காஞ்சிபுரம்:காச நோய் மற்றும் எச்.ஐ.வி.,நோய்களை கண்டறியும் கருவிகள் கொண்ட நடமாடும் மருத்துவ குழு வாகனங்களை, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா நேற்று துவக்கி வைத்தார்.உலகின் காச நோயாளிகளில், நான்கில் ஒரு பங்கு, இந்தியாவில் உள்ளனர். இந்த நோயை, 2025க்குள் ஒழிப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில், காசநோய் மற்றும் எச்.ஐ.வி., நோயை கண்டறியும் கருவிகள் கொண்ட இரு வாகனங்களை, மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.மருத்துவ குழுவுடன் செல்லும் இந்த வாகனம், 16ம் தேதி வரை, மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.காசநோய் மற்றும் எச்.ஐ.வி.,ஆகியவற்றை குறைந்த நேரத்தில் கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் இந்த நடமாடும் மருத்துவ குழுவை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.