சிவகாசி: உச்சநீதிமன்றத்தில் பசுமை பட்டாசு குறித்து தவறாக அளிக்கப்பட்ட அறிக்கையை வாபஸ் பெற வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குழுவினர் நேற்று முதல் காத்திருப்பு போராட்டம் துவக்கினர்.தீபாவளி உட்பட பண்டிகைகளுக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்குப்பின் சிவகாசி பகுதியில் 1070 பட்டாசு ஆலைகள் மூன்று மாதத்திற்கு மேலாக இயங்கவில்லை. எட்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை இன்றி சிரமப்படுகின்றனர்.இதையடுத்து பட்டாசு தொழிலாளர்கள் விற்பனையாளர்கள் உற்பத்தியாளர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் கஞ்சித் தொட்டி திறப்பு மனிதச் சங்கிலி என போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பசுமை பட்டாசு குறித்த தவறான தகவலை வாபஸ் பெற வேண்டும் பட்டாசு தொழிலில் பேரியம் உப்பு தடையை மத்திய சுற்றுச்சூழல் துறை நீக்க வேண்டும் சரவெடி தயாரிக்க அனுமதிக்க வேண்டும் 95 நாட்களாக வேலை இழந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குழுவினர் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பட்டாசு உற்பத்தியாளர்கள் வணிகர்கள் விற்பனை பிரதிநிதிகள் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.ஒரு வேளைசாப்பாட்டுக்கே சிரமம்சுதா, பட்டாசு தொழிலாளி, சிவகாசி: கடந்த 8 ஆண்டுகளாக பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இந்த தொழிலை நம்பித்தான் எங்கள் வாழ்க்கையே உள்ளது. தொழில் இல்லாமல் குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவ செலவிற்கும் வழியில்லை. தற்காலிகமாக நிவாரண தொகை வழங்கினால் மட்டுமே தப்ப முடியும். ஒரு வேளை சாப்பிடுவதே சிரமமாக உள்ளது.கடனை கட்ட முடியவில்லைகாஞ்சனா, பட்டாசு தொழிலாளி, சிவகாசி: 3 மாதத்திற்கும் மேலாக வேலை இல்லாமல் சிரமப்படுகிறோம். மகளிர் குழுவில் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதே நிலை தொடர்ந்தால் பிழைப்புக்கு வேறு வழி தெரியவில்லை. எங்களின் வலி வேதனையை புரிந்து விரைவில் பட்டாசு ஆலைகளை இயக்க வேண்டும்.ஜெ., கருணாநிதிஇருந்திருந்தால்ராஜலட்சுமி, தொழிலாளி, ஏ.லட்சுமியாபுரம்: ஜெயலலிதா கருணாநிதி இருந்திருந்தால் பட்டாசு தொழிலாளர்களுக்கு இந்த நிலை வந்திருக்காது. இனியும் போராட்டம் இல்லாமல் இப்பிரச்னை சரி செய்யப்பட வேண்டும். நீதிபதி ஆட்சியாளர்கள் எங்களின் ஒருநாள் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் பரிதாப நிலை தெரியும்.ஓட்டளிக்கும் எண்ணமே இல்லைபட்டாசு தொழில் சம்பந்தமாக 3 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தை நாடினோம். நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. நிபந்தனைகளை தளர்த்த உச்சநீதிமன்றம் தயாராக இல்லை. 'சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம்' என தமிழக அரசு கூறியிருந்தது. பின் 'அதற்கு அவசியமில்லை' என கூறிவிட்டது. நடப்பு சட்டசபை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் எங்களது பிரச்னையை கேட்க ஆளில்லை. விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு பெற உள்ளார். புதிதாக வருபவருக்கு மீண்டும் விளக்க வேண்டும். சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்குள் அடுத்த தீபாவளியே வந்து விடும் போலும். லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்கும் எண்ணமே இல்லை.- மாரியப்பன், பொதுச்செயலர்பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம்ஒவ்வொரு நாளும் நரக வேதனைபட்டாசு தொழிலை பாதுகாக்க தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதன்படி இன்று (நேற்று) முதல் 3 நாட்களுக்கு தொடர் போராட்டம் நடக்கிறது. வங்கியில் கடன் வாங்கித்தான் தொழில் செய்கிறோம். தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளையும் கழிப்பதே நரக வேதனையாக உள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்ற உச்சநீதி மன்றம் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- இளங்கோவன், தலைவர்பட்டாசு வணிகர் சங்கம் சிவகாசி