கோவை: பார்சல் நிறுவன ஊழியரை தாக்கி, 8 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில், மீண்டும், 150க்கும் மேற்பட்ட கேமரா பதிவுகள் ஆராயப்பட்டன; பைக்கில் வந்த நபர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.கோவை, மில் ரோட்டில், நாவல் மொரீசா, 46, என்பவருக்கு சொந்தமான, பார்சல் சர்வீஸ் நிறுவனம் உள்ளது. கடந்த, 7ம் தேதி, இந்நிறுவனத்தில் இருந்து மும்பை விமானத்தில் அனுப்பி வைக்க, ஊழியர் பிரித்வீ சிங், 26, என்பவர் இருசக்கரவாகனத்தில், 8 கிலோ தங்கத்தை எடுத்து சென்றார். இவரை பின்தொடர்ந்து, இருசக்கரவாகனத்தில் சென்ற நபர்கள், பீளமேடு அருகே தாக்கி, தங்கத்தை கொள்ளையடித்து தப்பினர்.பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, ஆறு தனிப்படைகள் அமைத்து விசாரிக்கப்படுகின்றனர். கொள்ளை சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன. துப்பு எதுவும் கிடைக்கவில்லை.இதற்கிடையே, மீண்டும், மில் ரோடு, காந்தி பார்க் மற்றும் அவிநாசி ரோட்டில் உள்ள, 150க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆராயப்பட்டன. இதில், காந்தி பார்க், பசுவண்ணன் கோவில் சந்திப்பு அருகே, கடந்த, 7ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, ஒரே பைக்கில், மூவர் செல்வது பதிவாகியுள்ளது.இருசக்கர வாகனம் ஓட்டும் நபர், 'ஹெல்மெட்' அணியாமலும், நடுவில் அமர்ந்திருந்த நபர், 'ஹெல்மெட்' அணிந்தும், பின்னால் அமர்ந்திருந்த நபர், 'மங்கி கேப்' அணிந்து முகத்தை மூடியிருந்ததும் தெரியவந்தது. இவர்களுக்கு, 25 வயது இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. மேலும், காந்தி பார்க் பகுதியில் இருந்து, அவிநாசி ரோடு, கொள்ளை சம்பவம் நடந்த பகுதி வரை, அதிகாலை நேரத்தில் பதிவாகியுள்ள மொபைல்போன் அழைப்பு விபரங்களையும் போலீசார் சேகரித்து விசாரிக்கின்றனர்.