புதுடில்லி: லண்டனில் சொத்து வாங்கியது தொடர்பாக சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். திங்கட்கிழமை மீண்டும் அவரிடம் விசாரணை நடக்க உள்ளது.

லண்டனில் சொத்து வாங்கியதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா மீது குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக கோர்ட் உத்தரவுப்படி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் , விசாரணைக்காக ஆஜராகி வருகிறார். கடந்த புதன், வியாழக்கிழமைகளில் வாத்ராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், 3வது நாளாக இன்றும் (பிப்.,9)அவரிடம் விசாரணை நடந்தது. இந்த விசாரணை 8 மணி நேரம் நீடித்தது. பின்னர் இரவு 8.30 மணியளவில் அவர், அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து கிளம்பி சென்றார். அவரிடம் மீண்டும் திங்கட்கிழமை(பிப்.,11) விசாரணை நடக்க உள்ளது. 3 நாட்களில் மட்டும் வாத்ராவிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் 24 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.