புதுடில்லி: 'வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கவில்லை' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், மத்திய அரசு துறைகளில், இரண்டாண்டுகளில், 3.79 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'மத்திய அரசு போதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை' என, காங்கிரஸ் தலைவர், ராகுல் உட்பட, பல எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 'கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, ஆண்டுக்கு, இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என, மோடி அறிவித்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை' என, ராகுல் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
'நிடி ஆயோக்'
அரசுக்கு ஆலோசனை வழங்கும், 'நிடி ஆயோக்' அமைப்புக்கு உட்பட்ட, தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம், நாட்டின் வேலைவாய்ப்பு பிரச்னை குறித்து ஆய்வு செய்தது. கடந்த, 2017 - 18ல், வேலைவாய்ப்பின்மை விகிதம், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிகவும் அதிகமாக, 6.1 சதவீதமாக இருந்ததாக, செய்திகள் வெளியாகின.
சமீபத்தில் பார்லிமென்டிலும், இந்தப் பிரச்னை குறித்து, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஆனால், இதை
அரசு மறுத்துள்ளது. ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய, பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி, பல கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக கூறினார்.
இந்நிலையில், 2019 - 20 நிதியாண்டுக்கான, மத்திய பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு அரசு துறைகளில், 2017 - 19 காலத்தின்போது, 3.79 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ள தகவல், தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வளவு பேர்?
இது குறித்து, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2017 மற்றும் 2018ல், மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 2 லட்சத்து, 51 ஆயிரத்து, 279 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்ப்பட்டுள்ளது. 2019, மார்ச் 1க்குள், இது, 3.79 லட்சமாக உயரும். அதன்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவோர் எண்ணிக்கை, 36 லட்சமாக இருக்கும்.
ரயில்வே, போலீஸ், நேரடி மற்றும் மறைமுக வரி துறைகளில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரயில்வேயில், மார்ச், 2017ம் ஆண்டில், 13 லட்சம் பேர் பணியாற்றினர். தற்போது, கூடுதலாக, 99 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறையில், 2017ம் ஆண்டில், 10 லட்சம் பேர் பணியாற்றினர்; அதில், கூடுதலாக, 79 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேரடி வரித் துறையில், 2017ம் ஆண்டில், 50 ஆயிரம் பேர் பணியாற்றினர். இது, 80 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. கூடுதலாக, 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகரிப்பு:
விமான போக்குவரத்து துறையில், 2017ம் ஆண்டில், 1,174 பேர் பணியாற்றிய நிலையில், தற்போது, 2,363 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், மத்திய அரசுக்கு உட்பட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், மூன்று லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், காங்கிரஸ் தலைவர், ராகுல் கூறியுள்ளதாவது: 'ஊபர், ஓலா' போன்ற வாடகை கார்களை இயக்கும் நிறுவனங்களால், 20 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக, நிடி ஆயோக் கூறியுள்ளது. ஆனால் இது தொடர்பாக, ஒரு டிரைவர் அளித்த பேட்டி, ஆங்கில நாளிதழில் வந்துள்ளது. 'அரசு வேலைவாய்ப்பு அளிக்காததால், பல லட்சம் செலவு செய்து, இந்த வேலையைப் பெற்றுள்ளேன்' என, அந்த டிரைவர் கூறியுள்ளார். இதில் இருந்தே, வேலைவாய்ப்பு பிரச்னையில், இந்த அரசுக்கு கொள்கை எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் இல்லாததுடன், ஆணவத்துடன், இந்த அரசு செயல்படுவதே, வேலைவாய்ப்பின்மை பிரச்னை அதிகரிக்க காரணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (15)
Reply
Reply
Reply