திருப்பூர்:சுகாதாரமற்ற பாணி பூரி உணவு தயாரிப்பு குறித்து, உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்ய வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், எவ்வித அனுமதியும் பெறாமல், சுகாதாரமற்ற பாணி பூரி கடைகள் அதிகரித்துவிட்டன. ரோட்டோரமாக, துாசு, புகை படர்ந்த பகுதியில், பாணி பூரி கடைகள் உள்ளன.
நமது உணவு கலாச்சாரத்துக்கு எதிரான பாணி பூரி எங்கிருந்து தயாராகி வருகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.பாணி பூரி மொத்தமாக எங்கு தயாராகிறது என்பதும் தெரியவில்லை. சுகாதாரமாக தயாராகிறதா என்பதை, உணவு பாதுகாப்புத்துறை விசாரிக்க வேண்டும். வடமாநில இளைஞர்கள், கைகளை சுத்தமாக வைக்காமலேயே, வியாபாரம் செய்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில், கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில், 'குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவியர் பாணி பூரி அதிகளவில், சாப்பிடுகின்றனர். இந்த சுகாதாரமற்ற உணவால், உடல்நிலை பாதிக்கிறது. பலமுறை பயன்படுத்தி எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால், உடல் ஆரோக்யம் கெடுகிறது. பக்கவிளைவை ஏற்படுத்தும் உணவு வகைகளை தடுக்க வேண்டும்,' என்று குறிப்பிட்டுள்ளனர்.