'முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணையை, தமிழக அரசின் ஒப்புதல் மற்றும் அனுமதி இல்லாமல் கட்ட மாட்டோம்' என, கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
தமிழக - கேரள எல்லையில், கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது, முல்லைப் பெரியாறு அணை.
அரசு அனுமதி:
இந்த அணைக்கு பதிலாக புதிய அணையைக் கட்டுவதற்கான முயற்சியில், கேரள அரசு ஈடுபட்டது. புதிய அணை கட்டுவது தொடர்பாக, சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்வதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவதுாறு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம், 2014ல் தீர்ப்பு அளித்தது. 'இந்த அணைக்கு மாற்றாக, புதிய அணை கட்டக் கூடாது' என, அந்த தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதான இல்லை' எனக் கூறி, புதிய அணை கட்டும் முயற்சியில், கேரளா ஈடுபட்டுள்ளது.
புதிய அணையை கட்டுவதற்கான திட்டத்தை, மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த திட்டத்துக்கான முதற்கட்ட, சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இது, 2014ல், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது. அதனால், கேரளா மற்றும் மத்திய அரசு மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அணை கட்டுவதற்கு, அனுமதி அளிக்கக் கூடாது என, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழக அரசு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை, நீதிபதிகள், ஏ.கே. சிக்ரி, அப்துல் நசீர் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், கேரள அரசு சார்பில்,
மூத்த வழக்கறிஞர், ஜெய்தீப் குப்தா, நேற்று வாதிட்டதாவது: முல்லைப் பெரியாறில், புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கவில்லை.
சாத்தியக்கூறுகள்:
புதிய அணை கட்டுவது தொடர்பான, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வுகள், சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழக அரசின் ஒப்புதல் மற்றும் அனுமதி பெறாமல், முல்லைப் பெரியாறில் அணை கட்ட மாட்டோம். இவ்வாறு அவர் வாதிட்டார். இதையடுத்து, இந்த வாதத்தை பதிவு செய்த உச்ச நீதிமன்ற அமர்வு, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாக கூறியுள்ளது.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (10)
Reply
Reply
Reply