சிதம்பரம்:சிதம்பரத்தில் சிவகாம சுந்தரி அம்மன் கோவில், குமரக்கோட்டம் செல்வமுத்துக் குமார சுவாமி கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் சிவகங்கை குளம் மேல் கரையில் வடக்கு கோபுரம் அருகில் உள்ள சிவகாம சுந்தரி அம்மன் கோவில் மற்றும் மேலக்கோபுரம் அருகில் உள்ள குமரகோட்டம் செல்வமுத்துகுமார சுவாமி கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இரு கோவில்களுக்கும் யாகசாலை பூஜைகள் கடந்த 4ம் தேதி துவங்கி, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, தன பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. 8ம் கால யாகசலை பூஜைகள் பூர்ணாகிதி மகா தீபாராதனைகள் நடந்தது.நேற்று காலை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று, காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு செய்து, சிவகாமசுந்தரி அம்மன் சன்னதி, கோபுரம், விநாயகர், முருகர், சப்தமாதா உள்ளிட்ட 9 சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.அதேபோல், குமரகோட்டம் கோவிலிலும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இரவு சிவகாமசுந்தரி அம்மன் மற்றும் வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமார சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்று, வீதி உலாக்காட்சி நடந்தது.