என்ன பயிர் செய்வது என விவசாயிகள் குழப்பம்!காய்கறிகள் விலை தொடர்ந்து வீழ்ச்சி| Dinamalar

தமிழ்நாடு

என்ன பயிர் செய்வது என விவசாயிகள் குழப்பம்!காய்கறிகள் விலை தொடர்ந்து வீழ்ச்சி

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (1)
என்ன பயிர் செய்வது என விவசாயிகள் குழப்பம்!காய்கறிகள் விலை தொடர்ந்து வீழ்ச்சி

கடலுார்:நெல் அறுவடைக்கு பின், காய்கறிகள் விலை மார்க்கெட்டில் வீழ்ச்சி அடைந்திருப்பதால், அடுத்தது என்ன பயிர் செய்வது என தெரியாமல் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சம்பா பருவத்தில், 2 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது.

உபரியாக வந்த காவிரி தண்ணீர், பருவ மழை போதியளவு கிடைத்ததால் நல்ல விளைச்சல் ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.

காவிரி டெல்டா பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் ஏற்கனவே உளுந்து விதைத்துள்ளனர். ஆனால் நிலத்தடி நீர் உள்ள பகுதிகளான கடலுார், குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம், விருத்தாசலம், பண்ருட்டி பகுதிகளில் அறுவடை முடிந்தவுடன் காய்கறி, மலர் சாகுபடி செய்வது வழக்கம்.இந்த ஆண்டு மேற்கு பகுதியில் போதியளவு மழை பெய்ததால், சேலம், ஈரோடு, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் காய்கறி பயிர்கள் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளன. இதனால் காய்கறிகள் விலை மார்க்கெட்டில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
வெங்காயம் கிலோ 10 ரூபாய்க்கு வீடு தேடி வருகிறது. கத்தரி, முள்ளங்கி, அவரை, தக்காளி, போன்ற காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. தக்காளி கிலோ ரூ.14, பச்சைமிளகாய் 18, அவரை 20, முள்ளங்கி 12 ரூயாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் சில்லரை விலை இது. மொத்த கொள்முதல் விலை இன்னும் குறைவாக இருக்கும்.அதே போல், அதிகளவு மலர் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக கேந்தி, ரோஜா, கோழிக்கொண்டை போன்றவையும் மிக குறைவான விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.காய்கறிகள் காய்க்க துவங்கும்போதே இந்த விலை வீழ்ச்சி என்றால், விளைச்சல் அதிகமாக இருக்கும் நாட்களில், அதாவது எல்லா பகுதிகளிலும் காய்கறி அறுவடை செய்யும்போது, இதன் விலை இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் நெல் அறுவடை செய்துள்ள நிலத்தில், லாபம் தரக் கூடிய எந்த பயிரை மாற்றாக செய்யலாம் என விவசாயிகள் குழம்பி போய் உள்ளனர்.
இது குறித்து கடலுாரை சேர்ந்த விவசாயி சுப்ரமணி கூறுகையில் ' சேலம், ஈரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து, நல்ல விளைச்சல் காரணமாக வரத்து அதிகரித்துள்ளது. இங்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இப்பகுதியில் கூலி அதிகமாக இருப்பதாலும், தொழிலாளர்கள் வேலைக்கு வராததாலும் உற்பத்தி செலவு அதிகமாகிறது. தற்போது மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை உற்பத்தி செலவுக்கு கூட கட்டுப்படியாகாது' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X