வனத்துறையினருக்கு 'தண்ணி' காட்டிய சின்னதம்பி ! 'கஜயாத்திரை' இன்று முடிவுக்கு வருமா ?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறையினருக்கு 'தண்ணி' காட்டிய சின்னதம்பி ! 'கஜயாத்திரை' இன்று முடிவுக்கு வருமா ?

Added : பிப் 11, 2019
Advertisement
 வனத்துறையினருக்கு 'தண்ணி' காட்டிய சின்னதம்பி ! 'கஜயாத்திரை' இன்று முடிவுக்கு வருமா ?

உடுமலை:உடுமலை அருகே, 10வது நாளாக முகாமிட்டுள்ள சின்னதம்பி யானை, நேற்று வனத்துறை கண்காணிப்பிலிருந்து மறைந்தது; நாள் முழுவதும் தேடிய நிலையில், 'பிளிறல்' மூலம் தனது இருப்பிடத்தை காட்டியது.உடுமலை பகுதிகளில், சின்னத்தம்பி யானை, கடந்த 10 நாட்களாக முகாமிட்டுள்ளது; கடந்த நான்கு நாளாக திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில், அமராவதி ஆற்றின் கரையிலுள்ள, கண்ணாடிப்புத்துார் வயல்வெளிகளில் முகாமிட்டுள்ளது.நேற்றுமுன்தினம் இரவு, உணவு தேடி, ஒரு கி.மீ., மேற்கு நோக்கி பயணம் செய்து, நீலம்பூர் பகுதியிலுள்ள, கரும்பு, நெல் வயல்களில் உணவு எடுத்துள்ளது. நள்ளிரவு, மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பியுள்ளது. ஆனால், மூன்று நாட்களாக பதுங்கியிருந்த கரும்பு காட்டிற்கு வராமல், 500 மீட்டர் துாரத்திலுள்ள, மற்றொரு கரும்பு காட்டிற்கு சென்றுள்ளது.பழைய இடத்தில் சின்னதம்பி இருக்கும் என, வனத்துறையினர் சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஏமாற்றிய சின்ன தம்பிவனத்துறை கண்காணிப்பை மீறி, கண்ணாடிப்புத்துார் கிராமத்திற்கு அருகிலுள்ள, நாணல் புதர், கரும்பு தோட்டத்திற்கு இடையில் புதிய இடத்தில் பதுங்கிக்கொண்டது. பழைய இடத்திலிருந்த, வனத்துறையினர், பகல் முழுவதும் யானை வராததால் அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களும் வந்து பரபரப்பாக தேடினர். மாலை, 5:30க்கு, புதிய கரும்பு தோட்டத்தின், கிணற்றுக்கு அருகிலிருந்து வெளியில் வந்த சின்னதம்பி, 'பிளிறல்' கொடுத்த தனது இருப்பை பதிவு செய்ததால், வனத்துறையினர் நிம்மதியடைந்தனர்.'சாது' மிரண்டால்... :சாதுவாக வலம் வந்த சின்னதம்பி நேற்று, கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியது. குடிக்க நீர் இல்லாமல் அலைந்தது. கோபமடைந்து, மிரட்டும் வகையில் பல முறை, அதிக சத்தத்துடன் 'பிளிறி'யது. கரும்புத்தோட்டத்திற்குள் அதிவேகமாக பின்னால் சென்றது. இதில் அங்கிருந்த பாசன குழாய் உடைந்து, தண்ணீர் பீய்ச்சியடித்தது. அதனை குடித்து சாந்தமாகிய, சின்னதம்பி, பின்னர் அமைதியாக கரும்பு காட்டிற்குள் சென்றது.மாரியப்பனுக்கு மாற்று 'சுயம்பு' :நேற்றுமுன்தினம், சின்னத்தம்பியை, வனப்பகுதிக்குள் அழைத்துச்செல்ல, கும்கிகளான, கலீம் மற்றும் மாரியப்பன் மூலம் முயற்சி செய்யப்பட்டது. சின்னதம்பியை பார்த்து மிரண்ட, மாரியப்பன் வேகமாக வேறு திசையில் ஓட்டமெடுத்தது. இதனை பார்த்து, கலீமும் ஓட்டம் பிடித்தது. சின்னதம்பியை விரட்டும் முயற்சி தோல்வியடைந்தது. இதனையடுத்து, மாரியப்பன், டாப்சிலிப் முகாமிற்கு லாரியில் ஏற்றி அனுப்பப்பட்டு, அங்கிருந்து கும்கி சுயம்பு அழைத்து வரப்பட்டது.இன்று விடை கிடைக்கும் ?சின்னதம்பி யானை குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சின்னதம்பியை 'கும்கி' யாக மாற்றுவதா, மீண்டும் சின்னதடாகம் பகுதிக்கு கொண்டு செல்வதா, என முடிவு தெரியும்.அதனால், இன்று சின்னதம்பியின் யாத்திரை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, கும்கிகளை வைத்து விரட்டும் முயற்சி தோல்வியடைந்துள்ளதால், மீண்டும் மயக்க ஊசி செலுத்தி, கும்கிகள் உதவியுடன் லாரியில் ஏற்று வேண்டிய சூழல் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X