சென்னை: ''திருச்செந்தார் முருகன் கோவிலில், இடிக்கப்பட்ட பிரகாரத்தை கட்டவும், 22 கோடி ரூபாயில், 'யாத்ரிகா நிவாஸ்' கட்டவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், ராமச்சந்திரன் தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - சேகரன்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதி, நெடுங்குணம் ஊராட்சியில் உள்ள, ராமச்சந்திரப் பெருமாள் கோவிலை புனரமைத்து, குடமுழுக்கு நடத்த, அரசு நடவடிக்கை எடுக்குமா?அமைச்சர், ராமச்சந்திரன்: வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, மதிப்பீடு தயாரிக்கப்பட உள்ளது. மதிப்பீடு தயாரானதும், கோவிலை புனரமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.சேகரன்: அக்கோவிலுக்கு குடமுழுக்கு நடந்து, 12 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. எனவே, கோவிலை புனரமைத்து, குடமுழுக்கு நடத்த வேண்டும். கோவிலுக்குரிய நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளன; அவற்றை மீட்க வேண்டும்.அமைச்சர், ராமச்சந்திரன்: இந்த ஆண்டே குடமுழுக்கு நடத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளது.சேகரன்: போளூர், ஈஸ்வரன் கோவில், சமீபத்தில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இன்னமும் தர்மகர்த்தா கட்டுப்பாட்டில் தான் செயல்படுகிறது. கோவிலை முழுமையாக, துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.அமைச்சர், ராமச்சந்திரன்: நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., - அனிதா ராதாகிருஷ்ணன்: திருச்செந்துார், சுப்பிரமணியசுவாமி கோவில் பிரகாரம் இடிந்து விழுந்ததில், ஒரு பெண் இறந்தார். அதைத் தொடர்ந்து, பிரகாரம் முழுமையாக இடிக்கப்பட்டது. ஓராண்டுக்கு மேலாகியும், பிரகாரம் கட்டப்படவில்லை.வெயில் மற்றும் மழையில், பக்தர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, அங்கபிரதட்சணம் செய்யும் பக்தர்கள், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.எனவே, பிரகாரத்தை உடனடியாக கட்ட வேண்டும். பக்தர்கள் தங்கும் விடுதியில், 500 அறைகள் பழுதடைந்துள்ளதாக கூறி, பூட்டப்பட்டுள்ளன. அவற்றை இடித்துவிட்டு, புதிதாக கட்ட, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர், ராமச்சந்திரன்: சுற்று பிரகாரம் கட்ட, மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது; விரைவில், கட்டப்படும். விடுதியில் உள்ள அறைகள், தங்குவதற்கு ஏற்றதாக இல்லை என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, அவை மூடப்பட்டன.புதிதாக, 22 கோடி ரூபாய் மதிப்பில், யாத்ரிகா நிவாஸ் கட்ட, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.