள்ளார். அது என்னவென யாருக்கும் தெரியவும் இல்லை!
மேற்கு வங்க மாநிலம் மட்டுமின்றி, உலகமே வணங்கும் ஆன்மிகவாதி, ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி, சாரதா தேவியின் புனித பெயரில் நடத்தப்பட்டு, இப்போது சிக்கியுள்ள, 'சாரதா சிட்பண்ட்' கம்பெனி விவகாரம், நாட்டையே நாறடிக்கிறது.
மேற்கு வங்கத்தில், 30 ஆயிரம் கோடி ரூபாயை, 20 லட்சம் பேரிடமிருந்து, 'டிபாசிட்'டாக பெற்று, அவர்களுக்கு பட்டை நாமம் போட்டிருக்கிறது, அந்த நிறுவனம்.
அதற்கு முன், ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையில் உயர் பதவியில் இருந்தவர்களை, அந்த நிறுவனம், 'கவனித்து' வந்துள்ளது, இப்போது தெரிய வருகிறது.
குறிப்பாக, மேற்கு வங்கத்தை ஆளும், முதல்வர், மம்தாவின், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின், சாதாரண கவுன்சிலர் துவங்கி, எம்.பி.,க்கள் வரை, ஏராளமானோருக்கு, அந்த சீட்டுக் கம்பெனி, 'படி' அளந்துள்ளது. அதனால் தான், அது, போண்டியாகியுள்ளது என்பது தான், இந்த விவகாரத்தில் புதைந்திருக்கும் ரகசியம். கைத்தறி புடவையும், காலில் ரப்பர், 'ஸ்லிப்பர்' செருப்பும் அணிந்து, காட்சிக்கு எளிமையானவராகத் தோற்றமளிக்கும், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, சாரதா சிட்பண்ட் மோசடியில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற, கோல்கட்டாவில், மூன்று நாட்கள், 'தர்ணா' போராட்டம் நடத்தினார்.
நாட்டிலுள்ள அத்தனை எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், மம்தாவின் பின் அணிவகுத்து நின்று, 'சிட்பண்ட் முறைகேட்டை, சி.பி.ஐ., விசாரிக்க கூடாது' என, கோஷமிட்டனர்; கோல்கட்டா வந்த, சி.பி.ஐ., விசாரணை அதிகாரிகளை திரும்பப் போகச் சொல்லினர்.
இதனால், நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான, சி.பி.ஐ.,க்கு அவமரியாதை செய்யப்பட்டது. ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால், 'அது உண்மையாக இருக்குமோ' என்ற சந்தேகத்தை, கேட்பவர்கள் மனதில் உருவாக்கும்.
பிறகு, அந்த பொய்யையே உண்மை என, மக்கள் நம்பத் துவங்கி விடுவர். இது, ஜெர்மனி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி, ஹிட்லரின் செயலர், கோயபல்சின் அணுகுமுறை.
இதைத் தான், காங்கிரஸ் கட்சித் தலைவர், ராகுல், 'ரபேல்' போர் விமான கொள்முதல் விவகாரத்தில் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றமே, 'ரபேல் போர் விமான ஒப்பந்தங்களில் முறைகேடு இல்லை' என, தீர்ப்பளித்த பிறகும், கூவிக் கொண்டு இருக்கிறார், ராகுல்! இதனால், நம் நாட்டின் மதிப்பு, மாண்பு, ெவளிநாடுகளில், சந்தி சிரிக்குமே என, அவர் கவலைப்படவே இல்லை. எப்படியாவது பிரதமர் ஆகி விட வேண்டும் என்பதற்காக, ராணுவம் மீதே, கை வைக்கிறார். சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், ஓமர் அப்துல்லா, சரத் பவார், அகிலேஷ் யாதவ், மாயாவதி, மம்தா, குமாரசாமி, ஸ்டாலின் போன்றோரின், 40 ஆண்டு கால பின்னணியை பார்த்தால், அப்போது, நடுத்தர நிலையில் அவர்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. ஆனால், இப்போது அவர்கள், பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதிகள்! எவ்வாறு வந்தது, இந்தப் பணம்? கடந்த, 40 - 50 ஆண்டுகளாக, வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏராளமானோரை எனக்கு தெரியும். அவர்களால், சொந்த வீடு கூட வாங்க முடியவில்லை.
அவர்களில் பலர், 24 மணி நேரத்தில், 18 மணி நேரம் பாடுபடுபவர்கள். எனினும், சொந்த வீடோ, காரோ, நில, புலன்களோ வாங்க முடியவில்லை.
ஆனால், அரசியல்வாதிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கு மட்டும் எப்படி, மேலே இருந்து பணம் கொட்டுகிறது? சமதர்மம், சமூக நீதி என, கூக்குரலிடும் இவர்கள், அதற்காக எப்போதாவது பாடுபட்டுள்ளனரா... அவர்கள் சார்ந்துள்ள கட்சியில் தான், அத்தகைய ஜனநாயகத்தை ஏற்படுத்திஉள்ளனரா?நாட்டின் உண்மை தன்மைக்கு எதிராக, தேர்தல் கமிஷனின் நடுநிலைமைக்கு, ெவளிநாடுகளில் வேட்டு வைக்கும் வகையில், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளன. ஆம், 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து தான், பா.ஜ., ஆட்சிக்கு வந்தது' என்கின்றனர்.
உலக நாடுகள் பலவும், நம் ஓட்டு இயந்திரத்தின் செயல்பாட்டை பார்த்து, சிறப்பாக இருப்பதாக நம்பி, அதை பின்பற்ற துவங்கியுள்ளன. ஆனால், நம் நாட்டிலேயே, 'அது, மோசடி இயந்திரம்' என, பிரசாரம் செய்யப்படுகிறது.
இதனால், நம் நாட்டின் மதிப்பு, சர்வதேச அரங்கில் கெடுமே என, இந்த எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கொஞ்சமும் கவலையில்லை. எப்போது தான் இவர்கள் திருந்துவரோ... தெரியவில்லை. இது போல, நிறைய பட்டியலிடலாம். எனி னும், அது நம் வேலையல்ல! அரசியலையும், மோசடி அரசியல்வாதிகளை யும் திருத்துவது, நம் கையில் தான் உள்ளது. தேர்தலில், ஓட்டுப்பதிவு நேரத்தில், அதை செயல்படுத்துவோம்!
எஸ்.பாலசுப்ரமணியம்
எழுத்தாளர்
இ-மெயில்: essorres@gmail.com
மொபைல் போன்: 98407 19043