கலெக்டர் அலுவலகத்தில், மக்களுக்கு நேரடி செயல்விளக்கம் அளித்து, 'விவி- பேட்' பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்திய தேர்தல் கமிஷன், வாக்காளர்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில், 'விவி - பேட்' இயந்திரங்களை, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. வாக்காளர், தாங்கள் தேர்வு செய்து ஓட்டளித்த வேட்பாளருக்கு, சரியாக ஓட்டுப்பதிவானதை உறுதி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 'விவி -பேட்'யுடன் இணைந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பி, மக்களுக்கு நேரடி செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளில், 42 'மொபைல்' விழிப்புணர்வு வாகனங்கள், ஓட்டுச்சாவடிகளை தேடி சென்றுள்ளன.முதல்கட்ட பிரசார சுற்றுப்பயணம், கடந்த, 9ம் தேதி துவங்கியது. இந்நிலையில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்ததால், கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று சிறப்பு முகாம் அமைத்து, மக்களுக்கு நேரடி செயல்விளக்கம் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மனு கொடுக்க நீண்ட வரிசையில் சென்ற, 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், ஆர்வமாக சென்று ஓட்டளித்தனர். ஓட்டுச்சாவடி மையம் போல் அமைக்கப்பட்டிருந்த பகுதியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டளித்து, அதன் விவரத்தை, 'விவி-பேட்' மூலமாக பார்த்து உறுதி செய்துகொண்டனர்.முகாமை, கலெக்டர் பழனிசாமி துவக்கி வைத்து, துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தார். தொடர்ந்து, 'விவி- பேட்' கருவியின் அவசியம் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து, கலெக்டர் விளக்கினார். -நமது நிருபர்-