தாம்பரம் குப்பை கிடங்கிற்கு விரைவில் விடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் குப்பை கிடங்கிற்கு விரைவில் விடிவு

Added : பிப் 12, 2019
Advertisement

-- நமது நிருபர்- --தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட, கன்னடபாளையத்தில் தேங்கி உள்ள குப்பையை, 'பயோ மைனிங்' முறையில் பிரிக்கும் பணிகள், விரைவில் துவங்க உள்ளன.தாம்பரம் நகராட்சியில் உள்ள, 39 வார்டுகளில், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதிகளில், தினமும், 100 டன் குப்பை உருவாகிறது.குப்பை, கன்னடபாளையம் கிடங்கில், 50 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், 2016 திடக்கழிவு மேலாண்மை விதிப்படி, குப்பை கிடங்கில்லா நகராட்சியாக அறிவிப்பதற்காக, நகராட்சியின் ஏழு இடங்களில், நுண் உர செயலாக்க மையங்கள் துவங்கப்பட்டன.அங்கு, குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, கிடங்கிற்கு குப்பையை எடுத்துச் செல்வது நிறுத்தப்பட்டது.கன்னடபாளையத்தில் உள்ள குப்பையை, பயோ மைனிங் முறையில் பிரிப்பதற்காக, 7.46 கோடி ரூபாய் மதிப்பில், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஓராண்டுக்கு முன் பணி ஆணை வழங்கப்பட்டது.ஆனால், தற்போது வரை அதற்கான பணிகள் துவங்கவில்லை. இதற்கு, தனியார் நிறுவனத்திடம், நகராட்சி அதிகாரிகள், 'கமிஷன்' கேட்டதே காரணம் என, புகார் எழுந்துள்ளது.இது குறித்து, நகராட்சி ஊழியர் ஒருவர் கூறியதாவது:ஒப்பந்தத்தின் படி, கன்னட பாளையத்தில் குவிந்துள்ள, 1.45 லட்சம் டன் குப்பையை, இரண்டு ஆண்டுகளுக்குள் பிரித்து, அந்த நிலத்தை, நகராட்சியிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக, பயோ மைனிங் இயந்திரங்களை பொருத்த, குப்பை கிடங்கு அருகிலேயே, அரை ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.அந்த நிலத்தின் உரிமையாளர், நிலத்திற்கு வாடகை கேட்டார்; நகராட்சி அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. அதே நேரம், ஒப்பந்தத்தை எடுத்த தனியார் நிறுவனத்திடம், குறிப்பிட்ட தொகையை, கமிஷனாக நகராட்சி அதிகாரிகள் கேட்டனர்.அந்நிறுவனம் சம்மதிக்காததால், குப்பை கிடங்கிற்கு மேல், உயர் அழுத்த மின் கம்பிகள் செல்வதாகவும், அங்கு பணிகளை துவக்கினால், விபத்து ஏற்படும் எனவும் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், திட்டத்தை கிடப்பில் போட்டனர்.இதனால், 150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தில், குப்பை தேங்கி வீணாக கிடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நிர்வாக காரணங்களால், குறித்த நேரத்தில் பணிகளை துவக்க முடியவில்லை. பயோ மைனிங் தொழில்நுட்ப இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள், கோவையில் நடந்து வருகின்றன.ஓரிரு வாரங்களில், குப்பை பிரிக்கும் பணிகள் துவங்கப்படும். இதில் கிடைக்கும், விற்பனை செய்ய முடியாத பிளாஸ்டிக் குப்பையை வைத்து, 'பைராலைசிஸ்' முறையில், எரிபொருள் தயாரிக்க உள்ளோம்.கிடங்குள்ள பகுதியில், குப்பையை முழுமையாக அகற்றிய பின், பூங்கா மற்றும் நகராட்சி நிர்வாகம் தொடர்புடைய, பயிற்சி கூடம் கட்ட முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.'‛பைராலைசிஸ்' முறை என்றால் என்ன?'பைராலைசிஸ்' முறையில், 20 டன் கொள்ளளவுள்ள பெரிய குடுவைக்குள், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டு, 900 டிகிரி செல்ஷியசில் சூடுபடுத்தப்படும். அதில் இருந்து, எண்ணெய் தனியாகவும், 'தார்' தனியாகவும் பிரிக்கப்படும்.தாரை, நிலக்கரிக்கு மாற்றான எரிபொருளாக, நீராவி இன்ஜின் மற்றும் சர்க்கரை ஆலை போன்றவற்றில் பயன்படுத்தலாம். இத்திட்டம், செங்கல்பட்டிற்கு அடுத்து தாம்பரம் நகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X