எண்ணுார்:எண்ணுாரில் கோலாகலமாக நடைபெற்ற, 'கலைத் தெருவிழா' நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் குறித்த சிறுவர்களின் வில்லுப்பாட்டு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.எண்ணுார் அனைத்து கிராமம் மற்றும், 'சென்னை கலைத் தெருவிழா' குழு சார்பில், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், கத்திவாக்கம் பஜாரில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்டது.காட்டுக்குப்பம் கிராமத்தில் இருந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பறை இசைத்த படி, விழாக்குழுவினர் ஊர்வலமாக அணிவகுத்தனர். பின், மேடையில், அரை மணி நேரத்திற்கும் மேலாக, விதவிதமாக பறையிசைத்தபடி, போட்டி நடனமாடினர். விண்ணதிர்ந்த பறையிசை முழக்கத்தால், கூடியிருந்த மக்கள் ஆராவாரம் செய்தனர்.இதைத் தொடர்ந்து, குழுவினரால் பயிற்சியளிக்கப்பட்ட, அப்பகுதியைச் சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட சிறுவர்களின், வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எண்ணுார் சாம்பல் கழிவு, முகத்துவாரம் அடைபடுதல், ஆற்றின் வழித்தடம் குறுக்கிடுதல் போன்ற, சுற்றுசூழல் சார்ந்த பிரச்னைகளை மையப்படுத்தி, சிறுவர்கள் வில்லுப்பாட்டு பாடி அசத்தினர்.வித்தியாசமான முறையில், நையாண்டி கலந்த சிறுவர்களின் வில்லுப்பாட்டு, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, தோல்பாவை கூத்து, கர்நாடக இசை கச்சேரி உள்ளிட்ட, பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.'இப்பகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை கலை வடிவில் எடுத்துரைக்கும் விதமாக, இந்த நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டது. இந்த கலைத் தெருவிழா வாயிலாக, அந்த பிரச்னையின் தீர்வுக்கு வழி பிறக்கும் என நம்புகிறோம்' என, விழா ஒருங்கிணைப்பாளர்கள் குறிப்பிட்டனர்.