பட்டிமன்றம்... ஒரு பரவசம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பட்டிமன்றம்... ஒரு பரவசம்!

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement

பட்டிமன்றம் என்ற ஒரு துறை தமிழ் மொழிக்கே உரியது. எதிர்மறையான இரண்டு கருத்துக்களை எடுத்துக் கொண்டு, விவாதப் பொருளாக்கி முடிவில் எது சிறந்தது என்று தீர்ப்பளிக்கப்படும். ஒரு நடுவர் இருப்பார். இரு அணிகளிலும் தேவையான பேச்சாளர்கள் இருப்பார்கள். வாதங்களும், மோதல்களும் சூடுபறக்கும். பின்னர் தீர்ப்பு இடம்பெறும்.பட்டிமன்றம் பற்றி தமிழ் இலக்கியத்தில் குறிப்புகள் இருந்தாலும் அதனை வளர்த்து செழுமைப்படுத்தியவர் குன்றக்குடி அடிகள் (பெரியவர்). அவர் தலைமையில் பேசியவர்களே பெரும் பேச்சாளர்கள் ஆனார்கள். அவர் பட்டிமன்றத்திற்கு ஒரு இலக்கணம் சொல்வார்:“கருத்து மோதல்களும், எதிர்வாதங்களும் இருக்க வேண்டும். ஆனால் அவை வாளும் வாளும் உரசுவது போல் இல்லாமல் கனியும் கனியும் மோதுவது போல் அமைய வேண்டும். அப்போதுதான் தீப்பொறியில்லாமல் தீந்தமிழ் அமுதம் கிடைக்கும்”.அவரது பட்டிமன்றப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்களில் நானும் ஒருவன். எனக்கு பட்டிமன்றத்தில் ஏற்பட்ட சில சுவையான தகவல்களைத் தொகுத்துத் தருகிறேன்.வரலாற்றுப் பட்டிமன்றம்பல ஆண்டுகளுக்கு முன் தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழன் சதய விழா. நடுவர் குன்றக்குடி அடிகள்.தலைப்பு: ராஜராஜ சோழனின் பெருமைக்கும் புகழுக்கும் பெரிதும் காரணம் குந்தவையா? வந்தியத்தேவனா? அந்தக் காலத்தில் தலைப்பு பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். குந்தவை, ராஜ ராஜ சோழனின் தமக்கை. வந்தியத்தேவன் தோழன். இருவருமே ராஜ ராஜனின் பெருமைக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் கூடுதலாக செயல்பட்டவர்கள் யார்? என்பதே பட்டிமன்றம். மொத்தத்தில் ராஜ ராஜ சோழனின் வரலாற்றை அலசுவதுதான் நோக்கம்.'குந்தவையே' என்ற அணிக்கு மூன்று பெண் பேராசிரியர்கள் பேசினார்கள். வந்தியத்தேவன் அணிக்கு நான் தலைமை. இன்னும் இரண்டு பேச்சாளர்கள். வாதங்கள் தொடங்கின. குந்தவை அணிக்குத் தலைமையேற்ற பெண் பேராசிரியர் அழகாகப் வாதாடினார். நிறைவாக அவர் வைத்த வாதம் வலிமையானது.“தனது பெருமைக்கும் புகழுக்கும் பெரிதும் காரணமாக அமைந்தவர் தமக்கை குந்தவை என்பதை உணர்ந்ததால்தான், ராஜ ராஜ சோழன் தனது மகளுக்கு குந்தவை என்று பெயர் வைத்தார்”. அரங்கம் கரவொலி செய்தது. அடுத்து எழ வேண்டும். என்ன செய்யப் போகிறாய் என்பதைப் போல என்னைப் பார்த்து பேச அழைத்தார் அடிகளார்.இந்த வலிமையான வாதத்தை முறியடிக்காமல் நான் என்ன பேசினாலும் எடுபடாது. இதுவும் அடிகள் சொல்லிக் கொடுத்த பாடம்.“ராஜ ராஜ சோழன், தன் மகளுக்கு, தமக்கையின் பெயரான குந்தவை என்று வைத்தது உண்மைதான். இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பிறந்தது பெண் குழந்தை. அதற்கு குந்தவை என்று பெயர் வைக்காமல் வந்தியத்தேவன் என்றா வைக்க முடியும்? ஒரு வேளை பிறந்தது ஆண் குழந்தையாக இருந்தால் வந்தியத்தேவன் என்று பெயர் வைத்திருக்கலாமே!” அரங்கம் ஆமோதித்து கரவொலி செய்தது.சுழலும் சொல்லரங்கம்பட்டிமன்றத்தில் இன்னொரு பகுதிதான் சுழலும் சொல்லரங்கம். ஒரு தலைப்பை மூன்று கோணங்களில் ஆராய்வது. உதாரணத்துக்கு மனித வாழ்க்கையை நடத்துவது விதியா, மதியா, நிதியா? ஒவ்வொரு தலைப்பில் ஒருவர் பேசுவார். இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் வரும். ஒரு விஷயம் எப்படி சுற்றி வருகிறது பாருங்கள்.விதிதான் வாழ்க்கையை நடத்துவது என்பதற்கு அந்த பேச்சாளர் ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுவார். ஒருவர் சென்னை கலெக்டர் ஆபிசில் கிளர்க்காக வேலை பார்த்தார். மனைவி நாகர்கோவில் கலெக்டர் ஆபிசில் வேலை பார்த்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு கணவர் நாகர்கோவில் கலெக்டர் ஆபிசுக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்தார். பலனில்லை. சில மாதங்கள் கழித்து மனைவியை சென்னைக்கு மாறுதலுக்கு விண்ணப்பிக்கச் சொன்னார். அதற்கும் பலனில்லை. மாவட்ட ஆட்சியர் மாறுதல் நடந்தது. சென்னைக்கு வந்த ஆட்சித்தலைவர் மிகவும் சுறுசுறுப்பானவர். பரிசீலிக்கப்படாமல் இருந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தார். நாகர்கோவிலுக்கு மாறுதல் கேட்டவருக்கு உடனடியாக ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதுபோலவே நாகர்கோவில் மாவட்ட ஆட்சித் தலைவரும் சுறுசுறுப்பானவர். சென்னைக்கு மாறுதல் கேட்ட பெண்ணுக்கு அன்றே ஆர்டர் போடப்பட்டது. இப்போது கணவன் நாகர்கோவிலுக்கும் மனைவி சென்னைக்கும் புறப்பட வேண்டிய கட்டாயம். இதுதான் விதியின் விளையாட்டு.இதற்கு மதி அணிக்குப் பேசுகிறவர் மறுப்புச் சொல்வார். அதற்குக் காரணம் விதி அல்ல. மடத்தனம். ஆண்டவன் மூளையோடு மனிதனைப் படைத்திருக்கிறார். அதைப் பயன்படுத்த வேண்டும். ஒருவர் கொடுத்த விண்ணப்பத்துக்குப் பலன் இல்லாமல் போகும்போது, தனது மனைவியை விண்ணப்பிக்கச் சொல்லுவதற்கு முன்னால் தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். அப்படி புத்திசாலித்தனமாக முயற்சி செய்திருந்தால் இந்த சிக்கல் நேர்ந்திருக்காது என்று விளக்குவார்.நிதி அணிக்குப் பேசுகிறவர் சொல்லுவார். “இருவர் சொல்வதும் தவறு. நிதியின் வலிமையை மறந்து விட்டார்கள். சென்னையில் வேலை பார்த்த கணவன் விண்ணப்பத்தை கொடுக்கும் போதே ஐம்பதாயிரம் கட்டு ஒன்றை சேர்த்துக் கொடுத்திருந்தால் மாறுதல் உடனே கிடைத்திருக்குமே! தீர்ப்புஎல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு நடுவர் தெளிவாக தீர்ப்பு சொல்ல வேண்டும். அதற்கு ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பிறப்பிலிருந்து ஆரம்பிப்பார். பல்வேறு விதமாக குழந்தைகள் பிறப்பதற்கும், ஏழை வீட்டிலும் பணக்காரர்கள் வீட்டிலும் குழந்தைகள் பிறப்பதற்கு அவர்கள் முற்பிறவியில் பாவ புண்ணியங்களுக்குத் தக்கபடி அமைகிறது என்று இந்துமதம் சொல்கிறது. ஜாதகத்திலும் கிரகங்கள் 12 வீடுகளில் அமைகிற முறையும் இதன் அடிப்படையில்தான். அதுவே தலைவிதி என்று சொல்லப்படுகிறது. ஆக குழந்தை பிறப்பில் முன் ஜென்ம தொடர்பு உண்டு.அதுபோல குழந்தை தலையில் மூளையோடு பிறக்கிறது. ஆனால் கையில் பணத்தோடு பிறப்பதில்லை. எனவே அந்த அணியை விலக்கிவிடலாம். இனி, விதிக்கும் மதிக்கும்தான் போட்டி.விதி வலியதுதான். அதை அப்படியே விட்டுவிட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியாது. விதியை மதியால் வெல்வதே வாழ்க்கை. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அத்தனையும் மதியின் ஆற்றல்தானே. வயதானால் கண் பார்வை மங்கும் என்பது விதி. கண்ணாடி போட்டுக் கொள்வது மதி. அதனால்தான், “தெய்வத்தால் ஆகாதெனினும் ↔முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்” என்று திருவள்ளுவர் உறுதியான கருத்தைப் பதிவு செய்கிறார்.எனவே நம்பிக்கையோடும் முயற்சியோடும் விதியை வென்று சாதனைகள் படைப்போம் என்று நடுவர் நிறைவுரையில் கூறுவார்.--- முனைவர் இளசை சுந்தரம்பேச்சாளர், மதுரை98430 62817

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-பிப்-201904:03:37 IST Report Abuse
Bhaskaran அந்தக்கால பட்டிமன்றத்தில் இளம்பிறை மணிமாறன் சத்திய சீலன் போன்றோர்களின் உரைகளை கேட்டு ரசித்துள்ளேன் தற்போது கருத்துக்கள் குறைந்து நகைச்சுவைதான் அதிகமாகியுள்ளது என்பது என்கருத்து
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X