காரைக்குடி:புதுவயல், பள்ளத்துார் அரிசி ஆலைகளுக்கு டெல்டா மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து நெல்வரத்து தொடங்கியுள்ளதால் அரிசி விலை குறைய தொடங்கியுள்ளது.காரைக்குடி அருகே உள்ள புதுவயல், பள்ளத்துாரில் 50-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. ஆண்டு முழுவதும் அரவை இருந்தாலும் நெல் வரத்து ஜனவரி முதல் ஏப்ரல் வரையே இருக்கும். இரண்டு ஆண்டுகளாக போதிய வரத்து இல்லாததால் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து அதிக விலை கொடுத்து நெல்லை வாங்கி அரைத்து வந்தனர். நடப்பாண்டில் காவிரியில் ஏற்பட்ட வெள்ள பெருக்காலும், வட மாவட்டங்களில் பெய்த மழையாலும் விளைச்சல் அதிகரித்தது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மட்டுமன்றி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், ஆரணி என பல இடங்களிலிருந்தும் நெல் வரத்து தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 600 டன் வரை வரத்து உள்ளது. 62 கிலோ டீலக்ஸ் நெல் மூடை 1150-ஆகவும், கல்சர் ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.ஒரு கிலோ டீலக்ஸ் அரிசி ரூ.38 லிருந்து 36 ரூபாயாக குறைந்துள்ளது.அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணன் : நடப்பாண்டில் நெல் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் ஆந்திரா, கர்நாடக ரகங்களை வாங்குவதை பெருமளவில் குறைத்துள்ளோம். ஆன்லைன் முறையிலும் அரிசி விற்பனையை தொடங்கியுள்ளோம்.