கோவை:தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, சுகாதார துறை சார்பில், 12.11 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.இந்தாண்டு, கடந்த 8ம் தேதி தேசிய குடற்புழு நீக்க தினம் அனுசரிக்கப்பட்டது.இதன் ஒரு பகுதியாக, சுகாதார துறை சார்பில் ஒன்று முதல், 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, குடல்புழு நீக்க மருந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மாவட்ட சுகாதார துறை சார்பில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, காலை மற்றும் மதிய உணவுக்குப் பின், குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி கூறுகையில், ''மாவட்டத்தில் உள்ள, 2,500 க்கும் அதிகமான பள்ளிகள், அங்கன்வாடி மையங்களை சேர்ந்த, 13 லட்சம் குழந்தைகள், மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில், இம்மாத்திரை முதற்கட்டமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, வரும் 14ம் தேதி இரண்டாம் கட்டமாக இம்மாத்திரை பள்ளி, அங்கன்வாடிகளில் வழங்கப்படும். முதல் நாளன்று, 12.11 லட்சம் குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கப்பட்டது. இதனால் ரத்தசோகை வராமல் தடுக்க முடியும்,'' என்றார்.